Skip to content
Advertisements

அவனும் கால்பந்தும் – சத்யா GP

வனுக்கும் கால்பந்தாட்டத்திற்குமான பந்தம் 1986 ஆம் ஆண்டில் துவங்கியது. அப்போது அவன் பாலகன். வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. ஒரு தனியார் நிறுவனத்தின் குடியிருப்பு வீடுகளில் வசித்து வந்தான். கீழ் தளத்தில் வரிசையாக பதினான்கு வீடுகள். அதற்கு மேல் தளத்தில் அதே போல் வரிசை கட்டி பதினான்கு வீடுகள். மேலே அவன் அண்ணனின் நண்பனான ரமேஷ் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி உண்டு, அங்கு போய் ரூபவாஹிணியில் (இலங்கை தொலைக்காட்சி சேவை நிறுவனம்) லேண்ட் ஆஃப் தி ஜெயிண்ட்ஸ், மங்கி, நைட் ரைடர் போன்ற வாரம் ஒரு நாள் ஒளிபரப்பாகும் ஆங்கிலத் தொடர்களைத் தவறாமல் பார்ப்பான்.

 

1986 ஆம் ஆண்டில் தான் டிவியில் “கிரிக்கெட் பார்க்க” ஆரம்பித்தான். அப்போது இந்திய தூர்தர்ஷனில் அயல்நாட்டில் இந்தியா விளையாடும் போட்டிகளை இரவில் ஒரு மணி நேரம் தொகுத்து வழங்குவார்கள். ஆம் ஹைலைட்ஸ்! இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் பாரதத்தின் திலீப் வெங்சர்க்கார் அடுத்தடுத்து இரண்டு அசத்தலான சதங்கள் அடித்து இங்கிலாந்து மண்ணில் இந்தியா கிரிக்கெட் டெஸ்ட் தொடரை வெல்லக் கர்த்தாவாக இருந்தார். டேவிட் காவர் என்னும் இடது கை இங்கிலாந்து ஆட்டக்காரர் மீது அபிமானம் கொண்டவனாகவும் அதைத் தொடர்ந்து இடது கை ஆட்டக்கார்கள் மீது மிகுந்த ஈடுபாடு காட்டும் ஆளாகவும் மாறிப்போனான். அதே வருடத்தில் தான் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவும் கோலாகாலமாக மெக்ஸிகோவில் நடந்தது.

 

கால்பந்தைப் பொறுத்த வரை அவன் முதன் முதலாகப் பழகிய அணி : அர்ஜெண்டினா, வீரர் : மரடோனா ஆனால் அந்த உலககோப்பை கால்பந்து போட்டிகளை அவனால் டிவியில் பார்க்க முடியவில்லை. ஹிந்து பேப்பரில் எந்த அணி வென்றது, டிரா செய்தது என்ற விஷயங்களைப் படித்து தெரிந்து கொள்ளுவான். அர்ஜெண்டினா வெற்றி, அர்ஜெண்டினா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி, காலிறுதிக்கு முன்னேறியது, அரை இறுதியில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது என ஒவ்வொன்றையும் படித்தே தெரிந்து கொண்டான். அரை இறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் “கடவுளின் கரங்கள்” மூலம் மரடோனா அடித்த கோலைக் கூட அவன் ஆங்கில தினசரியில் படித்தே தெரிந்து கொண்டான். கடவுளின் கரங்கள் மூலம் மரடோனா அடித்த கோலைக் காண இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=-ccNkksrfls

 

இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி (அப்போது ஜெர்மனி இணையவில்லை) அர்ஜெண்டினா கோப்பையை வென்றது. அந்த தொடரில் மரடோனா ஃபுல் ஃபார்மில் இருந்தார். இறுதிப் போட்டியில் அவரை கோல் அடிக்க விடாமல் மேற்கு ஜெர்மனி வீரர்கள் வியூகம் அமைத்தனர். அதை மரடோனாவும் பிற அர்ஜெண்டினா வீரர்களும் தங்களுக்கான வாய்ப்பாக்கிக் கொண்டார்கள். மற்ற வீரர்கள் வடிவாக மூன்று கோல்கள் அடித்து இரண்டாவது முறை தங்கள் தேசம் கோப்பையை வெல்ல காரணமானார்கள். அக்காலகட்டத்தில் கிரிக்கெட்டுக்கு இந்தியா – பாகிஸ்தான், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து, டென்னிஸில் இவான் லெண்டில் – போரீஸ் பெக்கர் போல் கால்பந்து என்றால் மேற்கு ஜெர்மனி – அர்ஜெண்டினா என்றிருந்தது. அதன் பின்பு கிரிக்கெட், டென்னிஸ் போல் கால்பந்தும் அவனின் விருப்ப விளையாட்டாக மாறிப் போனது.

 

1990 ஆம் ஆண்டு மெக்ஸிகோவிலிருந்து இத்தாலிக்கு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இடம் பெயர்ந்தது போல் அவனும் அந்தக் குடியிருப்பிலிருந்து திருச்சிக்கு ஜாகை மாறியிருந்தான். தனி வீடு. போட்டிகளை வீட்டு டிவியில் பார்க்க முடிந்தது.

அனைவரும் இத்தாலி வெற்றி பெறும் என பந்தயம் கட்ட அவன் மனதில், “இந்த முறை அர்ஜெண்டினா வெல்லாது, மேற்கு ஜெர்மனி பழி தீர்க்கும்” என்று நினைத்தான்.

 

லீக் போட்டிகளில், விளையாடிய மூன்றிலும் வென்று இத்தாலி காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. கேமரூன் அணியைக் கண்டு அனைவரும் நடுங்கினார்கள். அப்படியொரு முரட்டுத்தனமான ஆட்டத்தை அது வெளிப்படுத்தியது. குறிப்பாக அர்ஜெண்டினா அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேமரூன் உதை வீரர்கள் பந்தை விட்டு விட்டு மரடோனாவை உதைத்துத் தள்ளினார்கள். அர்ஜெண்டினாவை வீழ்த்தவும் செய்தார்கள். இறுதி லீக் ஆட்டத்தில் சோவியத் யூனியன் (அப்போது ரஷ்யா அல்ல) கேமரூனை ஓட ஓட விரட்டி வீழ்த்தியது. தங்களிடமிருந்து பிரிந்த ருமேனியா அணியிடம் தோற்றது ஆனால் கேமரூனை நான்குக்குப் பூஜ்யம் என்னும் கோல் கணக்கில் வென்றது.

 

திக்கித் திணறி அர்ஜெண்டினா காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. அவ்வணி இடம் பெற்ற பிரிவில் அது மூன்றாவது இடத்தையே பிடித்திருந்தது. அப்போதெல்லாம் இருபத்தி நான்கு அணிகளே உலகக் கோப்பைப் போட்டிகளின் லீக் சுற்றில் விளையாடத் தகுதி பெறும். ஆறு க்ரூப்கள். ஒவ்வொரு க்ரூப்பிலும் நான்கு அணிகள். ஒவ்வொரு க்ரூப்பிலும் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் பன்னிரெண்டு அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தேர்வாகிவிடும். அனைத்து க்ரூப்பிலும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிகளை வரிசைப்படுத்தி புள்ளிகள் அடிப்படையில் நான்கைத் தேர்வு செய்வார்கள். அர்ஜெண்டினா அவ்வாறே தேர்வானது. அவர்களின் ஆட்டம் அத்தொடரில் மெச்சும்படி இல்லை.

 

அந்த உலகக் கோப்பை போட்டிகளில் இன்னொரு கூத்தும் நடந்தது. அப்போதெல்லாம் வெற்றி பெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள், ஆட்டம் டிராவில் முடிந்தால் தலா ஒரு புள்ளிகள் என்றே வரையறை செய்தார்கள். எஃப் பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து எகிப்த் அணியுடன் வெற்றியும் மற்ற இரு அணிகளுடன் டிராவும் செய்து முதல் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது ஆனால் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து என இரு அணிகளும் விளையாடிய அனைத்துப் போட்டிகளையும் டிரா செய்து ஒரு வெற்றி கூட பெறாமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

 

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரேஸிலை ஒன்றுக்குப் பூஜ்யம் என்னும் கோல் கணக்கில் வென்ற அர்ஜெண்டினா, காலிறுதியில் யூகோஸ்லாவியாவை (அப்போது குரோஷியா தேசம் தனியாக உருவாகவில்லை, 1991 ஆம் ஆண்டில் தான் யூகோஸ்லாவியாவிடமிருந்து பிரிந்தது) வீழ்த்தியது. அரை இறுதியில் இத்தாலியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டு போட்டிகளிலும் டை பிரேக்கர் அதிர்ஷ்டத்தின் மூலமாகவே அர்ஜெண்டினா வென்றது. இறுதிப் போட்டியில் ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக ப்ரேஹ்மி பெனால்டி கிக் முறையில் கோல் அடித்து ஜெர்மனியை வெற்றி பெற வைத்தார். ஆட்டம் முடிந்து மேற்கு ஜெர்மனி வீரர்கள் வெற்றியைக் கொண்டாட மரடோனா நொறுங்கிப் போய் கண் கலங்கியதை அவனும் பார்த்தான்.

 

இது தவிர இந்தியாவில் நேரு கோப்பை கால்பந்து போட்டி, சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டிகளும், மோஹன் பகான், ஈஸ்ட் பெங்கால், முஹமதன் ஸ்போர்டிங் க்ளப், கேரளா போலீஸ், சல்கோகர், டாடா ஃபுட்பால் அகடமி போன்ற இந்திய க்ளப் அணிகளும் அவனுக்குப் பரிச்சயமானது. எப்போதும் ஆஸ்திரியா, ஹங்கேரி, கொரியா போன்ற அணிகளுடன் நேரு கோப்பையில் இந்தியா தோற்பதைப் பார்த்துப் பழகிப் போன அவனுக்கு ஒரு முறை ஹங்கேரியுடன் முதல் ஹாஃப் முடிய சில நிமிடங்களுக்கு முன்பு பாப்பச்சன் ஒரு கோல் அடித்து இந்தியா முன்னிலை பெற்றதை ஆச்சர்யத்துடன் கவனித்து பரவசப்பட்டான். அடுத்து இரண்டாவது ஹாஃபில் ஹங்கேரி இரண்டு கோல்கள் அடித்து இந்தியாவை வீழ்த்த மறு நாள் ஹிந்து தினசரியில் “Hungary rallies to beat India by 2 – 1” என்று படித்து மனம் நொந்தான்.

 

1994 ஆம் ஆண்டில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ் சேனல், அதில் ஃபுட்பால் முன்டியால், ஆசியன் ஃபுட்பால் ஷோ என்றெல்லாம் பார்க்க ஆரம்பித்தான். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் போது அவனும் அவனது சகலபாடிகளும் கிரிக்கெட் விளையாடும் டென்னிஸ் பந்தில் கால்பந்து விளையாடி கால்களை ரணமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஃபுட்பால் வாங்கி அதையும் அமெச்சூர்த்தனமாக உதைத்துக் கொண்டாடி இருக்கிறார்கள். போதிய ஆட்கள் இரு புறமும் இல்லாது விளையாடி பந்து கோல் போஸ்ட் பகுதிக்கு வரும் போது விளையாடும் ஒரு ஆள் சமய கோல்கி என்று கூவி பந்தை கையில் பிடித்து கோலாக்காமல் தடுக்கும் “விசித்திர விதிகள்” கொண்ட உதைப்பந்தை விளையாடினார்கள் (சமய கோல்கின்னு சொல்லாமல் பந்தை கையில் எடுத்தால் ஃபெளல்)

 

1994 ஆம் ஆண்டு அவனுக்குப் பிடிக்காத பிரேஸில் கோப்பையை வென்றது. அவனுக்குப் பிடிக்காத இத்தாலி இறுதி ஆட்டத்தில் வீழ்ந்தது ஆனால் அவனுக்கு பிடித்த இத்தாலி வீரர் ராபர்டோ பேஜியோ பெனால்டி கிக் வாய்ப்பைத் தவறவிட்டார். கோல் விற்பன்னர் என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட அவரின் வரலாற்றுப் பிழை அது.  

 

1998 ஆண்டு அவன் கொஞ்சம் மாறிப்போயிருந்தான். உலகக் கோப்பை மட்டுமல்லாது ஸ்பானிஷ் லீக், இங்கிலீஷ் பிரீமியர் லீக், இத்தாலியன் சீரி ஏ என்றெல்லாம் பார்க்க ஆரம்பித்தான்.

 

இத்தாலியன் சீரி ஏ வைப் பொறுத்தவரை மிலன், ஜுவன்டஸ் என பாஜியோ விளையாடிய அணிகள் அவனின் விருப்பமான அணிகளாகின.

 

ஸ்பானிஷ் லீகில் ரியல் மாட்ரிட், இங்கிலீஷ் பிரீமியர் லீக் போன்றவற்றில் அவன் பித்துப் பிடிக்கக் காரணமாய் ஒரு வீரர் இருந்தார். அவர் – இங்கிலாந்தின் டேவிட் பெக்காம்.

 

1994 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற பிரேசில் அணியை போட்டியை நடத்திய பிரான்ஸ் வீழ்த்தி கோப்பையை தன் வசமாக்கியது. பிரான்ஸ் குறித்து பெரிய அபிமானம் இல்லையென்றாலும் பிரேஸில் வீழ்ந்ததில் அவனுக்கு நிரம்ப மகிழ்ச்சி. விளையாடிய எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்காது ஆறு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று பிரான்ஸ் சாதனை படைத்தது. ஸிடான் அவனைப் பரவசப்படுத்தினார். இறுதிப் போட்டியில் பெனால்டி எல்லாம் இல்லை. மூன்று கோல்கள் அடித்து பிரேஸிலை ஃபிரான்ஸ் அலற வைத்தது. அதில் ஸிடான் மட்டும்  கோல்கள் அடித்தார்.

 

2002 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கொஞ்சம் ஸ்பெஷல். போட்டிகள் நடந்தது நம் ஆசியக் கண்டத்தில்… ஜப்பான் மற்றும் தென் கொரியா  போட்டியை இணைந்து நடத்தின.

 

ஒரு உலகக்கோப்பையை வெல்லும் அணி அடுத்த உலகக் கோப்பை போட்டிகளின் முதல் சுற்றிலேயே வெளியேறுவது என்னும் கலாச்சாரம் ஆரம்பமானது இந்தப் போட்டியில் தான். (எனக்குத் தெரிந்து) பிரான்ஸ் லீக் போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறாமல் வெளியேறியது. தென்கொரியா அணி அரை இறுதி வரை முன்னேறியது. காலிறுதியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியைத் தோற்கடித்து சரித்திர வெற்றியைப் பதிவு செய்தது.

 

பிரேஸில் இறுதிப் போட்டிகளில் ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. பிரேஸிலின் ரொனால்டோ ஒட்டு மொத்தப் போட்டியைத் தன் பக்கம் திருப்பினார். முந்தைய உலகக்கோப்பை போட்டிகளில் பிரான்ஸ் ஆறு போட்டிகளையும் வென்றது போல் இம்முறை பிரேஸில் வென்று காட்டியது.

 

2006 உலகக் கோப்பைப் போட்டிகளில் இத்தாலி கோப்பையை வென்றது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அவனுக்குப் பிடித்தமான வீரர் க்ளோஸ் அதிகபட்சமாக ஐந்து கோல்கள் அடித்தார். அவனுக்கு விருப்பமான மற்றுமொரு வீரர் டேவிட் வில்லா (ஸ்பெயின்) மூன்று கோல்கள் அடித்தார். க்ரிஸ்டியானோ ரொனால்டோ என்ற வீரருக்காக போர்ச்சுகல் அணியை கவனிக்கத் துவங்கி இருந்த அவன் அந்த அணி அரை இறுதி வரை முன்னேறியதைக் கொண்டாடினான். அப்போது இந்தியாவில் கூட உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் முடிவு வந்தவுடன் ஒரு குழு வெடியெல்லாம் வைத்துக் கொண்டாடி அமர்க்களப்படுத்தியது. கோப்பையை வென்றது இத்தாலி அணி. காரணம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

 

2006 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் ஈக்வடார் அணிக்கு எதிராக பெக்காம் அடித்த அவரது ஆஸ்தான ஸ்டைல் கோல் மிகப் பிரசித்தம். அந்தக் கோலைக் காண இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=COmVHgPBCGo

 

ஆஸ்தான ஸ்டைல் என்று ஏன் சொல்கிறேன் என்பதை உறுதி செய்ய 1998 ஆம் ஆண்டு நடை பெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் கொலம்பியாவுக்கு எதிராக அவர் அடித்த இந்தக் கோலையும் பாருங்கள் : https://www.youtube.com/watch?v=6b6h5AfGvk0

 

2010 ஆம் ஆண்டு ஸ்பெயின் வென்றது, 2014 ல் ஜெர்மனி வென்றது என சமீபத்திய அதாவது கடந்த இரு உலக கோப்பை விளையாட்டுப் போட்டிகள் குறித்து ஓரளவு அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

 

தற்போதைய 2018 உலகக்கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன. ஏற்கனவே கோப்பையை பல முறை வென்று அனுபவம் உள்ள ஃபிரான்ஸ் அணியும் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷியா அணியும் மோதுகின்றன.

 

துவக்கத்தில் அவனுக்கு ரொனால்டோ கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. தனி வீரராக ஒரு சாமுராய் போல் அவர் விளையாடும் அணியை அவர் வழிநடத்துவது அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது. இருக்கிறது. இருக்கும். மரடோனா, பாஜியோ, டேவிட் பெக்காம், டேவிட் வில்லா போன்றோருக்குப் பிறகு அவன் கொண்டாடும் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டுமே! பிரான்ஸ் அணி கோப்பையை வெல்லக் கூடிய அணி என அவன் கணித்தான். தற்போது கோப்பையை வெல்லாத குரோஷியா அணி வெல்லட்டுமே என்னும் ஆர்வம் அவனிடம் காணப்படுகிறது. அவனுக்கும் கால்பந்து விளையாட்டுக்குமான பந்தம் இத்தனை வருடங்கள் தாண்டி தற்போது இந்தக் கட்டுரையை எழுதியது என்னும் புள்ளியில் வந்தடைந்திருக்கிறது.

 

எந்த அணி வென்றாலும், கால்பந்தாட்டம் எப்போதும் அவனுக்கும் அவனைப் போன்ற ரசிகர்களாகிய அனைவருக்கும் விசேஷமானதே! சரி தானே?       

Advertisements

4 Comments »

  1. அருமையான கட்டுரை சத்யா அவர்களே. அனைவரின் ஆருடமும் பிரான்ஸ் சுலபமாக வெல்லும் என்பதாகவே இருக்கிறது.

    நன்றி, உண்மையிலேயே நம் நாட்டில் இத்தனை கால்பந்தாட்ட அணி இருக்கும் விஷயமே இன்றுதான் அறிந்து கொண்டேன்.

    நம் நாட்டில் கிரிகெட் மட்டுமல்லாது மற்ற விளையாட்டுக்கும் தயார் படுத்தி அனுப்பும் அளவுக்கு மனித ஆற்றல் உள்ளது. பயன்படுத்தப் படுகிறதா என்பதுதான் நம் கேள்வி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: