Tamil Madhura Uncategorized 1945 இல் இப்படியெல்லாம் இருந்தது – புத்தகப் பரிந்துரை -சத்யா GP

1945 இல் இப்படியெல்லாம் இருந்தது – புத்தகப் பரிந்துரை -சத்யா GP

8

 

“ஒரு எழுத்தாளரின் படைப்பொன்றைப் படித்துப் பரவசமடைவேன். அதன் பின்பு அந்த எழுத்தாளரின் அனைத்து ஆக்கங்களையும் தேடித்தேடி படிப்பேன். அந்த எழுத்தாளரே சிறந்தவர் என்றொரு பிம்பத்தை மனம் கட்டமைக்கும். அது மற்றொரு எழுத்தாளரின் படைப்பைப் படிக்கும் வரை நீடிக்கும். அடுத்த எழுத்தாளரின் எழுத்தை வாசிக்க ஆரம்பித்தவுடன் அவரே சிறந்தவர் என மனம் புதியதொரு பிரமாணம் எடுக்கும். இப்படித்தான் என் சிந்தனை இருக்கிறது”

 

  • இதைச் சொன்னவர், நான் எழுத்துலக பிரம்மா என ஸ்லாகிக்கும் அ.முத்துலிங்கம் அவர்கள்.

 

கடவுளே இப்படி என்றால் அவரை பூஜிக்கும் பக்தனாகிய நான் விதிவிலக்காக இருக்க முடியுமா? நானும் கடவுள் வழியில் தான் பிரயாணிக்கிறேன்.

 

எஸ்.ரா அவர்களின் எழுத்தைப் படிக்க ஆரம்பித்த பின் அவரின் ஓவ்வொரு புத்தகத்தையும் தேடிப் பிடித்து வாங்கிப் படித்தேன். தற்போது தொண்ணூறு விழுக்காடு என்னும் அளவிற்கு அவர் எழுதிய நூல்களை வாசித்துவிட்டேன். அதன் பின்பு ஆதவன் & அ. முத்துலிங்கம். இவர்கள் இருவரது படைப்புகள் அனைத்தையும் படித்துவிட்டேன் என்று சொல்லும்போதே மேட்டிமைத்தனம் பொங்கி வழிகிறது. தற்போது அசோகமித்திரன்.

 

அ.மி அவர்களின் “பதினெட்டாவது அட்சக் கோடு” என்னும் புதினத்தைப் படித்ததிலிருந்து அவரின் படைப்பிலக்கியங்கள் அனைத்தையும் படித்து விட வேண்டும் என்னும் தீ மனதுள் மூண்டது. அந்த நெருப்பு அணையாமல் நீடிக்கிறது ஆனால் பாதிப்பின்றி அகல் விளக்காய் சுடர் விடுகிறது.

 

இந்த வருடத்தில் (2018) புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட சக நண்பர்களுடன் பேசும் போது, எழுத்தாளர்களை சந்தித்து உரையாடும் போது என புத்தகம் தொடர்புடைய அனைத்து சம்பாஷணைகளிலும் தவறாமல் இடம் பிடிக்கும் விஷயம் அ. முத்துலிங்கம் அவர்களின் அறுபதாண்டு காலத்தை தாண்டி நீடிக்கும் இலக்கியத் தொண்டு. இதைக் குறிப்பிடாமல் நான் இருந்ததே இல்லை. ஒரு எழுத்தாளரை சந்தித்து அளவளாவும் போதும் நான் அதைச் சொன்னேன். இரத்தின சுருக்கமாக அவர் பதிலளித்தார். அது “அ.மு அவர்கள் இலங்கையின் அ.மி” அதாவது அ. முத்துலிங்கம் அவர்கள் இலங்கையின் அசோகமித்திரன்.

 

அசோகமித்திரனின் ஆக்கங்களை ஒவ்வொன்றாகப் படிக்க படிக்க லயித்துப் போய் மன அதரங்கள் உதிர்க்கும் வாக்கியம் “அ.மி இந்தியாவின் அ.மு”     

 

சமீபத்தில் பொதுத் தளத்தில் என் ஆசையை இப்படி வெளிப்படுத்தினேன் “அ.மி அவர்களின் படைப்புகள் அனைத்தையும் படிக்க வேண்டும். நண்பர்கள் தாங்கள் படித்த அவரது நூல்களைக் குறிப்பிட்டு எனக்கு சிபாரிசு செய்யுங்கள்” என்று.

 

சுரேஷ் என்றொரு நண்பர் ஒரு சிறுகதைத் தொகுப்பை எனக்குப் பரிந்துரை செய்தார். தலைப்பே வசீகரமா இருந்தது. அது என்னை வசியப்படுத்தியது. தொகுப்பின் பெயர் : 1945 இல் இப்படியெல்லாம் இருந்தது”  

 

இத்தொகுப்பில் இருபத்தொரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 2009 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2011 ஆம் ஆண்டு துவக்கம் வரை என்னும் பதினைந்து மாதங்கள் கொண்ட காலகட்டத்தில் அனைத்து சிறுகதைகளும் எழுதப்பட்டுள்ளன.

 

ஒரு புத்தகம் எழுதப்பட்ட காலம் என்பது மிக மிக முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெரும்பாலானோர் தெய்வ வழிபாடு, ஆன்மிகம், தெய்வங்களைப் போற்றுதல் என எழுதினார்கள், அடுத்து ஒரு குறுகிய கால கட்டத்தில் தேர்ந்தெடுத்த தெய்வ நிந்தனை, குறிப்பிட்ட மதத்தைப் பழித்தல் என்னும் களத்தில் நிறைய எழுதினார்கள். எழுபதுகளின் இறுதி மற்றும் எண்பதுகளின் மத்தியக் காலம் வரை முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தை சாடுவது, வேலையில்லாத் திண்டாட்டம், நக்சல்பாரி போன்ற களங்களில் எழுத்துகள் பயணம் மேற்கொண்டன. தாராளமயமாக்கல் நம் தேசத்துக்குள் நுழைந்த பின் கிராமியப் பின் புலம் குறைந்து நகரங்கள் மேலோங்கத் துவங்கின. காதல், சைன்ஸ் ஃபிக்ஷன், அயல்நாட்டு முறையைப் பிரதி எடுத்தல் போன்ற பாதிப்பில் நிறைய எழுத்துகள் அருவி போல் கொட்டத் துவங்கின.

 

இந்த தொகுப்பு வெளியான போது “ப்ளாக்” என்று சொல்லும் “வலைப்பூ” இணையதள ஆக்கிரமிப்பில் எழுத்துலகம் இருந்தது என தாராளமாக சொல்லலாம். அப்போது  வட்டமிட்ட டெம்ப்ளேட்டின் பாதிப்பே இல்லாமல் பல்வேறு காலகட்டத்தின் பிரதிபலிப்பை ஒவ்வொரு கதையிலும் எழுத்தாளர் முன்வைத்திருப்பது ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது.

 

பொதுவாக அ.மியின் கதைகளின் நடுத்தர வர்க்கம் பிரதானமான இடத்தைப் பிடிக்கும். அடுத்து ஆந்திராவின் ஹைதராபாத், செகந்திராபாத் மற்றும் தமிழகத்தின் சென்னை போன்ற நகரங்களிலேயே கதை பிரசவமாகித் தவழ்ந்து, நடந்து, ஓடி, குதித்து, நிதானித்து வயோதிகத்தை எட்டும். இத்தொகுப்பில் உள்ள கதைகளும் அவ்வாறே இருக்கின்றன ஆனால் அதன் வீச்சு… அவை தரும் உணர்வு… அது தான் அ.மி அவர்களின் விசேஷ எழுத்தாற்றல் எனபது என் அவதானிப்பு.

 

தலைப்பு என்னை ஈர்த்ததால், புத்தகத்தை கரங்கள் ஏந்தியவுடனேயே பக்கம் 71 ஐ கரங்கள் புரட்டியது. அந்தப் பக்கத்தில் தான் “1945 இல் இப்படியெல்லாம் இருந்தது” என்னும் சிறுகதை அச்சிடப்பட்டிருந்தது என நான் சொல்லத் தேவை இல்லை என்று மனம் நினைத்தாலும் சொல்லி எழுதிவிட்டேன்.

 

இரண்டு பள்ளிக்கூடம் படிக்கும் சிறுவர்கள், எந்த வருடத்தில் அவர்களின் பால்ய பருவம் என்பது தலைப்பிலேயே தெளிவாக இருக்கிறது. அந்தக் காலம் எப்படிப்பட்டது என்பதை நிறுவும் விதத்தில் அக்கால சம்பவங்கள், பழக்க வழக்கங்கள், நடுத்தர வர்க்க வாழ்க்கை, ஆசிரியர் – மாணவர் இடையே அப்போதிருந்த உறவு முறை, பெற்றோர் தம் வாரிசுகளையும், வாரிசுகள் பெற்றோரையும் வரையறை செய்யும் முறை என அனைத்தையும் அழுத்தந்திருத்தமாக மறக்கவே முடியாத அளவிற்கு தம் எழுத்தின் மூலம் வாசிப்பவரின் மனதுள் படர விடுகிறார் கதை சொல்லி.

 

தானியங்கள் அரைக்கும் மூன்று கடைகள், பள்ளிக்கூடம், இரு மாணவர்கள், தலைமை ஆசிரியர், பள்ளிக் காவலாளி – இவை தான் கதை மாந்தர்கள். உயிர் உள்ள மனிதர்களைச் சொல்லி அதில் உயிரற்ற வியாபார ஸ்தலத்தையும் கதை மாந்தர் என்று ஏன் நான் சொல்கிறேன் என நீங்கள் சந்தேகம் கொள்ளலாம். கடைசி நான்கு வரிகளில் ஒரு சிறுகதையை இமயம் அளவுக்கு உயர்த்திய பொக்கிஷ எழுத்தாளரின் இக்கதையை நீங்களும் படித்தால் என் நிலைப்பாடை ஏற்றுக் கொள்வீர்கள்.

 

“குடும்பப் புத்தி” என்னும் சிறுகதையிலும் எழுத்தாளர் இயல்பாக மனித மனதின் விசித்திரங்களை அதன் போக்கில் எழுத்துக் காட்சியாக நம் முன் வைப்பதில் போட்டியின்றி வெற்றியைத் தொடுகிறார். கதையை சில சொற்றொடர்கள் கொண்டு நிறுத்தும் போது எழுத்தாளர், வாசகனின் சிந்தனையை பெருமளவுத் தூண்டி விடுகிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உண்டு என்பது யதார்த்தம். என் புரிதல் என்னும் அளவில் “பள்ளிக்கூடம் நிசப்தமாக இருந்தது” என்ற வாக்கியம் புத்தனுக்கு ஞானம் கிடைத்த போதி மர வரலாற்றுக்கு ஒப்பானதாக நினைக்கிறேன்.

 

“வெள்ளை மரணங்கள்” என்னும் சிறுகதை என் பால்யத்துக்கு மிக நெருக்கமானதாக உணர வைக்கிறது. அனைத்தயும் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆசை அந்தப் பருவத்தில் உள்ள அனைவரிடமும் அதிகமாகவே காணப்படும். அதை அ.மி அவர்கள் நயமாக, இயல்பாக பதிவு செய்திருக்கிறார். பதட்டமடையச் செய்யும், குழப்பமூட்டும் வாக்கியங்கள் ஏதுமின்றி தெளிவான நடையில் சொல்லி இருக்கிறார். அ.மி அவர்களின் நிகழ்வுகள் நடைபெறும் இடம் குறித்து விவரிக்கும் எழுத்து நடையானது எப்போதுமே அலாதியானது.

 

“எங்கள் வீட்டுக்கு முன் வாசல், கொல்லை, பக்க வாட்டில் வாயிற்படி என்று மூன்று வாயிற்படிகள் உண்டு. ஆதலால், ஒவ்வோர் இரவிலும் கவலை இல்லாமல் தூங்க மூன்று கதவுகளையும் பூட்ட வேண்டும். அலிகார் பூட்டுகள் என்று நாங்கள் பல பெரிய பூட்டுகளை வைத்திருக்கிறோம்.

 

கொட்டகை கிழக்கு மேற்காக கட்டப்பட்டது. நாங்கள் பக்கவாட்டுக் கதவைத் திறந்தால், வெயில் சுளீரென்று 12 மணி வரை அடிக்கும்.”  

 

சர்வ சாதரணமாக வீடு, வாசல், கொட்டகை, நண்பகல் வெயில் என சகலத்தையும் எழுத்துருவில் காட்சிபடுத்தும் வித்தகர் நம் அ.மி.   

 

இந்தச் சிறுகதையிலும் அவரின் பேராற்றல் அதாவது கதையை நிறுத்தும் போது பிரயோக்கிக்கும் சொல்லாடல் ஆயிரம் அர்த்தங்களை பூடகமாக வாரி இறைக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. கடைசி ஐந்து வரிகள் தரும் கனமானது கதையை உச்சாணிக்கொம்பில் வைத்துவிடுகின்றன.

 

இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகள் பற்றியும் எழுதலாம் ஆனால் அதுவே ஒரு குறும்புதினம் என்னும் அளவிற்கு விரிந்து விடும் அபாயமுள்ளதால் ஒரு சொம்பில் உள்ள அமிர்தம் எத்தகையது என்பதை சில சொட்டுகள் வாயிலாகத் தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

 

சில கதைகள் பெரிய அளவில் எந்தவொரு பாதிப்பையும் எனக்குள் தோற்றுவிக்காது கடந்து போகும் பிரதிபலிப்பைக் கொண்டிருக்கின்றன. என்னுடைய தற்போதைய புத்திச் சமன்பாட்டிற்கு அது எட்டவில்லை என்றும் சொல்லலாம். காலம் சமன்படுத்தியபின் அக்கதைகளின் உள்ளர்த்தமும், நுட்பமும் வடிவாக எனக்குப் பிடிபடலாம்.

 

சில வருடங்களுக்கு முன்பாக அசோகமித்திரன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதுவும் அவருடன் ஒன்றாக அமர்ந்து காபி குடிக்கும் பெரும் பேறு. அத்தகையதொரு உன்னத தருணத்தை ஏற்படுத்தித் தந்தவர் சிறகு ரவிச்சந்திரன் சார். காபி, காபி டிகாக்ஷன், காபியில் உள்ள சக்கரை போன்றவற்றையெல்லாம் அ.மி அவர்கள் பேசினார். ஏதோ நம் வீட்டில் உள்ள மூத்த வயதுடைய அனுபவசாலி நம்முடன் அன்னியோனியமாகப் பேசுவது போன்றதொரு உணர்வு. அப்போது அவரின் எழுத்துகளை அதிகளவில் நுகராத பாவியாக நான் இருந்தேன் ஆதலால் கிடைத்த நேரத்தில் அவரின் படைப்புகள் குறித்து அவருடன் பேசிக் களிக்கும் வாய்ப்பை இழந்தேன்.

 

காலம் ஒரு கொடூரமான, இரக்கமற்ற ஆசான். அது கற்பிக்கும் பாடங்கள் வலி மிகுந்தது. காயம் தரக்கூடியது. மறு வாய்ப்புக்கு இடம் இல்லாதது. இப்போது அ.மி அவர்களின் பல்வேறு படைப்புகளைப் படித்து தவிக்கிறேன் ஆனால் பொக்கிஷ எழுத்தாளருடன் சந்திக்கும் வாய்ப்பு என்பது இனி சாத்தியமில்லை!    

 

தொகுப்பின் பெயர் : 1945 இல் இப்படியெல்லாம் இருந்தது

ஆசிரியர் : அசோகமித்திரன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்          

 

– சத்யா GP    

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 03ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 03

3 – மனதை மாற்றிவிட்டாய் இங்கே ஆதியின் வீட்டிலோ இரவு உணவிற்கு அனைவரும் அமர ராஜலிங்கம், ” ஆமா எங்க திவிய இன்னைக்கு காலைல இருந்து காணோம்,நீங்க 2 பேரும் ஒரு நாள் முழுக்க பாக்காம இருந்தா உலகம் என்னாகுறது? ”

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 34ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 34

34 – மனதை மாற்றிவிட்டாய் திவி ஆதிக்கு அழைக்க லைன் கிடைக்கவேயில்லை. வேகமாக உள்ளே சென்றவள் அம்முவிடம் நான் கேக்றதுக்கு மட்டும் பதில் சொல்லு என பறக்க “ஆதி, ரிங் வாங்கிட்டு வீட்டுக்கு தானே வரேன்னு சொன்னாங்க? ” “ஆமா, நாளைக்கு

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 7சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 7

பாகம் – 7 “காற்றெல்லாம் உன் வாசம் உன் வாசங்களை கோர்த்து உணவாய் உண்டு இராட்சனாகிக் கொண்டிருக்கிறேன் …“   அன்று ஸ்வேதாவிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் ஏனோ குமாரை பார்த்த விசயத்தை கடைசி நொடியில் சொல்லாமல் தவிர்த்தாள் ஸ்ருதி. “இன்றைக்கு?”