Skip to content
Advertisements

பெரியாச்சியம்மன் (சிறுகதை )

ஓட்டை உடைசலுடன் வியாதிக்காரன் இருமுவது போல லொங்கடி  லொங்கடி என்று நகர்ந்த பஸ் ஒரு வழியாக  எங்கள் இருவரையும் அந்தக் குக்கிராமத்தில் இறக்கிவிட்டு அந்த மண்சாலையிலிருந்த புழுதியையம் கரியையும்  எங்கள் கண்களில் சிதறவிட்டுக்  கிளம்பியது.

 

நாங்கள் நாங்கள் என்றால் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை நான் பன்னீர் என்னுடைய தோழன் செவ்வாழை. நாங்கள் இருவரும் இறங்கியது மதுரையிலிருந்து ஒரு மணி நேரம் பஸ் பிரயாண தொலைவிலிருக்கும் செம்மலைக்கு.  செம்மலைத்தான் செவ்வாழையின் சொந்த ஊர். அடுத்த பணி என்ன என்று தினவெடுத்த தோள்கள் கேட்டபோது விடையாக வந்ததுதான் செவ்வாழை சொன்ன தகவல். இறங்கி சிறப்பாக சம்பவத்தை முடிக்க வந்துவிட்டோம்.

 

“செவ்வாழை அப்பறம்… உங்க ஊரைப் பத்தி சொல்லு”

 

“ஒரு வாரமா பெரியாச்சியம்மன் கோவிலைப் பத்தி ஒரு வரி கூட விடாம சொன்னேன்ல… அதுக்கு மேல என்ன சொல்ல”

 

“உங்க உறவுக் காரங்களைப் பத்தி சொல்லு. அப்பத்தானே கலந்து பழக முடியும். கலந்து பழகுனாத்தானே சந்தேகம் வராது. சின்ன புள்ளைங்க இருந்தா சொல்லு மிட்டாய் கிட்டாய் தரலாம்”

 

“நிறுத்திக்கோ… நீ மைனர் பொண்ணை கற்பழிச்சுட்டு ஜெயிலுக்கு வந்ததெல்லாம் தெரியும். எங்க ஊரில் உன் வேலையைக் காட்டினா பெரியாச்சி சும்மா விடமாட்டா… அந்த மாதிரி நோக்கமிருந்தா சொல்லிடு இப்பயே நம்ம உறவை முறிச்சுக்கலாம்”

 

“என்னடா செவ்வாழை பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு… சரிடா நம்ம கூட்டு சேர்ந்து சம்பவத்தை சிறப்பா செய்யுறோம் அப்பறம் கிளம்புறோம் ஓகேயா?”

 

திருவிழா கிராமம் சொந்தக் காரர்களின் வருகையால் கலகலப்பாகவே இருந்தது. எங்களை அனைவரும் அன்பாக வரவேற்றனர். உணவு பிரமாதம். வெயில் தாழ செவ்வாழையை இழுத்துக் கொண்டு கோவிலுக்குக்  கிளம்பினேன்.

 

இருவரும் நடக்கிறோம் நடக்கிறோம்… ஊரை விட்டு காட்டு பகுதியில் ரெண்டு கிலோமீட்டர் வரை நடந்துவிட்டோம் இருந்தும் கோவில் வரவில்லை.
“இது உங்க ஊர் கோவிலா இல்லை காட்டுக் கோவிலா… இவ்வளவு தூரம் நடக்க வைக்கிற”

 

“அந்த காலத்தில் எல்லாம் காட்டு பகுதிதான். திருவிழா சமயத்தில்தான் நடமாட்டமே இருக்கும். அதுக்கப்பறம் பூசாரி மட்டும் காலைல போயிட்டு இருட்டுறதுக்கு முன்ன திரும்பிடுவாரு”

 

வழியில் எங்கு பார்த்தாலும் ஆளுயரத்திலிருந்து இரண்டடி வரை அளவில் குதிரை பொம்மைகள். ஆங்காங்கே பாதி உடைந்தும், சாயம் போயும் மண்ணோடு மண்ணாகக் கலந்தும் சிதலமடைத்திருந்தது.

 

“இதென்ன இத்தனை குதிரை பொம்மை”

 

“இது மதுரை வீரனோடது”

 

“மதுரை வீரன் கோவிலும் இருக்கா”

 

“ஆமாம் பெரியாச்சியம்மனை காவல் காக்க வெள்ளையம்மா பொம்மியோட மதுரை வீரன பக்கத்தில் வச்சிருக்காங்க. திருவிழாவில் முதலில் மதுரை வீரனுக்கு பொங்க  வச்சு மரியாதை செஞ்சு அனுமதி வாங்கிட்டுத்தான் பெரியாச்சிக்குப் படையல் போடுவாங்க”

 

பேசிக் கொண்டே கோவிலுக்கு வந்துவிட்டோம். வழியில் இருந்த குதிரை பொம்மைகளை பார்த்து பழைய கோவிலாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நன்றாகவே பராமரித்திருந்தார்கள். சுண்ணாம்பு அடித்து புது மெருகோடு சுத்தமாக இருந்தது கோவில்.
எங்களிடம் பூசாரி கதை சொன்னார் “அந்த காலத்தில் ஒரு ராஜாவும் ராணியும் கொடுங்கோலர்களா இருந்தார்களாம். ராணி மாசமா இருந்தப்ப ஒரு ஜோஸ்யக்காரன் பிறக்கப்போற குழந்தையால் உங்க உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிட்டானாம். அதனால அந்தக் குழந்தையைக் கொன்னுடனும்னு முடிவு செஞ்சானாம் ராஜா. காட்டு வழில பயணம் செஞ்சப்ப ராணிக்கு பிரசவ வலி வந்துடுச்சு. அப்ப ராணிக்கு பிரசவம் பாத்தவதான் பெரியாச்சி.
குழந்தையை ராஜா கொல்லப் போறது தெரிஞ்சு ராஜாவைக் கொன்னவ, ராணியும் அதே முயற்சி செஞ்சதைக் கண்டு ராணியையும் கொன்னு குழந்தையைக் காப்பாத்தினாளாம். அன்னைலேருந்து அங்கிருந்த மக்களுக்கு தெய்வமா மாறிட்டா.
இதைப் பாருங்க குழந்தையைக் காப்பாத்த சொல்லி, குழந்தைகளை வருத்தினவங்களை தண்டிக்க சொல்லியும் எத்தனை பேர் பிரார்த்தனை செஞ்சுட்டு போயிருக்காங்கன்னு”

 

“இதெல்லாம் உண்மையா சாமி” நான் கேட்டது அவருக்குக் கோபத்தை வரவழைத்திருக்க வேண்டும்.

 

“என் பிள்ளையைப் பாத்துக்கோன்னு வேண்டிகிட்டா அந்தத் தாய் தகப்பன் கூட பிள்ளைகள் விஷயத்தில் தப்பான முடிவெடுக்க முடியாது. பெரியாச்சி அவங்களை சுட்டுப் பொசுக்கிடுவா”

 

ஆனால் கருவறையில் குத்துவிளக்கொளியில்  பெரியாச்சியம்மனைப் பார்க்கும் போது தான் எதற்கும் பயப்படாத எனக்கே மனதோரம்  ஒரு பீதி கிளம்பியது.

 

காலில் ஒரு ஆணை  மிதித்துக் கொன்று, மடியில் ஒரு பெண்ணைப் படுக்கவைத்து அவளது வயிற்றைக் கிழித்து ரத்தத்தை முகமெங்கும் பூசி செந்தூர வண்ணத்தில் ஒளிர்ந்தது அம்மனின் முகம். அதற்கு நேர் மாறாக மென்மையாக ஒரு குழந்தையை இன்னொரு கரம் பிடித்திருந்தது.

 

 

“அப்பா… என்னடா இந்த சாமி இப்படி ரத்த மயமா  இருக்கு. அந்த இருட்டில் பாக்கும்போது எனக்கே ஒரு மாதிரி திகிலா இருந்துச்சு”

 

“பயம்மா இருக்குல்ல… எனக்கும் அதேதான். ஏண்டா இந்த சம்பவத்துக்கு ஒத்துக்கிட்டோம். உன்கிட்ட ஏன்  இந்த கோவிலைப் பத்தி சொல்லிக் கூட்டிட்டு வந்தேன்னு எனக்கே தெரியல” புலம்பினான்.

 

“அதை விடு… திருவிழா அன்னைக்குப் போட்ட நகையெல்லாம் அன்னைக்கு முழுசும் அம்மன் கழுத்தில் இருக்குமே. காவலுக்கு யாராவது நிப்பாங்களா”

 

“அதான் மதுரைவீரன் இருக்காரே. வீரனை மீறி யாரும் எதுவும் செய்யமுடியாதுன்னு எங்க ஊரு ஆளுங்களுக்கு ஒரு நம்பிக்கை”

 

எகத்தாளமாக சிரித்தேன். நேத்து கூட கோவிலில் புள்ளையாருக்கு சூடம் காட்டிட்டு வர்ற நேரத்தில் மாரியாத்தாவோட மூக்குத்தியையும், தாலியையும் திருடிட்டு போயிட்டானாம். உலகம் அவ்வளவு வேகமா போயிட்டு இருக்கு. இதில் மதுரைவீரன், குதிரை வீரன்னு  முட்டாள்தனமா பேசிகிட்டு.
ஆனால் இவனுங்க இந்த மாதிரி முட்டாளா இருக்குறதாலதான் நம்ம ஈஸியா கொள்ளையடிக்கப் போறோம்”

 

திருவிழா மறுநாள் சிறப்பாகவே நடந்தது. பெண்கள் குலவை சத்தமிட்டபடி பொங்கல் வைத்தனர். அவரவர் வசதிக்கேற்றபடி மண் பொம்மைகளை வாங்கி வைத்து அதற்கு அலங்கரித்து பூஜை செய்தனர்.
குதிரை பொம்மைகள் மதுரை வீரனுக்கு, கால்நடைகள் நலம் பெற மாடு பொம்மைகள், பூச்சி பொட்டுக்களால் தொல்லை ஏற்படக்கூடாதென்று பாம்பு, தேள் பொம்மைகள், வியாதிகள் குணம் பெற கண், கால் என்று மண்ணில் செய்த உருவங்கள், குழந்தை வரம் வேண்டி மண் பொம்மைகள் என்று பக்தர்கள் அனைவரும் சாமிக்கு ஏதோ தன்னாலானதை செய்தனர்.

 

அன்று இரவுதான் எங்களது வேட்டை நாள். ஆனால் கடைசி நேரத்தில் செவ்வாழை ஜகா வாங்கிவிட்டான்.
“எனக்கு பெரியாச்சியைப் பாதத்திலிருந்து பயக்குமாருக்குடா. அதுவும் நீ ரேப் பண்ணியே அந்தப் பொண்ணோட அம்மா அப்பா ஊருக்கு வந்து பெரியாச்சிகிட்ட வேண்டிட்டு போயிருக்காங்களாம். அதைக் கேட்டதிலிருந்தது வயத்தை கலக்குது. வேணாம் பன்னீரு”

 

“மூடு … எல்லாத்தையும் நானே பாத்துக்குறேன்” என்றபடி இரவு வேட்டைக்குக் கிளம்பினேன். பௌர்ணமி சமயம் என்பதால் நிலவொளி தாராளமாய் இருந்தது. அந்த காட்டுப் பகுதிக்கு யார் வருவது என்று அனைவரும் எண்ணியதால் யாரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. பார்க்கும் இடத்திலெல்லாம் காலையில் காணிக்கையாக வைத்த பொம்மைகளைத் தவிர வேறொன்றும் இல்லை.

 

கோவிலுக்கு சென்றதும், அங்கு அம்மன் மேலிருந்த நகைகளை லவட்டியதும் இத்தனை சுலபமாக இருக்கும் என்று நானே எதிர் பார்க்கவில்லை.
வெளியே வந்தேன். சுவர் கோழியின் சத்தத்தையும், ஆந்தையின் அலறலையும் எங்கோ ஒலித்த நரியின் ஊளையையும் தவிர அச்சமேற்படுத்தும் வேறொன்றும் இல்லை. அப்படியே நடந்து கோவிலைத்தாண்டி மதுரைவீரன் கோவிலில் அடிஎடுத்து வைத்த சமயம் வீர்றென்று ஒரு ஒலி  கட்டாரி பறந்து என் காதினை உரசியவண்ணம் சென்று மரத்தில் இறங்கியது.
சட்டென்று குனிந்தவன் அதன் பின் எதிர் திசையில் வளைந்து வளைந்து வேகமாக ஓடத் துவங்கினேன். என்னைப் பின் தொடர்ந்தது குதிரையின் குளம்படி ஓசை அதன் பின் கனைக்கும் சத்தம். முதலில் ஒலித்த ஒரு குளம்படி இரண்டு மூன்று என்று பெருகி பின்னர் நூறு குதிரைகள் சேர்ந்து ஓடி வருவது போல ஓசை கேட்க, அதற்கு மேல் போக வழியின்றி மலை ஆரம்பித்திருக்க பயத்துடன் திரும்பினேன். என்னை சுற்றி வளைத்தன நூற்றுக் கணக்கான குதிரைகள். அவற்றின் பின்னே தூரத்தில் தெரிந்த குதிரையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு ஒருவன். அவனைப் பார்க்கக் கூட முடியாது மயங்கி விழுந்தேன்.
மறுநாள் யாரோ முதுகில் சுளீரென அடிக்க முகம் சுளித்துக் கொண்டு எழுந்தேன்.
இரண்டு மூன்று பேர் அருகில்  பேசிக் கொண்டிருந்தனர்.
“நேத்தும் கூட அம்மனோட நகையை மதுரை வீரன் சன்னதியிலிருந்து எடுத்திருக்காங்க. அப்ப யாரோ திருடன் வந்திருக்கான்னு தானே அர்த்தம்”
அவர்கள் பேசுவதைக் கூட கவனிக்க விடாமல் என் காதருகே சிறுவர்கள் சிலர் கத்தினர். எரிச்சலோடு கைகளால் அவர்களைத் தள்ளிவிட முயன்றால் கைகளை என்னால் அசைக்கவே முடியவில்லை. ஏன் கால்களைக் கூட, அவ்வளவு ஏன் மரக்கட்டை போல இருந்தேன். எனக்கு என்னாயிற்று.
சிறுவர்களோ எனது கேள்வியைப் பொருட்படுத்தாது “அப்பா நேத்து இருபது குதிரை தானப்பா இருந்தது இன்னைக்கு இருபத்தோரு குதிரை இருக்குப்பா. எப்படிப்பா  புது குதிரை வந்தது. போன தடவையும் இப்படித்தான் நம்ம வச்ச குதிரைகளை விட அதிகமா நாலு குதிரை இருந்தது”

 

“வேண்டுதலுக்காக யாராவது சொல்லாம கொள்ளாம வந்து வச்சுட்டுப் போவாங்கடா… இருட்டப் போகுது வா கிளம்பலாம்” என்று கிளம்பினார்கள் அனைவரும்.

 

“இந்தக் குதிரையைப் பாத்தாலே ஆத்திரம் ஆத்திரமா வருது” என்றபடி என்னை  ரெண்டு உதை உதைத்துவிட்டு சென்றாள்  சிறுமி ஒருத்தி. உயிர் போகும் வலியில் என்னால் வாயைத் திறத்து கத்தக் கூட  முடியவில்லை.
முகத்தின் ஒரு பகுதியிலிருந்த கண்களால் பக்கத்தில் பார்த்தேன் வரிசையாக மண் குதிரைகள் அப்படியே அசையாமல் நின்றிருந்தன. அவற்றுடன் நானும்.

Advertisements

1 Comment »

  1. அம்மன் தண்டித்த விதம் அருமை. திருடனை கத்தியினறி ரத்தமின்றி ஊர உலகம் அறியாமல் குதிரைய்க மாற்றிய அந்த காவல்கார குதிரைவீரன் சாமி……இதே போல் இப்போ உள்ள கோயில் சொத்தை திருடும் அற்ப மனிதர்களையும் மாற்றினால் சிலைகளும் உண்டியல்களும் தப்பிக்கலாம்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

%d bloggers like this: