Tamil Madhura தொடர்கள் சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 7

சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 7

அத்தியாயம் 7. தி

 

    • ராக்ஃபெல்லருக்குக் கைகால் ஆடவில்லை. “மேரேஜுக்கு இன்னும் ஸிக்ஸ்டீன் டேஸ்தான் இருக்குது. இதற்குள் எவ்வளவோ ஏற்பாடு செய்தாகணும். பெண்ணும் மாப்பிள்ளையும் வரணும். என் ஃபிரண்ட்ஸும் ரிலேடிவ்ஸும் வரணும். அவங்களுக்கெல்லாம் ஜாகை ஏற்பாடு செய்தாகணும் ” என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் அந்தச் சீமாட்டி.

 

    • அப்போது அங்கே வந்த பஞ்சு, “மேடம் மாஸ்ஸசூஸெட்ஸிலேருந்து இன்றைக்கு ஈவினிங் உங்க ஃபிரண்ட் பெட்டி டேவிஸும் இன்னும் ஐந்தாறு பேரும் வராங்களாம். அவங்களை ரிஸிவ் பண்றத்துக்கு ஏர்போர்ட் போகணும்” என்றான்.

 

    • “பஞ்ச்! எனக்கு டயமே இல்லே. ப்ளீஸ் ! நீயும், லல்லியும் போய் அழைச்சிட்டு வந்துடுங்க. இன்றைக்கு ஈவினிங் நான் மிஸஸ் கென்னடியை மீட் பண்ணி, மேரேஜுக்கு இன்வைட் பண்ணப் போறேன். தயவு செய்து அதுக்கு முன்னாலே இப்ப எல்லோரையும் இங்கே கொஞ்சம் வரச் சொல்லு. மேரேஜைப் பற்றி ‘டிஸ்கஸ்’ செய்வோம். எனக்கு ஒரு கம்ப்ளிட் ஐடியா குடுங்க பார்க்கலாம். மொத்தம் எத்தனை பேர் வருவாங்க? யார் யார் வருவாங்க? என்னெல்லாம் நடக்கும்? கொஞ்சம் விவரமாச் சொல்லுங்கோ” என்றாள் மிஸஸ் ராக்.

 

    • “ஃபஸ்ட்லே மேடம், டம்பர்ட்டன் ஓக்ஸ்லேருந்து சம்மர் ஹவுஸ் வரைக்கும் ஆர். ஸ்ட்ரீட் பூராவும் பந்தல் போட்டு முடிக்கணும்!”

 

    • “முடிச்சுடு. அதுக்குத்தான் ஹவாயிலேருந்து பந்தலுக்கு வேண்டிய தென்னங் கீத்து, வாழைமரம் எல்லாம் வந்தாச்சே! அத்தோடு ஆர். ஸ்ட்ரீட்லே இருக்கிற ஹவுஸ் பூராவும் காலி பண்ணிக் கொடுக்கச் சொல்லி கேட்டிருக்கேன். சரின்னு சொல்லியிருக்காங்க. மேரேஜ் பார்ட்டீஸ் யார் வந்தாலும் இந்தத் தெருவிலேயே இறக்கிடலாம். இந்த ஸ்ட்ரீட்லே டிராஃபிக்கையும் கண்ட்ரோல் பண்ணச் சொல்லிட்டேன். உ.ம்… நெக்ஸ்ட்! அடுத்தாப்போல் என்ன செய்யணும்?”

 

    • “அடுத்த வெள்ளிக்கிழமை சுமங்கலிப் பிரார்த்தனை நடத்தணும்” என்றார் அய்யாசாமி.

 

    • “சுமங்கலிப் பிரார்த்தனையா? அப்படின்னா?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்பெல்லர்.

 

    • “லேடீஸுக்கு விருந்து நடத்தி பிரார்த்தனை பண்றதுக்கு சுமங்கலிப்பிரார்த்தனைன்னு சொல்றது.”

 

    • “அதுக்கு எத்தனை லேடீஸ் தேவைப்படும், சொல்லுங்க. நியூயார்க்லே எனக்குத் தெரிஞ்ச லேடீஸுங்க ரொம்பப் பேர் இருக்காங்க. அவங்களையெல்லாம் வரவழைச்சுடறேன். இல்லாட்டி வாஷிங்டன்லே கவர்ன்மெண்ட் கர்ல்ஸ் இருக்காங்க. ரொம்ப அட்ராக்டிவா இருப்பாங்க. அவங்களை வைத்து நடத்திடலாம். சுமங்கலிப் பிரார்த்தனையை வெள்ளிக் கிழமைதான் நடத்தணுமா? ஸாடர்டே நைட் நடத்தக் கூடாதா?”

 

    • அம்மாஞ்சி வாத்தியார் சிரித்தார்.

 

    • “ஸாஸ்ட்ரி! நீ ஏன் சிரிக்கறே” என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

 

    • “உங்க லேடீஸை வைத்து சுமங்கலிப் பிரார்த்தனை பண்ணக் கூடாது. ஸாடர்டே நைட்டும் கூடாது! ” என்றார் அம்மாஞ்சி.

 

    • “அதென்ன அப்படி? எங்க லேடீஸ் கூடத்தான் நல்லா ‘ஃபீஸ்ட்’ சாப்பிடுவாங்க!” என்றாள் மிஸ் ராக்.

 

    • “சாப்பிடுவா! ஆனால் அவங்களுக்கெல்லாம் புடவை கட்டிக்கத் தெரியாதே! அத்தோடு தாலி கட்டிக் கொண்டிருக்கும் சுமங்கலி லேடீஸ்தான் இதற்கு முக்கியம்” என்றார் அம்மாஞ்சி.

 

    • “அப்படின்னா சரி; உங்க லேடீஸையே அழைத்துச் செய்துடுங்கோ… தென்?”

 

    • “இருபத்தொன்பதாம் தேதி முகூர்த்தம். அதாவது மாங்கல்ய தாரணம். அன்றைக்கு முதல் நாள் ராத்திரி ஜான்வாசம்” என்றார் அப்பு சாஸ்திரிகள்.

 

    • “வாட் இஸ் ஜான்வாஸ்?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

 

    • “ப்ரைட்க் ரூம் காரில் உட்கார்ந்து ப்ரொஸெஷன் போவார். அதுக்கு டாப் இல்லாத கார் ஒண்ணு வேணும். அந்தக் காரில் ஸ்மால் ஸ்மால் சில்ட்ரனெல்லாம் உட்கார்ந்து கொள்ளும். காருக்கு முன்னால் நாதஸ்வரமும், பாண்டு வாத்தியமும் வாசித்துக் கொண்டு போவார்கள். அவங்களோடு ஜெண்ட்ஸ் போவாங்க. காருக்குப் பின்னாலே லேடீஸ் நடந்து போவார்கள்” என்றாள் கேதரின்.

 

    • “எதுக்கு எல்லோரும் நடந்து போகணும் ? எல்லோருக்குமே கார் அரேஞ்ச் பண்ணிட்டாப் போச்சு.

 

    • “மாப்பிள்ளை மட்டும்தான் காரில் போவார். நாமெல்லாம் ஸ்லோவா நடந்துதான் போகணும்…” என்றார் அய்யாசாமி.

 

    • “இங்கெல்லாம் ரோட்லே ஸ்லோவாப் போக முடியாதே! ஸ்பீடாத்தானே போகணும்…”

 

    • “ஜான்வாஸம்னா ஸ்லோவாத்தான் போகணும். ப்ரொஸெஷன் பாருங்க. அதுக்கு நீங்கதான் கவர்ன்மெண்டிலே ஸ்பெஷலா பர்மிஷன் வாங்கணும்” என்றார் அம்மாஞ்சி.

 

    • ” ஓ! யு மீன் ப்ரொஸெஷன்! தட்இஸ் லைக் ஸ்டேட் டிரைவ்! வெரிகுட் ! ப்ரொஸெஷன் எதுவரைக்கும் போகணும்?”

 

    • “ஏதாவது ஒரு கோயில்லேருந்து கல்யாண வீட்டுக்குப் போவதுதான் சம்பிரதாயம். இங்கே ஆப்ரஹாம் லிங்கன் மண்டபம் தான் இருக்கு. ஆகையாலே அந்த மண்டபத்திலே போய்க் கொஞ்ச நேரம் காற்றாட உட்கார்ந்து விட்டுத் திரும்பி விடலாம் ” என்றார் அம்மாஞ்சி.

 

    • “ஏன்? ஜெபர்ஸன் மண்டபத்திலே கூட உட்காரலாமே! அந்த இடமும் ரொம்ப அழகாத்தான் இருக்குது” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.

 

    • “அங்கே வேண்டாம். அது கொஞ்சம் டிஸ்ட்டன்ஸ் அதிகம். அத்தோடு லிங்கன் – மண்டபத்திலேருந்து வியூ ஒண்டர்புலா இருக்கும். செர்ரி ட்ரீலெல்லாம் பூத்துக் குலுங்கற அழகு டைட்ஸ் பேஸின் வாடர்லே ரிப்ளெக்ட் ஆறப்போ தேவலோகமாயிருக்கும். ஜான் வாசத்துக்கு என்றே ப்ளான் போட்டுக் கட்டின மாதிரின்னா இருக்கு லிங்கன் மண்டபம்” என்றார் அம்மாஞ்சி.

 

    • “ஒருவேளை இங்கேதான் லிங்கனுக்கு ஜான்வாசம் நடந்ததோ என்னவோ?” என்றார் சாஸ்திரிகள்.

 

    • “சாஸ்திரிகளே பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருமய்யா!… காட்டன் ஸார்! ஜான்வாசத்தின்போது காஸ் லைட்டுக்கும், நரிக் குறவாளுக்கும் ஏற்பாடு பண்ணியாச்சா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.

 

    • “காஸ்லைட் வேறே எதுக்கு? வாஷிங்டன்லே இருக்கிற லைட் போதாதா?” என்றாள் மிஸஸ் ராக்.

 

    • “இந்த காஸ் லைட் கூடாது. எங்க ஊர் காஸ்லைட்தான் சம்பிரதாயம்” என்றார் அம்மாஞ்சி.

 

    • “சம்பிரதாயம்னா வாட்?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

 

    • “கஸ்டம்ஸ்” என்றார் அம்மாஞ்சி.

 

    • “கஷ்டம் ஒன்றுமில்லை… ” என்றார் சாஸ்திரிகள். மறுபடியும் அம்மாஞ்சி வாத்தியார் சாஸ்திரிகளின் வாயை அடக்கினார். –

 

    • “ஏஜண்ட் பாப்ஜியை டிரங்க் போட்டுக் கூப்பிட்டு, மெட்ராஸிலிருந்து ஆயிரம் காஸ் லைட்ஸ் அனுப்பச் சொல்லியிருக்கேன். நாளைக்குள் வந்துவிடும். நரிக்குறவங்க ஆயிரம் கிடைப்பதுதான் கொஞ்சம் கஷ்டப்படும் போல இருக்கு” என்று கூறினான் பஞ்சு. –

 

    • “நாரிக்ருவாஸ்னா அவங்க யாரு?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். –

 

    • “அவர்கள்தான் தென்னிந்திய காஸ்லைட் கம்பெனி நடத்தறவா. அவாளேதான் காஸ்லைட் தூக்குவா” என்றான் பஞ்சு.

 

    • “அதென்ன அப்படி? அவங்க இங்கே வரமாட்டாங்களா?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

 

    • “வருவாங்க, இருபத்தொன்பதாம் தேதி ஸெளத் இண்டியாவில் ஏகப்பட்ட முகூரட் அதனாலே அவங்களுக்கு ரொம்ப கிராக்கி…”

 

    • “ஆளுக்கு ஆயிரம் டாலர் கொடுத்தாவது அவங்களை வரவழைச்சுடுங்க. காஸ்லைட் தூக்கறத்துக்கு வேறே என்ன செய்யறது?” –

 

    • “பணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவங்க இங்கே வந்தா நாயெல்லாம் சேர்ந்து ‘கோரஸ்’லே குரைக்க ஆரம்பிச்சுடுமே என்றுதான் யோசிக்கிறேன்” என்றான் பஞ்சு.

 

    • “ஏன்? குரைக்கட்டுமே! அதனாலே என்ன ட்ரபிள்? டாக்ஸெல்லாம் சேர்ந்து கோரஸ்லே பார்க் பண்ணா அது ரொம்பத் தமாஷாயிருக்குமே! பஞ்ச்! கண்டிப்பா என் பிரண்ட்ஸ் நாரிக்ரூவாஸைப் பார்க்கறத்துக்கு ரொம்ப லைக் பண்ணுவாங்க. நாரிக்ரூவாஸ் எப்படி இருப்பாங்க பஞ்ச்?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

 

    • “மகாராஜாஸ் மாதிரி இருப்பாங்க. கழுத்திலே காஸ்ட்லி மணி மாலையெல்லாம் போட்டிருப்பாங்க. தலையிலே டர்பன் கட்டியிருப்பாங்க. தோள் மேலே மங்க்கியும் கையிலே வாக்கிங் ஸ்டிக்கும் வச்சிருப்பாங்க. அவங்களை நாங்க பேவ்மெண்ட் ராஜாஸ்னு சொல்றது” என்றான் பஞ்சு.

 

    • “லேடி நாரிக்ரூவாஸ் கூட இருப்பாங்களா? அவங்க எப்படி இருப்பாங்க?”

 

    • “அவங்க மகாராணி மாதிரி கலர்புலா இருப்பாங்க. டீத்தெல்லாம் டார்க்காயிருக்கும். காதுலே, கழுத்திலே, கையிலே வேல்யுபுல் ஜ்வெல்ஸ் போட்டிருப்பாங்க. முதுகிலே தூளி கட்டி, குழந்தையை வெச்சிருப்பாங்க…”

 

    • “தூளின்னா?”

 

    • “பெளச்! லைக் கங்காரு, கங்காருவுக்கு வயத்திலே தூளி இருக்கும். இவங்களுக்கு முதுகுலே பை”

 

    • “ஆமாம்! இவங்களைப் பார்த்து டாக்ஸ் ஏன் பார்க் பண்ணுதுங்க?”

 

    • “ஜெலஸிதான் மேடம்! பொறாமை! பணக்காரங்களைக் கண்டு பொறாமைப் படறது ஏழைங்களுக்கு சகஜம்தானே? இண்டியாவிலே டாக்ஸெல்லாம் ஏழைதானே? அதனாலே, பணக்கார நாரிக்ருவாலைக் கண்டு குலைக்குதுங்க…”

 

    • “நாரிக்ரூவாஸுக்கு என்ன பிஸினஸ் , “

 

    • “டே டைம்லே நீடில் பிஸினஸ். ஊசி விற்பாங்க. நைட் டைம்லே லைட் துரக்குவாங்க. பேவ்மெண்ட்லேதான் லிவ் பண்ணுவாங்க. டெய்லி டின்னர் சாப்பாடுதான் சாப்பிடுவாங்க.”

 

    • “எதுக்கு மங்க் கியைத் தோள் மேலே தூக்கி வெச்சுக்கறாங்க?”

 

    • “தலை மேலே லைட் வைத்துக்கணுமே, அதனாலேதான்.” –

 

    • “எதுக்கு குரங்கு வளர்க்கிறாங்க?”

 

    • “நாய்ங்க அவங்களைக் கண்டு பொறாமைப் படறதாலே அவங்க நாய் வளர்க்கிறதில்லை. குரங்கு வளர்ப்பாங்க. குரங்கு அவங்க சொல்றபடி ஆடும்.”

 

    • “அது எப்படி?”

 

    • “கையிலே கோல் வச்சிருக்காங்களே? ஆடாமல் என்ன செய்யும் கோல் எடுத்தால் குரங்காடும்னு பழமொழியாச்சே!” …

 

    • “ஆமாம்; அவ்வளவு பெரிய பணக்காரங்க எதுக்கு நைட்லே லைட் தூக்கறாங்க?”

 

    • “யு ஸி மேடம்! ரொம் பக் காஸ்ட்லி ஜ்வெல்ஸ் போட்டுக்கிட்டு தெருவிலே போனா இருட்டிலே யாராவது வந்து தாக்கி, நகைகளைப் பறிச்சுக்கிட்டுப் போயிடுவாங்க இல்லையா? அதுக்காக எப்பவும் வெளிச்சத்திலேயே இருக்கணும்னு தலை மேலே லைட்டை வெச்சுக்கிட்டே போவாங்க. ஸ்ட்ரீட் லைட் திடீர்னு ஆப் ஆயிட்டாக்கூட பரவாயில்லே பாருங்க. “

 

    • “பஞ்ச்! அவங்களை எப்படியாவது இங்கே வரும்படி ரிக்வெஸ்ட் பண்ணிக்கோ. அதுக்காக எவ்வளவு டாலர் செலவழிஞ்சாலும் பரவாயில்லை. அவங்க லைட் தூக்கிட்டு போறப்போ வாஷிங்டன் டாக்ஸெல்லாம் அவங்களைப் பார்த்து குலைக்குமில்லையா? அதை அப்படியே டெலிவிஷன்லே காட்டறத்துக்கு ஏற்பாடு செய்யப்போறேன். ப்ளீஸ், ப்ளீஸ்!” என்று மன்றாடினாள் மிலஸ் ராக்.

 

    • “எஸ் மேடம்! செய்துடுவோம். ப்ரொஸெஷன் போற ரூட்லே டிராபிக்கெல்லாம் கண்ட்ரோல் செய்யனும். ரோட்லே எரியற லைட்டெல்லாம் அன்றைக்கு ஆப் செய்துடனும், அப்பத்தான் நாரிக்ரூவாஸ் கொண்டு வர காஸ்லைட்ஸ் வெளிச்சமாத் தெரியும்” என்றான் பஞ்சு.

 

    • “அதுக்கெல்லாம் நான் பர்மிஷன் வாங்கிடறேன். நீங்க ஒண்ணுக்கும் கவலைப் படாதீங்க. எனக்கு கவர்ன்மெண்ட்லே நல்ல இன்புளுயன்ஸ் உண்டு. வேணும்னா இருபத்தெட்டாம் தேதி இருபத்தொன்பதாம் தேதி இரண்டு நாளைக்கும் வாஷிங்டன்லே ஹாலிடேயே டிக்ளேர் பண்ணிடச் சொல்றேன். மிஸஸ் கென்னடி எனக்கு திக்கெஸ்ட் ப்ரண்ட்தான். ஒரு வார்த்தை சொன்னால் எல்லாம் முடிஞ்சுடும். “

 

    • “மிஸஸ் கென்னடி மேரேஜுக்கு வருவாங்களா?”

 

    • “கண்டிப்பா வருவாங்க. அவங்க எல்லாரும் இந்த மேரேஜ் பார்க்கணும்னு ரொம்ப ரொம்ப ஈகரா இருக்காங்க.

 

    • அப்புறம் நாரிக் ரூவாஸ் அத்தனை பேரையும் எங்கே இறக்கலாம்? நல்ல பந்தோபஸ்தான இடமாப் பார்த்து இறக்க வேணாமா? ரொம்பக் காஸ்ட்லி ஜ்வெல்ஸ் போட்டிருக்கிறவங்களாச்சே எதுக்கும் துப்பறியும் இலாகாவுக்கு (F.B.I.) முன்னாடியே சொல்லி வைக்கறது நல்லது இல்லையா?” என்றாள் மிஸஸ் ராக்.

 

    • “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நாரிக்ரூவாஸ் அதெல்லாம் விரும்ப மாட் டாங்க. அவங்க வீட்டுக்குள்ளேயும் தங்க மாட்டாங்க. பேவ் மெண்ட் தான் அவங்களுக்கு வீடு” என்றான் பஞ்சு.

 

    • “நீ சொல்லிட்டா சரி பஞ்ச்! அப்புறம் மேரேஜ்லே இன்னும் என்னென்ன ஐட்டம் இருக்குது?”

 

    • “காசி யாத்திரை போறது இன்னொரு ஐட்டம். அது ரொம்ப வேடிக்கையாயிருக்கும்” என்று குறுக்கிட்டார் அம்மாஞ்சி.

 

    • “அது என்ன அது?”

 

    • “மாப்பிள்ளை பெனாரஸ் டுர் போறதுக்கு காசி யாத்திரைன்னு பேரு” என்றார் அம்மாஞ்சி.

 

    • “மாப்பிள்ளை எதுக்கு பெனாரஸ் டூர் செய்யனும்?… மேரேஜ் டயத்துலே அவர் டூர் போயிட்டா அப்புறம் மேரேஜ் எப்படி நடக்கும்?”

 

    • “டூர் போக மாட்டார். கல்யாணத்தன்று மாப்பிள்ளை காசி யாத்திரை புறப்பட்டுப் போவது என்பது எங்க மேரேஜ்லே ஒரு கஸ்டம். அவ்வளவுதான். கொஞ்ச தூரம் போயிட்டு அப்புறம் திரும்பி வந்துவிடுவார். இங்கே அமெரிக்காவிலே பனாரஸ் கிடையாதே! அதனாலே யூனியன் ஸ்டேஷன் பக்கமாகக் கொஞ்சதூரம் போயிட்டுத் திரும்பி வந்துவிடட்டும்” என்றார் அம்மாஞ்சி.

 

    • “உங்க மேரேஜ்லே ரொம்பப் பெகூலியர் கஸ்டம்ஸ் எல்லாம் இருக்குதே! எல்லாம் ரொம்ப ரொம்ப வேடிக்கையாயிருக்கும் போல இருக்குதே!”

 

    • “அதை ஏன் கேட்கிறீங்க? அப்புறம் ஊஞ்சல், மாலை மாற்றுதல், பாலிகை விடுதல், நலங்கு இடுதல்– இப்படி எவ்வளவோ கஸ்டம்ஸ் இருக்குது. இன்னொரு சமாசாரம். சம்பந்தி சண்டைன்னு ஒன்று வரும். அதுதான் கல்யாணத்திலேயே முக்கியமான ஐட்டம்.”

 

    • “மை காட்! எதுக்கும் தாலி கட்டறதிலேருந்து முன்னாடியே இதுக்கெல்லாம் ஒரு ரிஹர்ஸல் நடத்திப் பார்த்துடலாமே!” என்றாள் மிஸஸ் ராக். –

 

    • “வேண்டாம் மேடம்! தாலி கட்டறத்துக்கு எல்லாம் ரிஹர்ஸல் நடத்த முடியாது! ஒரு தரம் கட்டினால் கட்டினதுதான். ரியலாத்தான் கட்டணும்.”

 

    • “அப்படின்னா சரி… இன்னும் மெட்ராஸிலிருந்து என்னென்ன வரணும்?”

 

    • “ஸாஸ்ட்ரீஸ் தெளஸண்ட்! வடு மாங்காய் ஒன் லாக். தொன்னை ஒன் மில்லியன். சேமியா முன்னூறு பெட்டி” என்றான் பஞ்சு. –

 

    • “தெளஸண்ட் ஸாஸ்ட்ரீஸ் கிடைப்பாங்களா?”

 

    • “ஒ1 மயிலாப்பூர் டாங்கண்டையே ஐந்நூறு பேர் கிடைப்பாங்க. மாம்பலம் சிவா விஷ்ணு டெம்பிளண்டே முன்னூறு பேர் கிடைப்பாங்க. ட்ரிப்ளிகேன் பிக் ஸ்ட்ரீட் கார்னர்லே இருநூறு பேர் கிடைப்பாங்க. அதெல்லாம் பாப்ஜிக்குத் தெரியும். அசகாய சூரன்! பிளேன்லே ஏற்றி அனுப்பிடுவான். ஆகாய விமானத்திலே ட்ராவல் பண்றதுக்கு அநேக சாஸ்திரிகள் ஆசைப்படுவாங்க?”

 

    • “சரி, வடுமாங்கா ஒன் லாக் வேணுமா?”

 

    • “அது ரொம்ப டேஸ்ட்டாயிருக்கும். அதைச் சாப்பிட்டுப் பார்த்தீங்களானா ஒன் லாக் என்ன, ஒன் மில்லியனே வரவழைக்கச் சொல்லுவீங்க.”

 

    • “என்ன காஸ்ட் ஆகும்?”

 

    • “தெளஸண்ட் டென் டாலர்தான்!”

 

    • “அவ்வளவுதானா? வெரி சீப்! ஒன் க்ரோர் அனுப்பச் சொல்லிடு. ஸ்டாக்லே இருக்கட்டும். அப்புறம்?…”

 

    • “தொன்னை ஒன் லாக்! தொன்னைங்கறது கப் மாதிரி இருக்கும். அதிலே பாயசம், ரசம் – ஐஸ்க்ரீம் எல்லாம் வெச்சுக்கிட்டுச் சாப்பிடலாம்.”

 

    • “பாயசம்னா?”

 

    • “பாயசம்னா அது ஒரு லிக்விட் ஸ்வீட்! சேமியா பாயசம் வில் பி வெரி நைஸ்!” என்றான் பஞ்சு.

 

    • “சேமியா பாயசமும் வேண்டாம். ரஷ்யா பாயசமும் வேண்டாம். இண்டியன் பாயசமே போடச் சொல்லு” என்று குறுக்கிட்டாள் லோரிட்டா.

 

    • “சேமியா என்றால் அது ஒரு தேசம் இல்லை. வர்மிஸெல்லி…” என்றான் பஞ்சு.

 

    • “அப்படியா! அப்ப சேமியா பாயசமே செய்யட்டும்” என்றாள் லோரிட்டா.

 

    • “டம்பர்ட்டன் ஓக்ஸ் பங்களாவிலே கோல்ட்ஸ்மித்ஸ் ஜ் வெல்ஸ் செய்துகிட்டிருக்காங்க. பார்க்கலாம் வரீங்களா?” என்று அழைத்தாள் மிஸஸ் மூர்த்தி.

 

    • “ஓ போய்ப் பார்க்கலாமே! கேதரின், லோரிட்டா, மிஸ் கால் பர்ட், ஹெப்பர்ன், டயானா எல்லாரையும் கூப்பிடுங்க… வரட்டும்” என்றாள் மிஸஸ் ராக்.

 

    • மிஸஸ் ராக்ஃபெல்லரும் அவருடைய உறவினர்களும் டம்பர்ட்டன் ஓக்ஸ் மாளிகைக்குள் நுழைகிறபோதே சந்தன வாசனை கம்மென்று வீசியது. அங்கே போடப்பட்டிருந்த புதிய தென்னங்கீற்றுப் பந்தலின் மணத்துடன் சந்தன வாசனையும் கலந்து வீசியபோது மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு அந்தக் குளிர்ந்த சூழ்நிலை மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

 

    • “இங்கேதான் ஸாண்டல்வுட் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். கல்யாணத்துக்கு வருகிற அத்தனை பேரும் சந்தனம் பூசிக் கொள்வார்கள்” என்றான் பஞ்சு.

 

    • சந்தனம் அரைப்பவர்களைச் சற்று நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் மிலஸ் ராக்ஃபெல்லரும் அவருடைய உறவினர்களும். சந்தனத்தைக் கையில் எடுத்து முகர்ந்துவிட்டு, “திஸ் இஸ் ஒண்டர்புல்! லவ்லி ஸ்மெல்! இவர்களும் சந்தனம் பூசிக் கொண்டு அரைப்பதுதானே?” என்று கேட்டனர்.

 

    • “அப்புறம் அரைக்கிற சந்தனமெல்லாம் இவர்களுக்குத் தான் சரியாயிருக்கும். நமக்கெல்லாம் மிஞ்சாது!” என்றார் அம்மாஞ்சி.

 

    • “நகைங்களை பார்க்கலாமா?” என்று கேட்டபடியே கோல்ட்ஸ்மித்துகள் நகை செய்யுமிடத்துக்குச் சென்றாள் மிலஸ் ராக். அங்கே அத்தையும், பிள்ளைக்கு மாமியும் ஆசாரிகளுக்கு அருகிலேயே உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட மிஸஸ் ராக்ஃபெல்லர், “நீங்க நகை செய்யறதைப் பார்த்ததில்லையா? இங்கேயே உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறீர்களே? எங்களுக்குத்தான் இது வேடிக்கை. உங்களுக்குக் கூடவா?” என்று கேட்டாள்.

 

    • ஆச்சாரியிடம் தங்கத்தைக் கொடுத்துவிட்டால் அப்புறம் அப்பால் இப்பால் போக மாட்டார்கள் எங்கள் ஊர்ப் பெண்மணிகள். கண் கொட்டாமல் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். நகை பேரில் அவர்களுக்கு அத்தனை ஆசை!” என்று மிஸஸ் மூர்த்தி சிரித்துக் கொண்டே கூறினாள். மிஸஸ் ராக்ஃபெல்லருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் நகைகளைக் கண்டபோது, மகிழ்ச்சி தாங்கவில்லை. எல்லா நகைகளையும் எடுத்துத் தலையிலும், காதிலும், கழுத்திலும் பொருத்தமில்லாமல் வைத்துப் பார்த்துக் குதூகலப்பட்டனர். ஒருத்தி ஒட்டியாணத்தைத் தலையிலே மாட்டிக் கொண்டு, “இது என் தலைக்கு ரொம்பப் பொருத்தமாயிருக்கிறது”என்றாள்.

 

    • “ஓ! நீ லேடி நாரிக்ரூவாஸ் மாதிரி இருக்கே!” என்று கூறினாள் மிஸஸ் ராக்பெல்லர்.

 

    • “லேடி நாரிக்ரூவாஸ் என்றால் யார்?” என்று கேட்டனர் அவர்கள்.

 

    • “அவர்கள் இண்டியாவிலிருக்கிறார்கள். பேவ்மெண்ட் ராணிஸ் ரொம்ப அழகாயிருப்பாங்க. பியூட்டிபுல் அண்டு வேல் யுபிள் ஜ்வெல்ஸ் வேர் பண்ணியிருப்பாங்க. டீத் ரொம்ப டார்க்கா யிருக்கும். லேடீஸ் முதுகிலே பெளச் இருக்கும். பெளச்லே குழந்தை இருக்கும். அவங்களைப் பார்த்து டாக்ஸ் பார்க் பண்ணும். அது ரொம்ப வேடிக்கையாயிருக்கும். நெக்ஸ்ட் வீக் ஆயிரம் நாரிக்ரூவாஸ் ப்ளேன்லே வரப் போறாங்க. ஜான்வாஸத்துக்கு லைட் தூக்கப் போறாங்க” என்றாள் மிஸ்ஸ் ராக்.

 

    • “ஜாலி, ஜான்வாஸ்லே நாரிக்ரூவாஸ், பார்க்கலாம்” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தனர் மற்றவர்கள்.

 

    இந்தச் சமயத்தில், “காட்டன் சார்! உங்களுக்கு ட்ரங்க் கால் வந்திருக்கிறது” என்றார் அம்மாஞ்சி. பஞ்சு திரும்பிப் பார்த்தான். சற்றுத் தொலைவில் ஒய்யாரமாக நின்று கொண்டிருந்த லல்லி புன்னகையோடு பஞ்சுவைக் கை காட்டி அழைத்தாள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35

35 இரண்டு நாட்களுக்கு முன்பே அதிகாலை நேரத்தில், யார் கண்ணிலும் படாமல், மீனாட்சியை வணங்கி விட்டு, தன் தந்தையிடமும், கமலம் மற்றும் மூர்த்தியிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்திருந்தாள் சுஜி. தனக்கு உபகார சம்பளம் வழங்கி, படிப்பதற்கு உதவி செய்த தொண்டு நிறுவனத்திற்கு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 45ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 45

உனக்கென நான் 45 “ம்ம் அன்னிய இம்பிரஸ் பன்னுங்க” என சுவேதா கூற அன்பரசி “வேணாம் அன்னி என்று பதறினாள். சந்துருவோ “ம்ம் சரி நான் பன்னுறேன்! ஆனாஙஎன்ன கிப்ட் கொடுப்காங்க உங்க அன்னி” எனறான். “எங்க அன்னியே உனக்கு கிப்ட்தான்டா