Tamil Madhura கதைகள் ஒரு காதல் ஒரு கொலை

ஒரு காதல் ஒரு கொலை

வணக்கம் தோழமைகளே,

நமது தளத்தில் தனது கதையைப் பதிவிட வந்திருக்கும் எழுத்தாளர் சாயி பிரியதர்ஷினி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். சாயி ஏற்கனவே பத்திரிகைகளில் சிறுகதை  மற்றும் கட்டுரை எழுத்தாளராக முத்திரை பதித்தவர். ‘ஒரு காதல் ஒரு கொலை’ எனும் இந்தத் த்ரில்லர் ஒரு வித்யாசமான அனுபவத்தை வாசகர்களுக்குத் தரும் என்பதில் ஐயமில்லை. படியுங்கள், படித்துவிட்டுத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் 

அன்புடன்,

தமிழ் மதுரா 

 

ஒரு காதல் ஒரு கொலை

 

Image result for girl with knife

 

கனவு ஆறு – டைரி குறிப்பு

அவள் என்னை பார்த்துக்கொண்டே இருந்தாள். அவள் கையில் எத்தனை நீளமான கத்தி! கத்தியின் ஒரு பகுதி பளபளப்பாக கண்ணை பறித்தது. அழகான மர வேலைப்பாடுடன் கூடிய கைப்பிடி. கைப்பிடியில் நட்சத்திர குறியீடு.

லேசாய் சிரித்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதயத்தின் ஒரு பகுதி கத்தியின் முனையில். அவள் முகத்தில் சில துளிகள் ரத்தம் தெறித்தது. அவள் இதழ்களிலும். அவள் கழுத்து, கைகள் எல்லாம் என்னுடைய ரத்தம். சிவப்பு நிற மாடர்ன் ஆர்ட் மாதிரி ரத்தம் சட்டையின் ஒரு பகுதியை நனைத்துக் கொண்டிருக்கிறது. கோலம் போட்டது போல தரையிலும். சட்டென குனிந்து பார்த்தேன். சிறிய மாமிச துண்டு போல இதயத்தின் சதைப் பகுதி கீழே கிடந்தது.

என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கறதுகுள்ள எனக்கு மூச்சு திணறியது. சட்டுன்னு உடம்பு எக்கச்சக்கமா சூடாகி, (ரம்யாவ முதல்ல பாத்த அன்னிக்கு ஆனது மாதிரி) உடனே ஜில்லுன்னு ஆகி போச்சு. கொஞ்சம் கொஞ்சமாக சாகறேனோ?

எனக்கு புரியல. சாவோட கடைசி வினாடிகளில்… ஹக்க்.. யாரோ நெஞ்சு மேல ஏறி மிதிப்பது மாதிரி, இதென்ன புதுசா அப்படின்னு தெரியறதுகுள்ள, முழித்துக் கொண்டேன்.

மார்பின் மீது ரம்யா சாய்ந்து, என்னை இறுக்கமா கட்டிட்டு தூங்கிட்டு இருக்கா. ரம்யா என்னோட காதல் மனைவி.

அப்போ இதெல்லாம் கனவா?! ஆமா கனவு தான். இருந்தும் கொஞ்ச நேரத்துக்கு  சரியாக மூச்சு விட முடியவில்லை. அப்படியே கைய எட்டி ஃபோன் எடுத்து டைம் பாத்தேன். மணி அதிகாலை, இல்ல நள்ளிரவு 4 மணி. நாங்க தூங்க போனதே ஒரு மணிக்குதான்.

இதையெல்லாம், டைரில குறிப்பாக, எழுதி வெச்சிருக்கான்.

இந்த கனவு கண்டவன். நீங்க இவ்ளோ நேரம் படிச்சது இன்னிக்கு அவன் எழுதி வெச்சது தான். சரி இதுல என்ன பிரச்சனைன்னு பாக்கறீங்களா? இது நவீனுக்கு வந்த ஆறாவது கனவு. இதே மாதிரி, இதே நேரத்தில் வந்த அத்தனை கனவும், கொஞ்சம் கூட, கூட குறைச்சல் இல்லாம, ஒரு அச்சு பிழை கூட வராம அப்படியே நடந்திருக்கு. இப்போ புரியுதா? அவன பாக்கலாம்.

ரம்யா மேல தீராக் காதல். அதுக்கு நிறைய காரணம். அவள் வந்தப்புறம் அவனோட வாழ்க்கை தலை கீழா மாறி போச்சு. முன்னாடி வந்த அஞ்சு கனவுகளையும் அவன் யோசிச்சுப் பார்த்தான். உங்க முன்னாடி முன்னாடி கருப்பு கலர்ல சுருள் சுருளா கற்பனை பண்ணி பாத்துக்கோங்க. நவீனோட அந்த அஞ்சு கனவுகள் என்னன்னு தெரிஞ்சிக்க போறோம்.

மூன்று வருடங்களுக்கு முன் – கனவிற்கு சில நாட்களுக்கு முன்

நவீன் நெட்வொர்க்கிங் என்ஜினியர். இரண்டு நண்பர்களோட சென்னையில் வீடு லீசுக்கு எடுத்து தங்கி இருக்கிறான். இன்னிக்கு முப்பதை நெருங்கிட்டு இருக்கற இளைஞர்கள் மத்தில கொஞ்சம் வித்தியாசமானவன். நல்ல சம்பளம். எவ்வளவு செலவு பண்ணாலும் கொஞ்சம் மிச்சம் இருக்கற அளவுக்கு. ஏன்னா தண்ணி தம் பழக்கம் இல்ல. அவனுக்கு பிடித்தது. அழகான பெண்களை எல்லாம் ரசிப்பது. புத்தகங்கள் நிறைய படிப்பான். படங்கள் பார்ப்பது. சொல்ல மறந்துட்டேனே. பயணங்கள். எல்லா ஆண்கள் மாதிரி பைக் பிரியன். லாங் டிரைவ் பிடிக்கும். மத்தபடி ரொம்ப சாதரணமான பையன். வாழ்க்கைல பெரிசா எந்த கஷ்டமும் பட்டது இல்ல. பெரிசா கனவு அப்படி இப்படின்னுலாம் எதுவுமே இல்ல. எல்லாமே சீரா இருந்தது.

அவனோட ஆசைகள் – காதல், கல்யாணம், செக்ஸ், குழந்தைகள், குடும்பம்… நவீனுக்கு எந்த மாதிரி பொண்ணு பிடிக்கும்னு கேட்டா “பாத்தா உடனே வயித்துக்குள்ள மட்டும் இல்ல. உடம்பு முழுக்க பட்டாம்பூச்சி பறக்கணும்” அப்படின்னு சொல்லுவான். கண்டதும் காதல் டைப். ஆனா பெரிசா எந்த சிக்கலும் குழப்பமும் இல்லாதவன் நவீன். எல்லாமே ரம்யாவ பாக்கறது வரைக்கும்.

ரம்யாவை அவன் முதலில் பார்த்தது ஒரு சாவு வீட்டில். ஒரு நாள், அவனோட சீனியர் ஆக்சிடன்ட்ல இறந்துட்டாருன்னு செய்தி வந்து, உடனே கிளம்பி போனவர்கள்ல நவீனும் ஒருத்தன். கூடவே இருந்து ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சி குடுத்து ரொம்ப உதவியா இருந்தான், அவரோட காரியம் முடியற வரைக்கும்.

ரம்யாவ அங்க தான் மொதல்ல பார்த்தான். பார்த்த உடனே ஒரு ஸ்பார்க். ஒரு ஈர்ப்பு. அப்படியும் இல்லன்னா ஹார்மோன்கள் செய்த ரகளை. அப்புறம் கண்டதும் காதல். ரம்யாவோட கண்கள்ல ஏதோ இருக்கு. கொஞ்சம் கூட பிரவுன் நிறக் கலப்படமே இல்லாம கருப்புன்னா அப்படி ஒரு கருப்பான கருவிழிகள். அதத்  தொட்டு மை வெச்சிக்கலாம். அதை விட ஒரு கருப்பு உலகத்துலேயே இல்லன்னு நவீன் சவால் விடுவான்.

அவளையே பார்த்துட்டு இருந்தான். எவ்ளோ நேரம் பார்த்தான்னு அவனுக்கே தெரியல. சட்டுன்னு சுய நினைவுக்கு வந்தது மாதிரி இருந்தது. அவள் இவனைப் பார்த்து சிரித்தாள். இல்லன்னா அவனோட பிரமையா!

ஒரு விஷயம் பாத்தீங்கன்னா, ரம்யா இவனோட வாழ்க்கைல வந்த உடனே தான் இப்படி விபரீதமான விஷயங்கள் எல்லாம் நடக்க ஆரமிச்சது. ரொம்ப சரியா சொல்லணும்னா எதுவுமே விபரீதம் இல்லை. நவீனோட கடைசி கனவு தவிர. அய்யய்யோ… நிஜமாவே கடைசி கனவா?

முதல் கனவு – டைரி குறிப்பு

ரம்யாவை சந்தித்த சில நாட்களில் கழித்து அவனோட முதல் கனவு!

சீலிங்போட்டு மூடி இருந்த அவனோட ரூம்ல திடீர்னு எல்லாம் காணாம போச்சு. மேல பாத்தா ஒரே இருட்டு. மினுமினுன்னு மின்மினிபூச்சி மாதிரி.. ஜில்லுன்னு ஒரு இடம். தூரத்துல ஏதோ பாட்டு சத்தம். ஏதோ ஒரு பார்ட்டில மறுபடியும் ரம்யா.

பார்த்த உடனே காதல்! மீண்டும் காதல்! வயித்துக்கும் தொண்டைக்கும் நடுவில் ஒண்ணு இல்ல. ஓராயிரம் ஏதோ உருண்டது. ரெண்டு ராட்ஷச கழுகு அவன புடிச்சு வானத்துல தூக்கிட்டு போனா பறக்கற உணர்வு வருமே. அப்படியே பக்கத்துல இருந்த எல்லாம் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகி, எதிர்ல ரம்யா மட்டும் தான் தெரிஞ்சா. நவீன் ஏதோ பேச வந்தான். அவன் வாயசைப்புக்கு குரல் ஒத்துழைச்சு அது சத்தமா வெளில வரதுக்கு முன்னாடி,

சிகப்பு நிற சல்வாரில் ரம்யா பதுமை மாதிரி இருந்தாள்.  “என்னோட கண்ணு தான அழகா இருக்குன்னு சொன்னீங்க” என்று ரம்யா அவனிடம் கேட்டாள். முழிப்பு வந்து விட்டது.

அன்று மாலை அவனோட அலுவலக நண்பன் ஒருத்தன் பார்ட்டி. அங்கே சொல்லி வெச்ச மாதிரி, ரம்யா, சிகப்பு ட்ரஸ்… அதே பதுமை.. அவனைப் பார்த்து அவளே அருகில் வந்தாள். சிரித்துக் கொண்டே ஹாய் என்று சொல்லி கை நீட்டினாள். அவன் கை நீட்டாமல் ஏதோ சொல்ல வந்தான்.

இன்னும் பெரிதாய் சிரித்து, “என்னோட கண்ணு தான அழகா இருக்குன்னு சொன்னீங்க” என்றாள்.

கனவு பலித்து விட்டது. நவீனுக்கு ஆச்சர்யம், பயம், ஆர்வம், நடுக்கம் எல்லாமே. இவளென்ன வசியக்காரியா? இல்ல ஏதாவது மாயம் பண்றாளா? கேள்விகளையும் யோசனைகளையும் வெளியே காட்டாமல் அவளிடம் கடலை வறுத்தான். அவளும் லேசாக.

—-

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, ஒரு வருடம் அவனோட காதல் வளர்ந்து கொண்டே வந்தது. இன்னும் அவளிடம் சொல்லவில்லை.

முந்தைய நாள் நவீனுக்கு பிறந்த நாள். அதோடு ப்ரோமோஷன். அலுவலகம் நண்பர்கள் ட்ரீட் பார்ட்டின்னு நடு இரவு தான் வீட்டுக்கு வந்தான். தூங்குவதற்கு ஒரு மணி ஆகி விட்டது.

ரம்யா இல்லாத கொண்டாட்டங்கள் எல்லாமே. அவள் வேலை விஷயமாக இரு நாட்கள் வெளியூரில். அதற்கு ஈடு குடுப்பது போல அதிகாலை கனவு.

கனவு இரண்டு – டைரி குறிப்பு

தனியாவே தூங்கி பழக்கப்பட்ட நவீன், அன்னிக்கு கனவுல ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் மாதிரி, அவனுக்கு மிக மிக அருகில் ரம்யா. புரண்டு படுக்கும் போது ரம்யாவின் மோதிரம் நிரடியது. தலை தூக்கிப் பார்த்த போது  அவன் டிரஸ்ஸிங் டேபிளில் ஒரூ அழகான கைப்பை, இரவு விளக்கு வெளிச்சத்தில். வியர்த்து கொட்டி எழுந்தான். டேபிளை பார்த்தான். அங்கே ஒன்றும் இல்லை.

கனவு வந்த அந்த இரவு பத்து மணிக்கு ரம்யாவின் தரிசனம் அவன் வீட்டில். நண்பர்களில் ஒருவன் நைட் ஷிஃப்ட். மற்றொருவன் ஹாலில். வாயை பிளந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அறையில் சாப்பிட்டு கொண்டிருந்த நவீனுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. நுழைந்து கதவை தாளிட்டாள். பையை அவன் மீது தூக்கி அடித்தாள். மெதுவாய் எடுத்து டிரெஸ்ஸிங் டேபிள் மீது வைத்தான்.

பர்த்டே, ப்ரமோஷன் எதுவும் என்கிட்டே சொல்ல மாட்டீங்களா? – ரம்யா

அவளுடைய கண்களை பார்க்க முடியவில்லை. நிச்சயமா வசியம் பண்றா என்ன அப்டின்னு மனசுக்குள்ள முனகி கொண்டான் நவீன்.

பதில் சொல்லவில்லை. அவளே தொடர்ந்து, நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம். ஐ லவ் யூ. என்று சொல்லிவிட்டு கிளம்ப போனாள். போகவில்லை.  போகவிடவில்லை. அவனுடைய கனவு பலித்து விட்டது. ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்.

அதிகாலையில் புரண்டு படுக்கும் போது, அவளுடைய மோதிரம் நிரடியது. சிரித்துக்கொண்டே அவளை இறுக்கமாக அணைத்து தூங்கினான்.

சில வாரங்கள் கழிச்சு, ஒரு நாள் நைட் டின்னர் முடிச்சு அவளோட வீட்டுக்கு போகறதுக்கு முன்னாடி ரம்யாவின் அழுகைல மை எல்லாம் கரைஞ்சு போய் இருந்தது. அவளை அணைத்து சமாதானம் பண்ணும்போது, அந்த கண்கள் கொஞ்சம் கரைந்து அவனுடைய சட்டையில் ஒட்டி இருந்தது. வீட்டுக்கு போன அப்புறமும் அழுகை தீரவில்லை. ரெண்டு மணி நேரம் மறுபடியும் ஃபோன்ல சமாதானம். கல்யாணத்துக்கு அப்பா ஒத்துக்கலன்னு ரம்யா அழுகை. அவன் அவளுடைய அழுகையில் கரைந்து உருகி இரவெல்லாம் யோசித்து விழித்து, ஒரு வழியாக அதிகாலை உறங்கி போனான்.

கனவு மூன்று – டைரி குறிப்பு

“அங்கிள் என் சைட்ல எந்த பிரச்னையும் இல்ல. நான் இன்னும் மூணு மாசத்துல ஆன்சைட் போய்டுவேன். மினிமம் சிக்ஸ் மந்த்ஸ் அங்க தான். என்ன மிஸ் பண்ணா ரம்யாக்கு நல்ல பையன் கிடைக்க மாட்டான். இனி நீங்க தான் சொல்லணும். தயவு செஞ்சு என்ன சினிமா டயலாக் எல்லாம் பேச வெக்காதீங்க” யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான். ஃபோன் வைத்தவுடன் ரம்யாவின் மெசேஜ். “என்னிக்கு கல்யாணம்” என்று. வழக்கம் போல விழித்து விட்டான்.

இந்த முறை பயம் இல்லை. வாயெல்லாம் பல்லாக காத்திருந்தான். சின்ன மாற்றம் கூட இல்லாமல், சாயங்காலம் நாலு மணிக்கு, மேல சொன்னதை எல்லாம் ரம்யாவோட அப்பாகிட்ட சொன்னான். ஃபோன் வைத்தவுடன் ரம்யாவின் மெசேஜ். “என்னிக்கு கல்யாணம்”

இந்த கனவுல நவீன் ஒரு விஷயம் மறந்துட்டான். அவனோட ஆன்சைட். கொஞ்ச நாளுக்கு பிறகு அதை உணர்ந்தான். ஒரு வேலை சூன்யம் ஏதாவது வெச்சு மயக்கிட்டாளோ அப்படின்னு லேசா பயம் வந்தது.

ஜெர்மனியில் ஆறு மாதம் வாசம். புத்தம் புதுசாய் ரம்யாவுடன், புது ஊர், புது மக்கள், எல்லாமே புதுசு. ரம்யாவும் ஒவ்வொரு நாளும் புதியதாய் இருந்தாள்.  அவனோட வாழ்க்கை ரொம்ப அழகாகிட்டே வந்தது. பக்கத்து வீட்டில் வசிப்பவரின் அழைப்பதழின் பேரில் அவர் திருமண நாள் விழாவில் கலந்து கொண்டு வந்து நள்ளிரவில் தான் வீட்டுக்கு வந்தார்கள்.

கனவு நாலு – டைரி குறிப்பு

காலைலேயே அழகாய் விடிந்தது. அலுவலகம் விடுமுறை. மேபில் இலைகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டு இருந்தது. அந்த வீதி வண்ண வண்ண இலைகளால் நிரம்பி கிடந்தது. ரம்யா அவனருகில் வந்து, வசீகரமான புன்னகை ஒன்றை உதிர்த்து அவனை முத்தமிட்டாள். மரத்தில் இருந்து உதிர்ந்த ஒரு இலைகள் ஒன்றோடொன்றாய் ஒட்டி உரசி காற்றில் சுற்றி சுழன்று தரையில் விழுந்தது. அப்படியே அவர்கள் இருவரும் மேகங்களுக்கு நடுவில் மிதந்து கொண்டே, பறந்து கொண்டே…

விழிப்பு வந்ததும் எங்கிருக்கிறான் என்று உணர முடியவில்லை.

லேசாய் விடிந்தும் விடியா காலையில், ரம்யா வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்து வசீகரமாய் புன்னகை ஒன்றை உதிர்த்தாள். அந்த இலைகளாய் ரம்யாவும் நவீனும்.

மீண்டும் சென்னை வாசம். நவீனின் இந்த கனவு அவனை குழம்ப வைத்தது. ரம்யாவின் வசீகரம் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டே போனது. அவனை பெரிதாக ஆக்கிரமத்துக் கொண்டது போல உணர்ந்தான். மொத்தமாக வசியம் செய்து விட்டாள். அவளை நினைக்காமல் இருக்கவே முடியவில்லை.

புது ப்ராஜக்ட் விஷயமாக இரண்டு நாட்கள் ஆபீசிலேயே தங்கினான். மூன்றாம் நாள் அதிகாலை தான் வீட்டுக்கு வந்தான். மாலை ஐந்து வரை தூக்கம். பிறகு குளியல், உணவு, ரம்யாவோடு கொஞ்சல், மீண்டும் உணவு என்று தூங்குவதற்கு நள்ளிரவு ஆனது.

கனவு ஐந்து – டைரி குறிப்பு

வித்தியாசாமான கனவு இது. கனவில் இந்த எண்கள் அவனை துரத்திக் கொண்டே வந்தது. 131313131313,.. அந்த என் பெரிதாகி அவனை சுற்றி வளைத்தபோது முழித்துக் கொண்டு விட்டான்.

மறுநாள் அலுவலகத்தில் அவனுக்கு ஒரு ஈமெயில் வந்தது. அதில், அவனுடைய பூர்வீக சொத்து தகராறில் அவனுக்கு சாதகமாக தீர்ப்பு. அதை அவன் மறந்தே போயிருந்தான். அவனுடைய பங்கு என்று ஒரு கோடி, முப்பத்தி ஒரு லட்சம், முப்பத்தி ஒரு ஆயிரம் (ருபாய் 1,31,31,௦௦௦) கிடைச்சிருக்கு என்றும், நிலமாகவோ இல்லை வேறு எப்படி வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று செய்தி வந்திருந்தது.

நவீன் இரண்டாம் பிறவி எடுத்தான். ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு ரம்யாவுடன் அவளுக்கு எங்கெல்லாம் போக வேண்டுமோ எங்கெல்லாம் சுற்றினான். அவனைப் போல ஒரு அதிர்ஷ்டசாலி உலகத்திலேயே இல்லை என்று எல்லாம் ரம்யாவையே சேரும் என்றும் அவளை கொண்டாடினான்.

அத்தனை சந்தோஷமும் வீண் போல, நவீனுடைய பிறந்த நாளை ஒட்டி, நேற்று சின்னதாக பார்ட்டி முடித்து அதிகாலை வீட்டுக்கு வந்து உறங்கிய கொஞ்ச நேரத்தில், கதையில் முதன் முதலில் நீங்கள் படித்த கனவு. நவீன் ஆறு கனவுகளையும் மனதிற்குள் பார்த்து, பயந்து நடுங்கி கிடந்தான்.

என்று அந்த புரொபசர் கூறி முடித்தார்.

அந்த அறையில் அமர்ந்திருந்த பதிமூன்று பேரும் ஏ.சி அறையிலும் வியர்த்து வழிந்து கொண்டு…

அவர்கள் முதுகலை சைக்காலஜி  மாணவர்கள். பாடம் நடத்தியது தென் இந்தியாவின் புகழ் பெற்ற மன நல மருத்துவர் மற்றும் அந்த கல்லூரியின் சிறப்பு பேராசிரியர். ஒரு கேஸ் ஸ்டடி பண்ணிக்கொண்டிருந்தார்.

சார். அப்புறம் அந்த நவீனுக்கு என்ன ஆச்சு? ஒரு மாணவன் கேட்டான்.

நீங்களே எதாவது முயற்சி பண்ணுங்க – பேராசிரியர் சிரித்தார். யாரிடமும் பதில் இல்லை.

இது கொஞ்சம் சிக்கலான கேஸ். புரிஞ்சிக்க நேரம் ஆச்சு. ஆனா என்னன்னு தெரிஞ்ச உடனே மீதி எல்லாம் சுலபமா போச்சு. திடீர்னு ஒரு நாள் சாயந்திரம் நவீன் என்கிட்டே வந்து என்னோட வைஃப் இன்னிக்கு என்ன கொன்னுடுவா. அதுக்கு என்னோட கனவுகள் தான் காரணம்னு சொன்னார். அவர் கிட்ட என்ன நடந்ததுன்னு கேட்டப்போ, நான் மேல சொன்ன எல்லாத்தையும் ப்ளஸ் அவரோட டைரியும் எனக்கு குடுத்தார்.

கொஞ்சம் விசாரிச்சப்போ அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல, ரம்யா அவரோட கற்பனை காதலி, கற்பனை மனைவின்னு தெரிஞ்சிருக்கு. மாணவர்களுக்கு அதிர்ச்சி!

அப்போ இது “delusion” அப்டின்ற மாதிரி இல்லாத விஷயத்த இருக்கற மாதிரி கற்பனை பண்ணிக்கறதா புரோபஸர்? – ஒரு மாணவி கேட்டாள்.

இல்ல. வேற ஏதாவது யோசிங்க. இது மன நலம் சம்மந்தப்பட்ட எந்த பிரச்னையும் இல்ல. அவர் ரொம்ப நார்மலானவர். ஆனா, அந்த கொலை கனவு மட்டும் பெரிசா பாதிச்சு பயந்து போய் கவுன்சிலிங்க்கு வந்தார்.

சிறிது நேரம் கழித்து, அவரே தொடர்ந்தார்.

வாழ்க்கை ஒரே மாதிரி இருக்கும் போது சிலருக்கு எதாவது புதுசா பண்ணனும்னு தோணும். ஆனா வாய்ப்பு கிடைக்காது. அந்த மாதிரி ஒருத்தர் தான் நவீன்.

நவீனுக்கு ஹை ஸ்கூல்ல இருந்து காலேஜ் முடிக்கற வரைக்கும் படிக்கணும்னு நிறைய பிரஷர். அதனால அவரோட தூக்கம் காணாமல் போச்சு. கிட்டத்தட்ட இன்சோம்னியா (தூங்க முடியாமல் தவிப்பது) மாதிரி. ஆனா, வேலைக்கு சேர்ந்த புதுசுல அவர் மறுபடியும் நார்மல் ஆகிட்டார். டெக்னிக்கல் ஃபீல்ட்ல இருக்கார். ஸோ, மனஅழுத்தம் அதிகம். குடி பழக்கம் இல்லை. என்ன பண்றது? அவரே அவருக்கு ஒரு மாய வலை பின்னிக்கிட்டார். அதுக்கு பேரு லூசிட் ட்ரீம்!

லூசிட் ட்ரீம் அப்படினா நீங்க என்ன கனவு காணறீங்கன்னு உங்களுக்கு தெரியும். அந்த கனவ நீங்க தான் உருவாக்கி, அதுக்கு உரு குடுத்து, பேர் குடுத்து, என்ன நடக்கணும்னு நீங்களே முடிவு பண்ணலாம். ஒரு கதை மாதிரி. அந்த மாதிரி தனக்கு ஒரு கற்பனை காதலி, மனைவி, வாழ்க்கைன்னு நவீன் கனவுல ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கிட்டார். நிஜ வாழ்க்கைக்கும், லூசிட் கனவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும். சில சமயங்கள் கனவுல நம்மளோட நிஜ வாழ்க்கைல நடந்த சில சம்பவங்கள் சேர்ந்து இன்னும் அழகா கனவு காணலாம். இது ஒரு வகைல ஆரோக்கியம். ஆனா, நிஜத்துக்கும் கனவுக்கும் நடுவுல மெல்லிசா ஒரு இழை தான் இருக்கு. அது மறக்கும் போது, நவீன் மாதிரி கொஞ்சம் அப்செட் ஆகி மருத்துவர் உதவி தேவைப்படும்.

இதுல பெரிய சுவாரஸ்யம், நவீனோட நிஜ வாழ்க்கைல நடந்த சம்பவங்கள் அடிப்படைலையே இந்த கனவுகள் கண்டு, அதை டைரியில் எழுதி இருக்கார். உதராணம், அவருடைய அலுவலக நண்பர் இறந்து போனது, அங்க ஒரு பொண்ண பாத்தது – நிஜம். ஜெர்மனி போனது நிஜம். அந்த சொத்து இவருக்கு கிடைச்சது நிஜம். மீதி எல்லாம் கற்பனை. அதே மாதிரி இந்த கனவுகள் எல்லாமே அவர் தூங்காம இருந்த இரவுகளில் கண்டது. ரெண்டு மாசத்துல இதெல்லாம் நவீனுக்கு புரிய வெச்சேன்.

சார் ஒரு டவுட். கனவுல அந்த பெண் ரம்யா. அப்படி அந்த பேரில் இல்ல உருவில் ஒரு பெண் நிஜமாவே இருந்தாரா? எதுக்கு கேக்கறேன்னா… – – ஒரு பெண் கேட்டாள்.

நீங்க இனிமே எந்த கேள்வி கேக்கணும்னாலும் நவீன் கிட்டே கேக்கலாம். ப்ளீஸ் வாங்க நவீன். நவீன் சிரித்துக்கொண்டே வந்தான். அறிமுகங்கள் நடந்தன. என்ன கேள்வி கேட்டம்மா? ப்ரொபசர் கேட்டார்.

அந்த பெண் எழுந்தாள். சிகப்பு நிற சல்வார். கருமையான விழிகள்!

நவீன் ஒரு நொடி உறைந்து போனான். கனவில் அவன் உருவகித்து வைத்த அதே பெண். அதற்குள் அவள் அருகில் வந்தாள். ஹாய் ஐயம் ரம்யா என்று கை நீட்டினாள். அவளை பார்த்து உறைந்து ஏதோ சொல்ல வந்து அவனுக்கு நாக்கு உலர்ந்தது.

மீண்டும் அவளை பார்த்தான். அவள் சிரித்து, “என்னோட கண்ணு அழகா இருக்குன்னு தான சொல்ல வந்தீங்க” என்றாள்.

அறையை சுற்றி நோட்டம் விட்டான்.

மேஜையில் அந்த கைப்பை!

சுவற்றில் வண்ண சித்திரங்கள், இலையுதிர்காலத்தை அழகாக பறைச்சாற்றும் புகைப்படம். இரண்டு இலைகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது போல.

திரும்பி ப்ரொஜெக்டரை பார்த்தான். கேஸ் ஸ்டடி நம்பர்: 1313

கதவு திறந்து ஒருவர் கேக் கொண்டு வந்தார். அப்போது ஒருவர் பேசிக்கொண்டு கடந்தார். ‘நான் ஆன்சைட் போறேன்.’

ப்ரொபசர் “இன்னிக்கு நவீன்க்கு பர்த்டே. இவரோடது சின்ன பிரச்சனை தான்.  அதனால அவர் கிட்ட பேசி உங்களுக்கு இது பத்தி ஒரு கேஸ் ஸ்டடி பண்ண கேட்டேன். உடனே சரின்னு சொல்லிட்டார். அதனால சின்ன செலிப்ரேஷன்”

செர்ரி கேக் அவன் முன்னால். ரம்யா சிரித்துக் கொண்டே நின்றாள்.

அவனைப் பார்த்தபடி. “கனவுல அந்த பெண் ரம்யா. அப்படி அந்த பேரில் இல்ல உருவில் ஒரு பெண் நிஜமாவே இருந்தாரா? எதுக்கு கேக்கறேன்னா… நான் தான் அந்த ரம்யா. அப்படி தான நவீன். ப்ரஃபசருக்கு சொல்லுங்க”

அவள் கையில் எத்தனை நீளமான கத்தி! கத்தியின் ஒரு பகுதி பளபளப்பாக கண்ணை பறித்தது. அழகான மர வேலை பாடுடன் கூடிய கைப்பிடி. கைப்பிடியில் அழகான நட்சத்திர குறியீடு…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 49ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 49

49- மனதை மாற்றிவிட்டாய் திவி ஆதியை அழைக்க பாட்டியும் தாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “அவன் இப்போத்தானே மா கிளம்பிப்போனான்.” “அவரு இன்னும் சாப்பிடலையே தாத்தா. போன் பாத்திட்டு இருந்தாரு. அதுக்குள்ள எடுத்து வெச்சிடலாம். வந்துடுவாருன்னு பாத்தேன்.” என அவள் கூற

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 40ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 40

40 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் “பிஸ்னஸ் பிரச்சனை முடிஞ்சது, பர்சனல் பிரச்சனைக்கு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” என நிதானமாக கேட்டாலும் அதில் இருந்த அழுத்தம் கோபம் செல்வம் அமைதியாக இருக்க அம்பிகா “கேக்கறான்ல சொல்லுங்க.. உங்கள கூட பொறந்த

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 67ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 67

உனக்கென நான் 67 சுவேதாவை கட்டாயமாக ஆபரேஷன் செய்துவிட்டு வருமாறு சுகுவுடன் அனுப்பிவைத்தான் சந்துரு. அவள் அழுதுகொண்டே சென்றது சந்துருக்கு வருத்தமாக இருந்தாலும் அபரேஷ்ன் முடித்து தங்களுடன் நீண்ட நாள் தங்கையாக வாழ்வால் என்ற தைரியத்துடன் தன் கண்ணீரை மறைத்துகொண்ட் அனுப்பிவைத்தான்.