Tamil Madhura தொடர்கள் ராணி மங்கம்மாள் – 14

ராணி மங்கம்மாள் – 14

14. இடமாற்ற எண்ணம் 

    • அப்போது சின்ன முத்தம்மாளின் இதயத்தில் தாய்ப் பாசத்துக்கும் விரக்திக்கும் இடையே ஒரு போராட்டம் மூண்டது. துணிவதும், தயங்குவதுமாக ஊசலாடிக் கொண்டிருந்த மனம் துணிந்து முடிவெடுத்திருந்தாலும் மறுபடியும் பாசமும், பிரியமும், அஞ்ஞானமும் குழம்பின. சிரமப்பட்டு வலிந்து முயன்று இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டாள் அவள்.

 

    • மறுபடியும் திரும்பி வந்து தன் கட்டிலில் படுத்தாள். சில விநாடிகளில் விழித்துக் கொண்ட பணிப்பெண் ஒருத்தி, “அம்மா! ஏதாவது வேண்டுமா?” என்று கேட்ட போது “ஒன்றும் வேண்டாம்! நன்றாகத் தூங்கவேண்டும். தூங்கப் போகிறேன் என்றாள் சின்ன முத்தம்மாள். பணிப்பெண் இந்த வார்த்தைகளில் எந்த வேறுபாடான அர்த்தத்தையும் காணவில்லை. சகஜமாக ஏற்று சகஜமாகவே புரிந்து கொண்டாள்.

 

    • பொழுது விடிந்தது. அரண்மனையில் ஒரே பரபரப்பு. சின்ன முத்தம்மாளுக்குப் பயங்கரமாக ஜன்னி கண்டிருந்தது. மரணத்தின் பிடியிலிருந்து அவளை மீட்க வைத்தியர்கள் போட்டி போட்டுக் கொண்டு முயன்றனர். பலிக்கவில்லை. ஜன்னி வேகத்தினைத் தாங்க முடியாமல் உயிர் நீத்தாள் சின்ன முத்தம்மாள்!

 

    • ராணி மங்கம்மாள் பேரக் குழந்தையை அப்போது கையிலெடுத்தாள். மறுபடி அக்குழந்தையை அதன் தாயிடம் விட முடியாமல் தானே வளர்க்க வேண்டியதாயிற்று. தாயாகவும், பாட்டியாகவும் இருந்து அக்குழந்தையை வளர்த்தாக வேண்டிய பொறுப்பு அவளிடம் வந்தது.

 

    • மறுபடியும் அந்த அரண்மனையில் தற்காலிகமானதோர் இருள் சூழ்ந்தது. இரண்டு பெரிய துக்க சம்பவங்கள் நேர்ந்து விட்ட திரிசிரபுரம் அரண்மனையில் இருப்புக் கொள்ளாமல் தவித்தாள் மங்கம்மாள். எங்கே திரும்பினாலும் மகன் ரங்ககிருஷ்ணனின் ஞாபகமும், மருமகள் சின்ன முத்தம்மாளின் நினைவும் வந்து வேதனைப்படுத்தின. மகனையும், மருமகளையும் நினைத்து உருகாமல் அவள் அந்தப் பெரிய அரண்மனையில் ஒரு விநாடி கூட நிம்மதியாய் இருக்க முடியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் மகன் ரங்ககிருஷ்ணனின் சிரிப்பொலி கேட்பது போல் பிரமையாயிருந்தது. அந்த அரண்மனை முழுவதும் மறைந்து போன அவ்விருவரின் நினைவுகளே எங்கும் நிரம்பிக் கிடந்தன. அரசியல் அநுபவங்களும், ஆட்சிப் பொறுப்புகளும் ஓரளவு அவள் மனத்தைக் கல்லாக்கியிருந்தன. இல்லாவிடில் அவளும் ஒரு பேதையைப் போல் இக்கொடுமைகளிலிருந்து விடுபடத் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும். பயந்து ஓடியிருக்கக்கூடும்.

 

    • புகழ் பெற்ற நாயக்க வம்சத்துக்கு ஒரு வாரிசை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையும் உள்ளார்ந்த திருப்தியுமே அவளை அப்படி எல்லாம் செய்யவிடாமல் அப்போது வாழ வைத்திருந்தன. நீறுபூத்த நெருப்பாக உள்ளே கனன்று கொண்டிருந்த துயரம் வெளியே தெரியவிடாமல் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள். மக்கள் அவளை வீராங்கனை என்றும், எவ்வளவு துயரங்களையும் தாங்கிக் கொண்டு ஆட்சிக் கடமைகளை ஆற்றக்கூடிய திடசித்தமுள்ளவள் என்றும் வானளாவப் புகழ்ந்தனர்.

 

    • ஆனால் அவளது மனம் எவ்வளவுக்குக் கவலையில் சிக்கித் தவிக்கிறது என்பது இராயசம் போன்ற இரண்டோர் அரண்மனை முக்கியஸ்தர்களுக்குத் தெரிந்துதான் இருந்தது. அவர்களிடம் அவளால் அதை மறைக்க முடியவில்லை.

 

    • ஒரு நாள் மாலை அரண்மனை மந்திராலோசனை மண்டபத்தில் ராணி மங்கம்மாளுடன் பேசிக் கொண்டிருந்த போது இராயசம் ஒரு யோசனையைக் கூறினார்.

 

    • அவள் கையிலிருந்த பேரன் விஜயரங்க சொக்கநாதனை சுட்டிக்காட்டி, “இவனுடைய நலனுக்காவது இதை நீங்கள் செய்தாக வேண்டும்” என்றார் அவர். அவர் கூறிய அந்த யோசனை ராணி மங்கம்மாளைச் சிந்திக்க வைத்தது.

 

    • “இந்த அரண்மனையில் இரண்டு சாவுகளுக்கு மேல் நேர்ந்து விட்டன. தொடர்ந்து இங்கே இருப்பது உங்கள் மனவேதனையை அதிகப்படுத்தலாம். நடந்த துயரங்களை நினைவுபடுத்தி உங்களை இந்தச் சூழலே கலக்கப்படுத்தலாம். தயவு செய்து நீங்களும், குழந்தையும் இடம் மாற வேண்டும்” என்றார் இராயசம்.

 

    • ராணி மங்கம்மாள் அவரைக் கேட்டாள்:

 

    • “உங்கள் யோசனையை ஏற்கிறேன். ஆனால் எங்கே இடம் மாறுவது என்று தான் எனக்குப் புரியவில்லை.”

 

    • “நம்மைப் பொறுத்தவரை திரிசிரபுரத்தை விட்டுவிட்டால் மதுரை தான் சிறந்த இடம். மதுரைக்குப் போகலாம்.”

 

    • “அங்கே போனாலும் ரங்ககிருஷ்ணனின் நினைவு என்னைக் கொல்லத்தான் செய்யும். அவனோடு சித்திரா பௌர்ணமிக்கும் மற்ற காரியங்களுக்கும் அங்கே நான் போனதெல்லாம் ஞாபகம் வரும்.”

 

    • “வரலாம்! ஆனால் இங்கே திரிசிரபுரத்தில் இருப்பது போல அவ்வளவு கொடுமையாக அது இராது. மதுரை மாநகரம் இதைவிடப் பெரியது. இப்போதேகூட உங்கள் அரசியல் தலைநகரமாக இது இருந்தாலும் மதுரையே உங்களுடைய கலாசாரத் தலைநகரமாக விளங்கி வருகிறது. கோலாகலமும், கலகலப்பும், பரபரப்பும் நிறைந்த மதுரை மாநகருக்குப் போவது உங்கள் மனப்புண்களை ஆற்றக்கூடும். குழந்தையையும் நன்றாக வளர்க்கலாம்.”

 

    • “மதுரையிலும் ரங்ககிருஷ்ணனின் பாட்டனார் கட்டிய பழைய மகால் அரண்மனை எனக்கு எப்போதுமே பிடிக்காது. தமுக்கம் ராஜமாளிகையில் தான் தங்கியாக வேண்டும். தமுக்க ராஜ மாளிகையின் ஒவ்வொரு தூணும் சுவரும் கூட ரங்ககிருஷ்ணனை எனக்கு நினைவூட்டாமல் விடப்போவதில்லை.”

 

    • “நினைவுகள் எல்லாமே நிழலைப் போன்றவை மகாராணீ! நாம் எங்கெல்லாம் நடந்து போகிறோமோ, அங்கெல்லாம் அவை நம்மைத் தொடரவே செய்யும். கொஞ்சம் அடர்ந்த வெயில் வரமுடியாத பகுதிக்குப் போனால் ஒரு வேளை நம் நிழல்கள் நமக்கே தெரியாமல் இருக்கலாம்.”

 

    • “துயர நிழல்கள் என்னைப் பயமுறுத்தி வீழ்த்திவிட முடியாது! நான் அவற்றுக்கு அஞ்சவில்லை. ஆனால் அவை என்னை வருத்தமுடியும். வருந்துவேன்.”

 

    • “நீங்களும் உள்ளூர வருந்தலாம். கலங்கலாம். ஆனால் நீங்கள் வருந்திக் கலங்கி ஆற்றலற்றுப் போயிருக்கிறீர்கள் என்று உங்கள் எதிரிகள் அறியும்படி மட்டும் விட்டுவிடக் கூடாது.”

 

    • “ஒரு நாளும் அப்படி நடக்காது.”

 

    • “அப்படி ஒருபோதும் நடக்க விடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த யோசனையைக் கூறுகிறேன் மகாராணீ!”

 

    • “உங்கள் யோசனையை நான் மறுக்கவில்லை! குழந்தை விஜயரங்கனும் நானும் மதுரைக்குப் புறப்பட அரண்மனை ஜோதிடர்களைக் கலந்து பேசி ஒரு நல்ல நாள் பார்த்து ஏற்பாடு செய்யுங்கள்” என்றாள் ராணி மங்கம்மாள்.

 

    • “நீங்கள் இப்போது திரிசிரபுரத்திலிருந்து மதுரைக்குச் செல்வது உங்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் என்பதைத் தவிர வேறொரு வகையிலும் பயன்படும்.”

 

    • “என்ன அது?”

 

    • “மகனை இழந்து மருமகளை இழந்து துயரத்திலிருக்கும் உங்களைப் பலவீனமான நிலையிலிருப்பதாகக் கருதிக் கிழவன் சேதுபதி பல தொல்லைகள் கொடுக்கலாம்.”

 

    • “எனக்கும் உள்ளூற அப்படி ஒரு சந்தேகம் உண்டு!”

 

    • “சந்தேகம் மட்டுமில்லை! அது ஒரு சரியான அநுமானமும் ஆகும்! நீங்கள் தொடர்ந்து திரிசிரபுரத்திலேயே இருந்தால் மதுரையைக் கைப்பற்ற முயல்வார் சேதுபதி!”

 

    • “அது நடக்காது! நடக்க விடமாட்டேன்.”

 

    • “அதை நடக்க விடாமல் தடுக்க நீங்கள் திரிசிரபுரத்தில் இருப்பதைவிட மதுரையிலிருப்பது பயன்படும்.”

 

    “நான் ஆயத்தமாயிருக்கிறேன். மதுரைக்குப் புறப்பட உடனே நாள் பார்த்து ஏற்பாடு செய்யுங்கள்” என்று மீண்டும் முன்னைவிட உறுதியான குரலிலே கட்டளையிட்டாள் ராணி மங்கம்மாள். அவள் குரலில் இப்போது புதிய உறுதியும், புதிய கண்டிப்பும் ஒலித்தன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 18ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 18

18 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியும், அர்ஜுனும் அவனது அறையில் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர். கீழே இரவு உணவு தயாராக ஈஸ்வரியும், சோபனாவையும் கூப்பிடனும் என்றவுடன் திவி முதல் ஆளாக நான் போறேன் அத்தை என்று கத்த ஒன்னும் வேணாம். போயி நீ

ராணி மங்கம்மாள் – 17ராணி மங்கம்மாள் – 17

17. கெட்ட சொப்பனமும் குழப்பமும்  பேரன் விஜயரங்கனின் ஆசையை மறுக்க முடியாத காரணத்தால் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் கோபுரத்தில் ஏறிக்கொண்டிருந்தாலும் ராணி மங்கம்மாளுக்குப் படியேறி மேலே செல்வது களைப்பாகத்தான் இருந்தது.   பாதிக் கோபுரம் ஏறிக் கொண்டிருக்கும் போதே “இங்கிருந்து ஒருவரைக்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 74ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 74

74 – மனதை மாற்றிவிட்டாய் உடனே சுபிக்கிட்ட சொல்லி அவங்க பொண்ண கூப்பிட்டு இன்ட்ரோ குடுன்னு சொன்னேன். மீரா அம்மாகிட்ட கேட்டு அவளை அவளது தோட்டத்தில் சென்று பார்க்க சுபி திவியை மீராவிற்கு அறிமுகப்படுத்தியதும் இருவரும் ஏனோ ஒரு தோழமையுடனே ஐந்து