Tamil Madhura குறுநாவல் ஜனனி – குறுநாவல் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்

ஜனனி – குறுநாவல் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்

1. ஜனனி

 

அணுவுக்கு அனுவாம் பரமாணுவில் பாதியாய் உருக்கொண்டு, பராசக்தியானவள் ஜன்மமெடுக்க வேண்டும் என்னும் ஆசையால் தூண்டப் பெற்றவளாய் ஆகாய வெளியில் நீந்திக்கொண்டிருந்தாள்.

 

அப்பொழுது வேளை நள்ளிரவு நாளும் அமாவாசை

 

ஜன்மம் எங்கு நேரப்போகிறதோ அங்கே போய் ஒண்டிக் கொள்வோம் என்னும் ஒரே அவாவினால் இடம் தேடிக் கொண்டு காற்றில் மிதந்து செல்கையில், எந்தக் கோவிலிலிருந்து தன் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தேவி புறப்பட்டாளோ அந்தக் கோவிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்தின் அருகில், ஒரு மரத்தின் பின்னிருந்து முக்கல்களும், அடக்க முயலும் கூச்சல்களும் வெளிப்படுவதைக் கேட்டாள். குளப்படிக்கட்டில் ஒர் ஆண்பிள்ளை குந்தியவண்ணம் இரு கைவிரல் நகங்களையும் கடித்துக் கொண்டு பரபரப்போடு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தான்,

 

ஒர் இளம் பெண் மரத்தடியில் மல்லாந்து படுத்தவண்ணம் இடுப்பைப் பிடித்துக்கொண்டு துடித்தாள்.

 

ஜன்மம் எடுக்க வேண்டுமெனவே பரமாணுவாய் வந்திருக்கும் தேவியானவள், உடனே அவ்விளந்தாயின் உள்மூச்சு வழியே அவளுள்ளே புகுந்து, கருப்பையில் பிரவேசித்தாள். ஆனால், ஏற்கெனவே அவள் வகுத்திருந்த விதிப்படி அவ்விடத்தில் ஒரு பிண்டம், வெளிப்படும் முயற்சியில் புரண்டு கொண்டிருந்தது.

 

அதனுடன் தேவி பேசலுற்றாள்:

 

“ஏ ஜீவனே, நீ இவ்விடத்தை விட்டுவிடு. நான் இந்தக் காயத்தில் உதிக்கப் போகிறேன்.”

“தேவி, சத்திய ஸ்வரூபியாகிய உனக்குக் கேவலம் இந்த ஜன்மத்தில் இப்பொழுது ஆசை பிறப்பானேன்? இதன் உபாதைகளைக் கடந்து உன்னிடம் கலக்கத்தானே நாங்கள் எல்லோரும் இப்படித் தவிக்கிறோம்?”

 

“குழந்தாய், நான் குழந்தையாயிருக்க விரும்புகிறேன். அன்னையாய் இருந்து, என் குடும்பமாகிற இவ்வுலகங்களைப் பராமரித்துப் பராமரித்து நான் கிழவியாகிவிட்டேன். எனக்கு வயதில்லையாயினும், குழந்தையாக வேண்டும் என்னும் இச்சை ஏற்பட்டுவிட்டது-”

 

“தேவி, இப்பொழுது நீ நினைத்திருப்பது அவதாரமா?”

 

“இல்லை; பிறப்பு. நான் முன்னெடுத்த ஜன்மங்கள், பிறர் தவத்தைத் திருப்திப்படுத்துவதற்கும், துஷ்டர்களைச் சம்ஹரிப்பதற்கும் ஆகும். ஆனால் இப்போதோ, இது என் சுய இச்சை. அப்பொழுதெல்லாம், நான் குழந்தையுருவாக நெருப்பிலோ, பூவிலோ, சங்கிலோ உலகத்தில் இறங்கினேன். இப்போதோ, பாங்காக ஒர் உடலிலிருந்தே புறப்பட விரும்பினேன்.”

 

“தேவி, உன் விளையாட்டை நாங்கள் அறியோம். ஆனால், ஜன்மமெடுக்கும் இந்த விளையாட்டில் நீ ஏமாந்து போவாய். உன்னைத்தான் நாங்கள் நம்பியிருக்கிறோம். நீயும் எங்களுள் மூழ்கி, உன்னையும் இழந்துவிட்டால், பிறகு நாங்கள் செய்வது தான் என்ன?”

 

“இதையேதான் என் கணவரும், என் இச்சையை அவரிடம் நான் வெளியிட்டபோது சொன்னார்: ஜன்மாவில் முன்பைவிடக் குழப்பங்களும் சந்தேகங்களும் அதிகரித்து விட்டன. புத்தி அதிகமாய் வளர்ந்து, அசல் சத்தியத்துக்குப் போட்டியாக மாயா சத்தியத்தைச் சிருஷ்டித்துக்கொண்டு, அதைப் பின்பற்றி, உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தைக் குழப்பிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சிகளைவிட, நிருபணைக்கு முக்கியம் அதிகமாய்விட்டது. பிறப்புக்கும் இறப்புக்கும் கொஞ்சமாவது ஒய்வுகொடுக்கவேதான் பிரளயத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் அசத்தியத்திற்காகவே ஜீவன்கள் ஒன்றையொன்று அழித்துக்கொள்ளும் வேகம், பிரளயத்தின் அவசியத்தையே குறைத்துக்கொண்டிருக்கிறது.” –

 

“நான் கேட்டேன். ‘சத்தியத்துக்கு இறப்பு ஏது, பிறப்பு ஏது?’ – –

 

“அவர் சொன்னார்: ‘வாஸ்தவந்தான். ஆனால் அதற்கு வளர்ப்பு மாத்திரம் உண்டே சத்தியம் வளர்ந்தால்தானே பயன் படும்? உன்னை ஜன்மங்கள் இதுவரை பாதிக்காமல் இருப்பதும், நீ வளர்ப்பு அன்னையாக இருப்பதும், உன் குழந்தைகள் வளர்ப்புக் குழந்தைகளாக இருப்பதும், நீ நித்திய கன்னியாக இருப்பதும் எதனுடைய அர்த்தம் என நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீயும் உன் குழந்தைகளும் வளர்ப்பதோ, அல்லது வளர்க்க முயல்வதோ என்ன? சத்தியம். ஆகையால், நீ ஜன்மத்தில் படும் சபலமே அசத்தியத்தின் சாயைதான்–‘ என்றார்.

 

“அப்படியும் நான் கிளம்பிவிட்டேன். ஆகையால், என் குழந்தாய், நான் குழந்தையாவதற்கு எனக்கு இடம் விடு. பார், மாடிமேல் உலக்கை இடிப்பதுபோல், என் குழந்தை பிரசவ வேதனையில் இடும் கத்தல் கேட்கிறது! அளவுக்கு மீறி அவளைத் தன்புறுததுவது தகாது.

 

“தேவி, ஜன்மத்தில் அகப்பட்டவன், பொறியுள் அகப்பட்டுக்கொண்ட எலி!”

 

“குழந்தை, அதைப்பற்றி நீ கவலைப்படாதே. நான் எலியாய்ப் பொறியுள் புகுந்தாலும், நான் எப்பொழுது நினைத்தேனோ அப்பொழுது வெளிப்படப் பொறிக் கதவு எனக்கு எப்போதும் திறந்திருக்கும்.”

 

“தேவி, நீ இதை அறிய வேண்டும். பொறியுள் எலி அகப்பட்ட பிறகு, கதவைத் திறந்து வைத்தாலும், அது பொறிக்குள்ளேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும். அகப்பட்டுக் கொண்ட பிறகு, அது விடுதலைக்குக்கூடப் பயப்படுகிறது.”

 

“சத்தியம் எப்போதும் ஜெயிக்கும். ஆகையால் எனக்கு விரைவில் இடம் விடு; தவிர, உனக்கு இப்பொழுது விடுதலை அளிக்கிறேனே. அதனால் உனக்கு சந்தோஷம் இல்லையா?”

“ஆனால் இந்த ஜன்மத்தின்மூலம் எனக்கும் விதித்திருக்கும் வினை தீர்ந்தாக வேண்டுமே!”

 

“அதைத்தான் உனக்கு பதிலாக நான் அநுபவிக்கப் போகிறேனே! எந்தப் பரமானுவின் வழி நான் இந்தக் காயத்தினுள் வந்தேனோ, அதன் உருவில் நீ இத்தாயின் வெளி மூச்சில் வெளிப்படுவாயாக!– ஆசீர்வாதம்.”

 

“தேவி, நான் மகா பாக்கியசாலி! எல்லோருக்கும் பிறப்பு இறப்பு இரண்டையும் அநுபவித்த பிறகுதான் முக்தி என்றால், எனக்குப் பிறப்பின் முன்னரே விடுதலை கிட்டிவிட்டது! நான் செலவு பெற்றுக்கொள்கிறேன்!”

 

அந்தப் பரமானு வெளிப்படுகையில் அவள் வீரிட்டாள்.

 

“என்ன? என்ன?”- குளத்தண்டை காத்திருக்கும் ஆண்பிள்ளை, அலறிக்கொண்டே மரத்தண்டை ஒடி வந்தான்.

 

கொஞ்ச நாழிகை பேச்சு மூச்சில்லை. பிறகு திடீரென்று ஜலத்தில் கல்லை விட்டெறிந்தாற் போல், நள்ளிரவை ஒரு புதுக்குரல் கிழித்தது.

 

அவனுக்கு உடல் புல்லரித்தது. “நான் வரட்டுமா?”

 

“இல்லை; இல்லை– சரி, இப்போது வா!”

 

அவன் இன்னமும் சற்று அருகில் வந்தான்; ஆனால் இருளில் ஒன்றும் தெரியவில்லை.

 

“என்னா பிறந்திச்சு?

 

இருளில் அவள் குழந்தையைத் தடவிப் பார்த்துவிட்டுச் சொன்னாள்: “பொம்புள்ளையாட்டம் இருக்குது.”

 

“அட கடவுளே!”

 

பராசக்தி சிரித்தாள். ஆனால் மறுகணம் அவளுக்கு மூச்சுத் திணறியது. அவள் முகத்தின் மேல் ஒர் அழுக்குத் துணி விழுந்தது. குரல்வளையை இரு கட்டைவிரல்கள் அழுத்தின. மூச்சு பயங்கரமாய்த் திணறியது. அந்த எமப்பிடியினின்று வீணே விடுவித்துக் கொள்ள முயன்றாள்.

 

“என்னம்மே கொழந்தே-அடிப்பாவி! என்னா பண்றே? “என்னெ சும்மா விடுன்னா!”

 

“அடி கொலைகாரி!”

 

“விடுன்னா விடு-”

 

குழந்தையை அவன் பிடுங்கிக் கொண்டான். “ராச்சஸி! உனக்குப்போய் மகமாயி கொளந்தையெக் குடுத்தாளே!”

 

“அவளா குடுத்தா! நீ குடுத்தே!”

 

“இருந்தா என்ன? பாருடி இந்தப் பாவத்தை என் மாரிலே பாலைத் தேடுது:”

 

“சரிதான். என் புருசன் பட்டாளத்திலேருந்து வந்தால், இந்தா சாமி குடுத்துது கொஞ்சுன்னு குடுக்கச் சொல்றியா?”

 

“கொடும்பாவி, அதனாலே கொலை பண்ணனுமா?”

 

“சரி, என்னா பண்ணப் போறே?”

 

“ஓடிப் போயிடுவோம்.”

 

“அதுவும் உன்னை நம்பித்தானே!”

 

“சரி, வேண்டாம். இந்தக் குளத்தங்கரையிலேயே விட்டுட்டுப் போயிடுவம். தானா உருண்டு தண்ணியிலே விழுந்தாலும் விழுந்துட்டுப் போவுது. பண்ணின பாவம் பத்தாதுன்னா நம்ம கையினாலே சாகவனும்? இந்த ஒரு தடவை கூட எடுத்துவிட மாட்டியா?”

 

“நீ புண்ணியம் தேடற அழகை நீதான் மெச்சிக்கணும்-”

 

“அடிப்பாவி! ஆடு மாடுங்ககூட உன்னைவிட ஒசத்திடீ!”

 

“அது சரி. நான் மனுச ஜன்மந்தானே? இந்த வெட்டிப் பேச்செல்லாம் பேசி நேரத்தை ஓட்டாதே. விட்டுட்டு வரதுன்னா வா. நான் கண்ணாலேகூடப் பாக்கமாட்டேன். பாத்தாக்கூட ஒட்டிக்கும்-”

 

“நீ இப்படிப்பட்டவன்னு எனக்கு அப்பொ தெரியாதுடீ. தெரிஞ்சா சாகுவாசங்கூட வெச்சுக்கமாட்டேன். உனக்கு எப்பவும் உன்னைப் பத்தின நெனப்புத்தானே?”

 

குரல்கள் எட்ட எட்டப் போய்த் துரத்தில் அமுங்கிப் போயின.

 

குழந்தை தன்மேல் போட்டிருந்த கந்தலை, முஷ்டித்த கைகளாலும் கால்களாலும் உதைத்துக்கொண்டு அழுதது. உடலின் பசியும் குளிரும் புரியவில்லையாயினும், பொறுக்க முடியவில்லை.

 

அத்துடன் இந்தத் தனிமை– இதுவரை அவளுக்குப் பழக்கப்பட்டது. அரூபமாய், எவற்றிலும் நிறைந்த உள்ளத்தின் ஒப்பற்ற ஒரு தன்மையின் தனிமை. ஆனால் இதுவோ, ஒர் உருவுள் கட்டுப்பட்டுவிட்டதால் அதற்கே தனியாயுள்ள தன் தனிமை.

 

கோபுர ஸ்தூபியின் பின்னிருந்து வெள்ளி, தேவியை அஞ்சலி செய்துகொண்டே கிளம்பியது. காளியாய்க் கத்திக் கத்தி, குழந்தைக்குத் தொண்டை கம்மிவிட்டது. புறப்பட்டுக் கொண்டிருக்கும் சூரியனுடைய கிரணங்களில் கோபுரத்தின் பித்தளை ஸ்தூபி பொன்னாய் மின்னியது.

 

அப்போது வயதான ஒரு பிராமணர், குளிப்பதற்காகப் படிக்கட்டுகளில் வெகு ஜாக்கிரதையாய் இறங்கினார். ‘வீல் வீல்’ என்று இருமுறை அலறி, குழந்தை அவர் கவனத்தை இழுத்தது.

 

“ஐயோ பாவமே! யார் இப்படிப் பண்ணினது?

 

குழந்தையை அவர் வாரி எடுத்துக்கொண்டார். அதன் தாய் ஒருவேளை குளத்தில் மிதக்கிறாளா அல்லது வேறு எங்கேனும் போயிருக்கிறாளா என்று சுற்றுமுற்றும் தேடிப் பார்த்துவிட்டு, வேறு வழி இல்லாமல் வந்த காரியத்தையும் மறந்துவிட்டு, அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனார்.

 

அவர் சம்சாரம் வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண் டிருந்தாள். கோலத்தில் குனிந்த தலை நிமிர்ந்தபோது, அவள் முகம் அழகாக இருப்பதை ஐயர் கைக்குழவி கண்டது. வாலிபந் தான். ஐயர் கை மூட்டையைக் கண்டதும், அவள் புருவங்கள் அருவருப்பில் நெரிந்தன.

 

“இப்போ என்ன இது?”

 

“அடியே, இன்றைக்கு என் மனம் ஏதோ மாதிரி குதிக்கிறதடி உள்ளே வா. வெள்ளிக்கிழமையும் அதுவுமா நமக்கு ஒரு குழந்தை கிடைத்திருக்கிறது. நான் உன்னிடம் அப்பொழுதே சொன்னேனே, மூன்று நாட்களாய் ஒரே கனவைக் கண்டுகொண்டிருக்கிறேன் என்று. வா, வா.” தொண்டை கம்மிவிட்டது.

 

அவர் கண்களில் ஜலம் தாரையாய்ப் பெருகி நின்றது. பூஜைக்கூடத்தின் நடுவில் செதுக்கிய தாமரைப்பூக் கோலத்தில் குழந்தையை வளர்த்திவிட்டுச் சுவரில் மாட்டியிருக்கும் படங்களுக்குக் கைகூப்பி நின்றார். அவர் தேகம் நடுங்கிற்று.

 

அவர் மனைவி சாவகாசமாய்ப் பின்னால் வந்தாள். ஐயரின் பரவசம் அவளுக்குப் புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை. கோலக் குழாயை ஜன்னலில் லொட்டென்று வைத்துவிட்டு, இடுப்பில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு காத்துக்கொண்டு நின்றாள்.

 

“என் கனவைச் சொன்னேனோ?”

 

“எந்தக் கனா? நீங்கள் சொல்ல ஆரம்பித்தால் காதவழி போகுமே, உங்கள் கனா!”

 

“மூன்று இரவுகளாய் ஒரே கனவைக் கண்டுகொண்டிருக்கிறேன்– எங்கிருந்தோ ஒரு குழந்தை என் பின்னால் வந்து, மேல் துணியைப் பிடித்து இழுத்து, அதன் கழுத்து நோக என்னை நிமிர்ந்து பார்த்து, ‘தாத்தா, உங்காத்துலே எனக்கு இடம் கொடேன்!’ என்று கேட்கிறது. நாலு ஐந்து வயசுக்கு மேல் இராது. அரையில் மாந்தளிர்ப் பட்டுப்பாவாடை மேலே சொக்காய் கிடையாது திறந்த மார்பில், கழுத்தில் காரடையா நோன்புச் சரடு மாதிரி ஒரு மாங்கல்யக் கயிறு. அவ்வளவுதான்.

 

“அது கேலியாக் கேட்டதோ, வேணுமென்றுதான் கேட்டதோ, தெரியாது. ஆனால் கேட்கும்போதெல்லாம், என் எலும்பு ஒவ்வொன்றும் தனித்தனியாய் உருகிற்றுடி! நானே கரைந்து போய்விடுவேன் போலிருந்தது. என் கனவிற்குத் தகுந்தாற்போல் இன்றைக்கு ஸ்நானம் பண்ணப்போன இடத்திலே, இது அநாதையா–”

 

“சரிதான்! ‘தாத்தா’ன்னு முறை வெச்சு உங்க கனாக் குழந்தை கூப்பிட்டத்துக்கோசரம் எனக்கு ஒரு பேத்தியைக் குளத்திலேருந்து பொறுக்கிப் பாத்து எடுத்துண்டு வந்தேளாக்கும்! எந்த வில்லிச்சி பெத்துப் போட்டுட்டுப் போனாளோ– போலீஸுலே-”

 

குழந்தை கத்த ஆரம்பித்துவிட்டது.

 

“ஐயோ, பசிடீ– அதன் பசியழுகையைப் பார்க்கையில், அந்த அம்மாளின் முகம் உள் போராட்டத்தில் முறுகிச் சவுங்கியது. அவளையும் மீறிக் கைகள் குழந்தையை வாங்கிக் கொண்டன. அன்னையின் வாயும் கைகளும் பாலிடத்தை ஆத்திரத்துடன் தேடித் தவித்தன. அந்த அவஸ்தையைக் கண்டு ஐயர் தலை குனிந்தது.

 

“நைவேத்தியப் பாலைப் புகட்டு; வேறே வாங்கி வருகிறேன்–” கீழ்நோக்கிய அவர் வார்த்தைகள் பூமியில் தெறித்து எழும்பின.

 

அம்மாள் ஆத்திரத்துடன் கீழே உட்கார்ந்து, குழந்தையை மடியில் படக்கென்று கிடத்திக் கொண்டாள். வார்த்தைகள் வாயினின்று வெடித்து உதிர்ந்தன.

 

“இப்போ திருப்தியாயிடுத்தோன்னோ? மூணுபேரை ஏற்கெனவே முழுங்கினேள். ஒருத்தியை வயசு வரத்துக்கு முன்னாலேயே மாரி தன்கிட்ட வரவழைச்சுண்டுட்டாள்; இன்னொருத்தி ஸ்நானம் பண்ணப்போன இடத்துலே குளத்தோடே போயிட்டா. உங்களுடைய ஏழா மடத்துச் செவ்வாய்கிட்டெ அப்பவாவது உங்களுக்குப் பயங் கண்டிருக் கணும். இல்லை. மூணாவது பண்ணிண்டேள்; மூணும் பெத்தேள் தக்கல்லே. ராமேசுவரம் போனேள். எல்லோரும் பீடையைத் தொலைக்கப் போவார்கள். நீங்கள் என்னடான்னா, கொண்டவளை வயிறும் பிள்ளையுமா அங்கேயே காலராவிலே தொலைச்சுப்பிட்டு, இன்னமும் பாவமூட்டை யைச் சம்பாதிச்சுண்டு வந்தேள்.”

 

ஐயர் புழுவாய்த் துடித்தார். “என் பாவந்தான்; ஆனால், என் எண்ணம்–”

 

அவள் சீறினாள். அவளுக்கு ஆவேசம் வந்துவிட்டது. “உங்கள் எண்ணத்தைப்பத்தி என்னிடம் பேசாதேயுங்கள். குலைவாழையை வெட்டிச் சாய்ச்சாவது நாலாந்தரம் பண்ணிக்கணும்னு தோணித்தே, அதுதான் உங்கள் எண்ணம். ஏதோ உங்களிடம் நாலு காசு இருக்கு. என் வீட்டுலே சோத்துக்குக்கூட நாதியில்லே; அதனாலே என்னை விலைக்கு வாங்கிப்பிட்டோமுங்கற எண்ணந்தானே?”

 

“இந்தக் குடும்பம் விளங்க ஒரு குழந்தை–”

 

அம்மாள் ‘கடகட’வெனச் சிரித்தாள். “குழந்தையைக் கண்டுட்டேளா? கனாவிலேயும், குளத்தங்கரையிலும் தவிர!”

 

பதிலையும் தனக்குள்ளே அடக்கி அக்கேள்வி, பழுக்க நெருப்பில் காய்ச்சிய பிறகு, அடிவயிற்றுச் சதையில் மாட்டிக் குடலைக் கிழிக்கும் கொக்கி மாதிரி இருந்தது. நிறைந்த ஆச்சரியத்தில் கத்தி அழக்கூட மறந்துவிட்டாள் குழந்தை!

 

திடீரென்று அங்கே தேங்கிய சப்த ஒய்ச்சலைக் கண்டதும் அம்மாளுக்கே பயமாய்விட்டது. அவசர அவசரமாய்ப் பாலைக் கொஞ்சங் கொஞ்சமாய் ஊட்டுகையில் குழந்தையின் கடைவாயில் பால் வழிந்தது.

 

திடீரெனக் குழந்தையின் முகத்தின்மேல் இரண்டு நெருப்புத் துளிகள் விழுந்தன. அம்மாளின் கண்ணிர் கனலாய்க் கொதித்தது. அதன் வெம்மை அம்பாளின் உள் இறங்குகையில், ‘இவள் ஆத்திரப்படுவது வெறும் கோபத்தினால், அல்ல; வெதும்பிப் போன தன் வாழ்க்கையின் வேதனை தாங்காமல் துடிக்கிறாள்’ என்று அவள் உள்ளத்துக்குச் சொல்வது போல் இருந்தது.

 

குழந்தைக்குப் பசி தீர்ந்துவிட்டது. அம்மாளின் தாலியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள். அம்மாவுள் கல்லாய் உறைந்து போயிருந்த ஏதேதோ, இப்பொழுது நெய்ப் பாறை உடைவதுபோல் கிளர்ந்து உருகும் இன்பம் பயங்கரமாக இருந்தது. குழந்தையை இறுக அனைத்துக்கொண்டு தன் கணவரிடம் சென்றாள்.

 

“பார்த்தேளா குழந்தையை, எவ்வளவு கனம்! என்ன பண்றேள், பஞ்சாங்கத்தைப் புரட்டிண்டு?”

 

“நேற்று என்ன நக்ஷத்திரம், பார்க்கிறேன். ஜாதகம் கணிக்கலாமா என்று–”

 

“சரியாய்ப் போச்சு! இது என்னிக்குப் பிறந்தது, எந்த வேளை, என்ன ஜாதின்னு கண்டோம்? இதைப்பத்தி நமக்கென்ன தெரியும்?”

 

ஐயர் சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் மனைவியின் உள்வாக்கு அவளையும் அறியாமல், ஆதிபரையின் நிர்க்குண நிராமயத் தன்மையை வெளியிட்டது. வந்த குழந்தையை அங்கீகரிப்பதைத் தவிர அதன் ஆதியைச் சோதிக்க முயல்வதில் என்ன பலன்?

 

“சரி, இவளுக்கு என்ன பேரை வைப்போம்?”

 

அம்மாள் கொஞ்சலாய், “பிடாரி மாதிரி கத்தறது. ‘பிடாரி’ன்னு வையுங்களேன். நான் ஊர்ப் பிடாரி; இவள் ஒண்ட வந்த பிடாரி!”

 

ஐயர், பிள்ளையார் சுழியிட்டு “ஜனனி ஜன்ம செளக்கியானாம் என ஆரம்பித்துவிட்டிருந்த கைக் காகிதத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் முகம் சட்டென மலர்ந்தது.

 

குழந்தையைப் பார்த்து மெதுவாய்க் கூப்பிட்டார்:

 

“ஜனனி, ஜனனீ.”

 

* * *

“பாருங்கோ- பாருங்கோன்னா! கொழந்தை விளக்கைப் பாக்கறா!”

 

பிறந்தபின் சக்தி முதல் முதலாய் இப்போதுதான் ஆண்டவனின் ஜோதி ஸ்வரூபத்தை விளக்குச் சுடரில் பார்க்கிறாள். தானும் அதுவாய் இதுவரை இழைந்திருந்துவிட்டு இப்பொழுது அதனின்று வெளிப்பட்ட தனிப் பொறியாய், அதனின்று விலகி, அதையே தனியாயும் பார்க்கையில், அதன் தன்மை ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. ஆனால் அவள் இப்பொழுது பொறியாயினும், அவன் தூணாய்த்தான் விளக்குச் சுடரில் நிற்கிறான்.

 

“ஜனனீ”

 

“இதைப் பாக்கமாட்டேங்கறேளே! குழந்தை சிரிக்கிறா!” அம்மாள் தன் ஆனந்தத்தில் குழந்தை மாதிரி கைகொட்டிச் சிரிக்கிறாள்.

 

“ஜனனீ! விளையாட்டு போதுமா? திரும்பி வருகிறாயா?”

 

`”இன்னும் ஆரம்பிக்கக்கூட இல்லையே, அதற்குள்ளாகவா?”

 

“ஜனனி, இந்த விளையாட்டு போகப் போகப் புரியாது!”

“புரிந்துகொள்ள வேண்டுமென்றுதானே வந்திருக்கிறேன்?” –

 

“சரி, உன் இஷ்டம்! ஆனால் ஆரம்பிக்கை யிலேயே உன் விளையாட்டு உன் இஷ்டம் போல் ஆரம்பித்ததோ?”

 

“ஏன்?”

 

“நீ தாய்ப்பாலுக்கு ஆசைப்பட்டாய். கிடைத்ததோ? உன் உயிருக்கே உலை வந்தது. நீ தப்பியது யார் புண்ணியமோ எப்படியும் உன் சக்தியினால் அல்ல!”

 

“என்னைப் பார்; கண்ணாட்டி பாருடி! விளக்கையே பார்த்துண்டிருக்கையே– ஜனனி பார்க்கிறாள்.

 

“ஜனனீ!, ஜனனீ! விளையாட்டில் இன்னமும் சிக்கிக்கொள்கிறாய். அந்தப் பார்வையை அவளிடம் ஏன் காட்டினாய்? பார்க்கச் சொன்னால் நேர்ப் பார்வையில்லாது கடைக்கண் நோக்கு ஏன்?–”

 

அம்மாளுக்கு திடீரென வயிற்றைக் குமட்டியது. “குடுகுடு”வென்று முற்றத்திற்கு ஓடினாள். தொண்டையைத் திரும்பத் திரும்ப மறுக்கிற்று. வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு ஐயர் அறையிலிருந்து வெளி வந்தார்.

 

“என்ன உடம்பு?”

 

அம்மாளின் சிவப்பு முகத்தில் ரத்தம் குழம்பியது. கண்களில் ஜலம் ததும்பியது. வாந்தி எடுத்த பிரயாசையா, அல்லது வெட்கமா? அம்மாள் பேசவில்லை. குனிந்து கொண்டு நின்றாள்.

 

“ஓ!”- ஐயரின் விழிகள் அகல விரிந்தன. அவள் மெளனத்தின் அர்த்தம் பிரம்மாண்டமான அலையாய் அவர் மேல் மோதியது. உடலில் ஒரு சிறு பயங்கூடக் கண்டது. படங்களை அஞ்சலி செய்துகொண்டு அப்படியே நின்றார்.

 

“ஈசுவரி! எல்லாம் உன் கிருபா கடாக்ஷம்!”

 

விளக்கில் சுடர் மறுபடி பொறிவிட்டது.

 

“சரி, சரி; உன் கைவரிசையைக் காட்டுகிறாயாக்கும்! செய், செய்.”

 

சுடர் மங்கியது. குழந்தை, முகம் விசித்துக் கைகால்களை உதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

 

# # #

 

ஐயர் வீடு ரமித்தது, அவள் வந்த இடத்தில் திரு பெருகக் கேட்பானேன்? திரும்பி வராது எனக் கைவிட்ட பொருள்கள், பன்மடங்கு பெருகிக்கொண்டு வந்து சேர்ந்தன. எதிர்பாராத இடங்களிலிருந்து சொத்துக்கள் வந்து செறிந்தன. ஆரம்பத்தில் நஷ்டமென்று கண்டு நம்பிக்கை இழந்த காரியங்களெல்லாம், கடைசியில் பெருத்த லாபத்தைச் சேர்க்கும் வழிகளாய் மாறின.

 

“இந்தப் பொண்ணு எந்தப் பொண்னோ! ஆனால் நல்ல ராசி இருக்குடி! அது இருக்கிற இடத்தில் பட்ட மரங்கூடப் பச்சையாத் தழைச்சுப் பூத்துக் குலுங்கறதுடி!”

 

• * *

குழந்தை விளையாடுகிறாள்–

 

“ஜனனீ!”

 

ஐயர் மடி உடுத்துக்கொண்டு ஆசாரமாய்ப் பூஜையில் அமர்ந்திருக்கிறார். அவர் மூக்கைப் பிடித்துக்கொண்டு எண்ணும் தெய்வம் அவர் மடிமேலேயே தவழ்வது அவருக்குத் தெரியவில்லை.

 

“அடியே, குழந்தையை எடுடீ. இங்கே சாமானைக் கொட்டறாள்–”

 

“இப்போ எந்தக் குழந்தையை வச்சுக்கச் சொல்றேள்? உங்கள் குழந்தையையா? என் குழந்தையையா?”

 

அம்மாளுக்கும் ஜனனிக்கும் எப்படியும் ஒட்டவில்லை. அவளுக்குள் ஏதோ ஒன்று அக்குழந்தைக்கு அஞ்சியது. அவளுக்கே என்னவென்று தெரியவில்லை. கண்டெடுத்த குழந்தை என்பதனாலோ என்னவோ, நினைவுக்குக்கூடப் பிடிபடாத ஒரு அவநம்பிக்கை அதன்மேல் வளர்ந்துகொண்டே வந்தது. ஆனால் அவளுள் இன்னொரு குரல் இந்த அவநம்பிக்கைக்கு எதிராக ஒலமிட்டது. ஆனால் அந்த அவநம்பிக்கையே அந்தக் குரலை அமுக்கித் திணற அடித்தது. பிறகு அவளுக்கே ஒரு குழந்தை பிறந்தது. அப்போது உள்குரலை. அந்த அவநம்பிக்கை ஒரே மூச்சாய்க் கொன்று விட்டது.

 

ஆனால் அம்மாளின் மனப்போராட்டத்தை ஜனனி எப்படி அறிவாள்? அவள் தன் மகனுக்கு எடுத்துவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஜனனிக்கும் பால் பசி எடுக்கும். மடிமீது ஏறுவாள். அம்மாளுக்கு ஏனோ மனம் வரவில்லை. முதல் கொஞ்ச நாட்களுக்கு வேறு பராக்குக் காட்டியோ, அல்லது பசும்பாலையூட்டியோ ஏமாற்றி வந்தாள். ஆனால் ஜனனி, தன்னிடம் பால் குடிப்பதற்காகத் திரும்பத் திரும்ப மடிமீது ஏறும்விடாமுயற்சியையும் தீர்மானத்தையும் கண்டதும், உள்ளுற இன்னதென்று சொல்ல இயலாத ஒரு பயமும், அப்பயத்தின் மூலமாகவே ஏற்படும் கோபமும் எழுந்தன. போனால் போகிறது. ஒரு தரந்தான் இடங் கொடுப்போமே என்று ஏன் தோன்றவில்லை என அவளுக்கே தெரியாது. அவளை ஆட்டிய பயம் தலைதுாக்கி நிற்கையில், அவள் என்ன செய்ய முடியும்?

 

ஜனனி லேசில் அவளை விடுவதாக இல்லை. ஒருநாள் மாலை அம்மாள், மகனுக்கு எடுத்துவிட்டுக் கொண் டிருக்கையில், தைரியமாய் மடிமீது ஏறி, மார்புத் துணியைக் கலைத்தாள். அம்மாளுக்கு ஆத்திரம் மீறிவிட்டது. அவளை இழுத்து எதிரே உட்கார வைத்து, ‘தான்தோணிப் படையே’ என்று வைது, முதுகில் இரண்டு அறையும் வாங்கிவிட்டாள்.

 

குழந்தை ஓவென்று அலறினாள். ஐயர் அறையினின்று ஓடிவந்து அவளை வாரியணைத்துக் கொண்டார். அம்மாள் ஆங்காரத்துடன், மார்போடு ஒட்டிக்கொண்டிருந்த தன் மகனையும் பிடுங்கி அவனையும் அறைந்துவிட்டு, சமையலறையில் போய் எதையோ உடைத்தாள். அவள் காரியம் அவளைச் சுடும் வேதனை அவளுக்குத் தாங்க முடியவில்லை. ஐயர் வாய் அடைத்துப்போய்த் தவித்தார். கண்களில் ஜலம் ததும்பிற்று.

 

ஜனனி இப்பொழுது விளக்கெதிரில் படுத்துக்கொண்டிருக்கிறாள். அழுது, அழுத களைப்பில் தூங்கி, விழிப்பு வந்ததும் மறுபடியும் அழுது அழுது முகமே வீங்கிவிட்டது. இந்தப் புது அநுபவம் அவளுக்குத் திகைப்பாக இருக்கிறது.

 

விளக்குச் சுடர் பொறி விடுகிறது.

 

“ஜனனி, உனக்குச் சொல்ல வேண்டியதும் உண்டா? நீ எல்லோருக்கும் பாலைக் கொடுப்பவளே யன்றி, குடிப்பவள் அல்ல! உலகில், தான் ஈன்ற கன்றுக்குப் பாலைக் கொடாது தன் பாலைத் தானே குடிக்க முயலும் பசுவுக்குக் கழுத்தில் கடயம் போட்டு விடுவார்கள். உனக்கு இப்பொழுது நேர்ந்திருப்பதும் அதுவே தவிர, வேறல்ல. நீ அவளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அதனால் அவள் பாலைக் குடித்து விடலாம் என்று நினைத்தாய் அல்லவா? இதுதான் ஜன்மத்தின் முதல் பாடம். எண்ணியது எண்ணியபடி நடக்குமென்று எண்ணாதே!”

 

# # #

 

வளர்ப்புத் தாய்க்கும் ஜனனிக்கும் இடையிலுள்ள பகை பயங்கரமாய் வளர்ந்தது. பகை அம்மாளுடையதேயாகையால், அதன் முழு வேகத்தையும், பாரத்தையும் அவளே தாங்கும் படியாயிற்று. இடாத வேலைகளை இட்டு, சொல்லாத சொற்களைச் சொல்லி, படாதபாடு எல்லாம் படுத்தினாள்.

 

“வயசுபாட்டுக்கு ஆறது. வேளா வேளைக்கு வந்து வயிறு புடைக்கத் திங்கறதோடு சரி. மத்தப்படி கண்ணிலே படறதில்லே. எல்லைக் காளியா ஊரெல்லாம் சுத்தித் திரிஞ்சுப்பிட்டு அவர் வருகிற வேளைக்கு, இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமான்னு விளக்கெதிரே கண்ணை மூடிண்டு உட்கார்ந்திருக்கையேடி! எந்த ஊரைப் பொசுக்கலாம்னு யோசனை பண்ணிண்டிருக்கே?

 

“இல்லேம்மா.”

 

“என்னை “அம்மாங்காதேடி! உன்னை ஆசையா அடித் துணியோடு, எந்தக் குளத்தங்கரைப் படிக்கட்டிலேருந்து கொண்டு வந்தாரோ, அங்கே போய் உன் அம்மாவைத் தேடு. அம்மாவாம், அம்மா! என்ன சொந்தண்டியம்மா!”

 

ஆகவே, ஜனனி, இன்னதென்று விளங்காத மனக்கனத்துடனும் வீறாப்புடனும் குளத்தண்டை போய், தன்னையும் அறியாமல், தன்னைத்தானே தேடுகிறாள். ஆனால் அங்கு என்ன இருக்கிறது? ஆழந்தான் இருக்கிறது.

 

சட்டையும் பாவாடையுமாய் ஜனனி, கையோடு கை கோத்துக்கொண்டு, குளத்தங்கரைப் படிக்கட்டில் திகைத்து நிற்கிறாள்.

 

திடீரென அவளுள் தாங்கமுடியாத ஆங்காரம் மூண்டது. வீட்டுக்கு விரைந்தாள். அம்மாள் சமையலறையில் வேலையாயிருந்தாளோ என்னவோ ஐயரைக் காணவில்லை. கோபத்தைத் தீர்த்துக்கொள்ள, ஏதாவது ஒன்றைச் சுற்றுமுற்றும் தேடினாள். கூடத்தில், குழந்தை கைவிரித்தபடி குப்புறப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனிடம் பல்லைக் கடித்துக்கொண்டு, கண்களில் பொறி பறக்க, இருகைகளையும் நீட்டிக்கொண்டு சபித்தாள்.

 

“உன்னை வைசூரி வாரிண்டு போக!”

 

கூட விளையாடும் குட்டிகள், ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதைக் கண்டதில்லையா? குழந்தைக்குத் தூக்கத்தில் உடம்பு தூக்கிவாரிப் போட்டது. கையைக் காலை உதைத்துக் கொண்டு அலற ஆரம்பித்துவிட்டான்.

 

அடிவயிற்றிலிருந்து வந்த அந்த உள்ளக் கொதிப்பு வீண் போகுமா? பையனுக்கு மூன்று நாள் ஜூரம் மழுவாய்க் காய்ந்தது. பிறகு ஒன்று, இரண்டு, பத்து என்று உடம்பெல்லாம் பெரிய முத்துக்கள் வாரியிறைத்து விட்டன. ஊசி குத்த இடமில்லை. குழந்தை தன் நினைவற்று, போட்டது போட்டபடியே கிடக்கிறான். ஸன்னமாய் இழையும் அனல் மூச்சுத்தான் இன்னமும் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரை உணர்த்துகிறது.

 

தாய் மூலையில் புரண்டு புரண்டு அழுகிறாள். அவளைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு, அவளைத் தேற்ற முயலும் உற்றார் உறவினர்களுக்கிடையில் அவளே தனிக்காட்சி ஆகிவிட்டாள். ஐயர் ரேழியில் முன்னும் பின்னுமாய் உலாவிக் கொண்டிருக்கிறார். முன்பைவிட உடல் மெலிந்து, கூன் விழுந்திருக்கிறது. ‘அம்பாள் கொடுத்தாள்; அம்பாள் எடுத்துக் கொள்கிறாள்’ என்று ஞானம் சமாதானம் சொன்னாலும், பாசம் பசி தீர்த்து விடுமா?

 

ஜனனி படுக்கையண்டை, சுட்டுவிரலை வாயில் சப்பிக் கொண்டு, அச்சத்துடன் நிற்கிறாள். அவள் கோபம் அப்போதே பறந்துவிட்டதால், அதன் விளைவாகிய சாபத்தை மாத்திரம் தனியாய்ப் பார்க்கையில், இப்போது பயமாக இருந்தது. அம்பிக்கு இப்படி நேரும் என்று அவள் என்ன கண்டாள்? அம்பிமேல் அவளுக்கு உயிர் இல்லையா? தாயோடு இல்லாத சமயத்தில் தன்னோடுதானே இருப்பான்? இப்படி அவன் கிடப்பதைச் சகிக்க முடிகிறதா? யாரிடம் போய்த் தன் மனக் கஷ்டத்தைச் சொல்லிக்கொள்ள முடியும்? சுவாமியிடந்தான். அப்படித்தானே தாத்தா அவளிடம் சொல்லியிருக்கிறார்–ராத்திரி துரங்குவதற்கு முன்னால், கதை கதையாய், பாட்டாய், தோத்திரமாய்–

 

பூஜையறைக்குப் போய், விளக்கை ஏற்றி வைத்து, துக்கம் அடைக்கும் தொண்டையுடன், ஆண்பிள்ளை போல் அவள் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரிக்கிறாள்.

 

“சுவாமி!-”

 

“ஜனனீ! என்ன காரியம் செய்தாய்! குழந்தைக்குப் பிராப்தம் இல்லாதவளுக்குக் குழந்தையைக் கொடுத்தாய். பிறகு அதை விளங்கவொட்டாமல், நீயே பிடுங்கிக் கொள்கிறாய்! நீ சக்தி என்றால், உன் மனம் கூத்து என்ற எண்ணமா? இந்தக் குழந்தையை யார் பெற்றதென்று நினைக்கிறாய்? நீ பெற்ற குழந்தைதான். நீயே விழுங்கப் பார்த்தால் அது உள்ளும் போகாமல் வெளியும் வராமல் தொண்டையில் மாட்டிக் கொண்டதும் எடுத்துவிட என்னைக் கூப்பிடுகிறாயா?”

 

“அம்மா!”

 

விளக்கு சிரித்தது.

 

“ஜனனி, அம்மா என்று யாரைக் கூப்பிடுகிறாய்?

 

ஜனனி பூஜையறையினின்று வெளிப்பட்டாள். அவள் கண்கள் ஒளி வீசின. தன்னுள் தான் மூழ்கி, தன்னை மறந்து கைகளையும் கால்களையும் வீசியாடிக்கொண்டு, மகமாயிப் பாட்டுப் பாட ஆரம்பித்து விட்டாள்:

 

“தாயி மகமாயி தாயி மகமாயி

நெற்றிதனில் உள்ள முத்தை நேத்திரத்தில் இறக்கம்மா

நேரு மகமாயி நேரு மகமாயி

நேத்திரத்தில் உள்ள முத்தைத் தாடைதனில் இறக்கம்மா

தாயி மகமாயி தாயி மகமாயி

தாடைதனில் உள்ள முத்தைக் கழுத்துதனில் இறக்கம்மா

காளி மகமாயி காளி மகமாயி

கழுத்துதனில் உள்ள முத்தை மார்புதனில் இறக்கம்மா

மாரி மகமாயி மாரி மகமாயி

மார்புதனில் உள்ள முத்தை வயிறுதனில் இறக்கம்மா

வாரி மகமாயி வாரி மகமாயி

வயிறுதனில் உள்ள முத்தைத் தொடைதனிலே இறக்கம்மா

தாயி மகமாயி தாயி மகமாயி

தொடைதனிலேயுள்ள முத்தை முட்டிதனில் இறக்கம்மா

மூது மகமாயி மூது மகமாயி

முட்டிதனில் உள்ள முத்தைக் காலதனில் இறக்கம்மா

காளி மகமாயி காளி மகமாயி

காலதனில் உள்ள முத்தைப் பாதந்தனில் இறக்கம்மா

பாரி மகமாயி பாரி மகமாயி

பாதந்தனில் உள்ள முத்தை நிலத்தினிலே இறக்கம்மா

நித்ய மகமாயி நித்ய மகமாயி”

 

ஏதோ பிடியினின்று விடுபட்டதுபோல், குழந்தைக்கு உடல் உதறியது. எல்லோரும் போய்விட்டதென்று நினைத்துக் கொண்டு, ‘குய்யோ முறையோ’ என்று அடித்துக்கொண்டு ஓடிவந்து பார்த்தார்கள். அவன் துங்கிக் கொண்டிருந்தான். முகத்தில் ஒரு புது நிம்மதி. தேகம் வியர்த்து ஜூரம் விட்டிருந்தது.

 

ஐயர் அப்படியே அதிசயித்து நின்றார்.

 

ஒரு வாரம் கழித்துக் குழந்தைக்கு ஜலம் விட்டார்கள். குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு ஜனனி விக்கி விக்கி அழுதாள். ஏனென்று அவளுக்கே புரியவில்லை. தாய்க்கும் விஷம் கக்காமலிருக்க முடியவில்லை.

 

“இதென்னடியம்மா கூத்து கொழந்தை சாகல்லையேன்று அழறையா?” ஜனனிக்குப் பூஜையறையில் யாரோ சிரித்தாற் போலிருந்தது. ஒடிப்போய்ப் பார்த்தாள். ஆனால் அங்கே

யாரையும் காணவில்லை.

# # #

 

ஜனனி மதமதவென வளர்ந்தாள். சீக்கிரமே பக்குவம் அடைந்துவிட்டாள். கறுப்புத்தான். கட்டு உடல், கட்டு மயிர். உறுப்புக்களில் நல்ல முறுக்கு. அதே மாதிரி கோபமும் முறுக்குத்தான். ஒருவருக்கும் அடங்க மாட்டாள். சட்டுச் சட்டென்று கோபம் வரும்; வந்த சுருக்கில் தணிந்துவிடும்.

 

“அடியே இப்படி அடங்காப்பிடாரியாய் இருக்கையே! உன் புக்ககத்துக்குப் போனால், உன் மாமியார் நீ பண்ணற அட்டகாசத்துக்கு உன்னை இடிக்கறது போறாதுன்னு உன்னை யாருடி வளர்த்தான்னு என் பேரையும் சந்தியில் இழுப்பாடி!”

 

“உன்னை எந்த மாமியார் இப்போ இடிச்சுண்டிருக்கா அம்மா?”

 

“உன் நாக்கைச் சுட்டெரிக்க! என் மாதிரி நாலாவதாய் வாழ்க்கைப்பட்டால், மாமியார் மாத்திரமில்லே, புருஷன் கூட ரொம்ப நாள் தக்கமாட்டாண்டி!”

 

அம்மாள் சொன்னதற்குத் தகுந்தாற்போல், கிழவருக்கு உடம்பு வரவர ஒடுங்க ஆரம்பித்துவிட்டது. ஜனனியை எங்கேயாவது கையைப் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்னும் கவலை ஓங்க ஆரம்பித்துவிட்டது.

 

அம்மாளுக்கு ஜனனி வந்த ராசி எல்லாம் மறந்து விட்டது. “வாசல்லே போற சனியனை விலைக்கு வாங்கினாப்போலே என்கிற பெரியவாள் வாக்கு சரியாப் போச்சு. நன்னாக் கட்டிண்டு அநுபவிங்கோ”

 

“அடியே, இன்னும் நாலு நாள் கழித்துப் போகும் என் உயிர் உன்னால் இப்பவே போயிடும்போலே இருக்கிறதே!”

 

“நீங்க நன்னா இருங்களேன். என் ஆயுசிலேயும் பாதி கொடுக்கிறேன். நாலுபேர் நடுவுலே தாலிகட்டி, சாந்தி சீமந்தம் எல்லாம் பண்ணிப் பெத்து வளர்த்த குழந்தையைப் பண்ணிக்கிறத்துக்கே, ஆயிரம் ஜோஸ்யம் பார்த்து, அழகு பார்த்து, அந்தம் பார்த்து தெரிஞ்சு விசாரிச்சு, தெரியாமெ விசாரிச்சுப் பண்ணிண்டுட்டு, அப்புறங்கூட அது சரியாயில்லே, இது சரியாயில்லேன்னு குத்தம் படிக்கற நாளிலே, எங்கேயோ வழியிலே கண்டெடுத்த பொண்ணை எவன் தலையிலேயாவது லேசிலே கட்டிவிட முடியுமா, என்ன?”

 

அவள் வாக்கு அசரீரிதான். ஐயர் தம் வளர்ப்புப் பெண் கல்யாணத்திற்குச் செய்யும் முயற்சிகள் எல்லாம், உருவாவது போல் ஆகி, திரளும் சமயத்தில், பொட்டென உடைகையில், அவருக்கு உள்ளுறத் திகிலே உண்டாயிற்று. ஒரு பெண் பிறந்தால், அதற்கு ஒர் ஆண் படைத்துத்தான் இருக்கவேண்டும் என்னும் கடைசி நம்பிக்கை அல்லது நம்பிக்கையற்ற திடந்தான் அவரை உந்திக்கொண்டு போயிற்று. ஜாதகக் கட்டைத் தூக்கிக் கொண்டு எங்கெங்கோ வெளியூரெல்லாம் சுற்றி வந்தார்.

 

அப்புறம் ஒருநாள், “எல்லாம் வேளை வந்தால்தானே வரும்! நாம் மாத்திரம் அவசரப்பட்டால் முடியுமா? பார். குழந்தைக்கு ஒரு புருஷனைத் தேடிப் பிடித்துவிட்டேன்!” என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டே ஐயர் வீட்டுள் நுழைந்தார்.

 

பையன் எங்கோ துரதேசத்தில் ராணுவத்தில் வேலையிலிருந்தான்.

 

கல்யாணத்துக்கு முதல் நாள் மாலைதான் பையன் வீட்டார் வந்து இறங்கினார்கள். பிள்ளையைப் பார்த்தவர்கள் பிரமித்தே போய்விட்டார்கள். இன்னமும் சிலர் அசூயையால் வெடித்தே போனார்கள். “ஜனனி காத்திருந்தாலும் காத்திருந்தாள்; அதிருஷ்டச் சீட்டு அடித்துவிட்டாள். பையன் சிவப்பிலேயும் சிவப்பு, செந்தாழைச் சிவப்பா ராஜா மாதிரி இருக்காண்டி!”

 

“மணையிலே உட்கார்ந்தா, ரெண்டுபேருக்கும் ஜோடி கூட ஒட்டாதேடி!”

 

“என்னடி பைத்தியம் மாதிரி பேசறே? பணம் ஒட்ட வைக்காத பண்டங்கூட உண்டா? இரண்டாயிரத்துக்கு நாலாயிரமாத் தளர்த்தினால், வஜ்ரம் மாதிரி ஒட்டிக்கிறது!”

 

ஐயர் நாலுநாள் கல்யாணம் பண்ணி, பணத்தை வாரி இறைத்தார். சமையலுக்கோ சடங்குக்கோ உடையும் ஒவ்வொரு தேங்காயுடன் அம்மாளின் வசை வார்த்தைகளும் வெடித்தன. “இந்த பிராமணன் எந்தக்குடி பாழாப் போறதுன்னு நெனைச்சுண்டிருக்கான்? பிள்ளையில்லாச் சொத்தா இது?”

 

அவள் வார்த்தையைச் சட்டை செய்வார் யார்?

 

நான்கு நாள் கல்யாணத்திற்குப் பிறகு, ஐந்தாம் நாள் சாந்தி பண்ணி, பெண்ணைப் புக்ககத்துக்கு அனுப்புவதாக இருந்தது. ஆனால் மூன்றாம் நாள் இரவு மாப்பிள்ளைப் பையனுக்கு அவன் அதிகாரிகளிடமிருந்து, உடனே புறப்பட்டு வரும்படி ஒரு தந்தி வந்தது. பாலிகை கொட்டக்கூட நேரமில்லாமல், பையன் மறு வண்டிக்குப் புறப்பட்டுப் போய் விட்டான்.

 

அப்பொழுது தடைப்பட்ட சாந்தி, அப்படியும் இப்படியும் ஒத்திப் போய்க்கொண்டே வந்தது. மணமாகிப் போன பையன் மறுபடியும் வேறு எந்த விசேஷத்திற்குங்கூட வரமுடியவில்லை. அவனை ஒர் இடமும் ஸ்திரமென்றில்லாமல், அதிகாரிகள் மாற்றி மாற்றி அம்மானை ஆடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம்.

 

ஜனனி இப்படித்தான் புக்ககம் போகாதபடி நேர்ந்த தடங்கலைப் பாராட்டினாளோ, இல்லையோ என அவள் வெளித்தோற்றத்தில் ஒன்றும் தெரியவில்லை. முன்னைவிடப் பன்மடங்கு துடிப்பு மிடுக்குடன்தான் பொலிந்தாள்.

 

அம்மாளோ, தன்னுடன் வம்படிக்க வருவோரிடம், தன் கன்னத்தைத் தானே இழைத்துக்கொண்டு முறையிட்டுக் கொண்டாள்.

 

“நல்ல நாளிலேயே சொல்ல வேண்டாம், அவர் செல்லம்! ஆனால் அப்பவாவது கொஞ்சத்துக்குக் கொஞ்சம் கட்டியாண்டு வந்தேன். ஐயேடி! அந்தாத்துப் பொண்ணா, அங்கே நிக்கறதடி, இங்கே நிக்கறதடி, அவாளோடெ பேசித்து, இவாளோடெ பேசித்துன்னு, நாலுபேர் வாயிலே புகுந்து புறப்படாமெ, ஏதோ கொஞ்சத்துக்குக் கொஞ்சம் கண்டிச்சு வந்தேன். ஆனால் கல்யாணம் ஆணப்புறம் இவளுக்கு வந்திருக்கிற இறுமாப்புக்குக் கேக்கணுமா? “புருஷாளுக்கு அரைக் காசுன்னாலும் உத்தியோகம், பொம்மனாட்டிக்கு அம்பது வயசானாலும் புருஷன்”னு சும்மாவா சொன்னா? மஞ்சக் கயிறுன்னு ஒண்ணு கழுத்திலே ஏறிட்டாப் போறும். புருஷன் மேலே பழியைப் போட்டுட்டு என்ன அக்ரமம் வேணுமானாலும் அவாள் பண்ணலாமே. நீங்களும் நானும் வாழ்க்கைப்பட்ட நாளா இது, மாமி!”

 

அம்மாள் மற்றவரிடம் விதவிதமாய்ச் சிங்காரச் சொல் வைத்து முறையிடுவதைக் கேட்டுக்கொண்டு, ஐயர் ஒவ்வொரு நாள் வந்துவிடுவார். “ஏண்டி கரிக்கிறே குழந்தையை? உன் கண் சுட்டெரிப்புக்காவது அவள் அகமுடையான் அவளைக் கூட்டிக்கொண்டு போக மாட்டானா?”

அவ்வளவுதான். இடுப்புக் குடத்தைப் பொத்தென ஜலம் தளும்பித் தெளிக்கக் கீழே வைத்துவிட்டு, முன்றானையை வரிந்து கட்டிக்கொண்டு, காற்றைக் கையால் துழாவிக் கொண்டு, அம்மாள் சண்டைக்கு வந்துவிடுவாள்.

 

“நன்னாச் சொல்லுங்கோ ஜனனி கவலையை ஜனனி இதுவரை பட்டதில்லை. அவளைப் பெத்தவா கவலையை நீங்க வாங்கிண்டு, ஆத்துக்குக் கொண்டு வந்துட்டேள். வளத்த கவலையை நான் பட்டாச்சு. கல்யாணமானாக் கஷ்டம் விடியுமான்னா, அவள் புகுந்த கவலையையும் பட்டுண்டிருக்கோம் இன்னும்- போறுமோன்னோ- திருப்தியாச்சா?”

 

வார்த்தைகளால் குத்தி வாங்குவதில், அம்மாள் அலாதி வரப்பிரசாதி, ஐயர் அப்படியே தலை கவிழ்வார்.

 

# # #

 

ஜனனி ஒருநாள் பகலில் குளத்தில் குளித்துக்கொண் டிருந்தாள். கிணற்றடியில் குளிப்பதைவிட, குளத்தில் துளையத் தான் அவளுக்கு இஷ்டம். அம்மாளுக்கும் அவளுக்கும் இதைப் பற்றி வேண்டிய தகராறு உண்டு. அம்மாள்– ஒன்று சொல்ல வேண்டும்–படி தாண்டாள் வம்பு எல்லாம் அவளைத் தேடிக் கொண்டு வருமேயொழிய, அவளாக வம்பைத் தேடிக் கொண்டு வெளிக் கிளம்பியதில்லை.

 

“மேட்டிமைக்காரி, ராங்கி” என்று பொறாதவர் குற்றம் சொன்னாலும், அம்மாளை நேரில் கண்டால் எல்லோருக்கும் பயந்தான். அத்தனைக்கத்தனை ஜனனியின் கலகலப்பு அவர்களுக்கு, (நல்ல எண்ணமோ கெட்ட எண்ணமோ) குதுகலமாய்த்தான் இருந்தது.

 

ஜனனி ஒருநாள் பகலில் குளித்துக்கொண்டிருந்தாள்.

 

திடீரென்று தன்னை யாரோ ஊன்றிக் கவனிப்பது போன்ற உணர்ச்சி எழுவதை உணர்ந்தாள். சுற்றுமுற்றும் நோக்கினாள். எதிர்க்கரையில் ஒருவன் தன்னையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் முகத்தைப் பார்க்கவில்லை. தன்னிடம் என்ன என்று பார்த்துக் கொண்டாள். வலது விலாப்புறத்தில், தோள் குழிவுக்கு அடியில், ரவிக்கை இரு பாதிகளும் ஒட்டிய இடத்தில், உடல் வளர்ச்சியையே தாங்கமுடியாமல், தையல் தாராளமாய் விட்டிருந்தது. வெயில் படாத அவ்விடத்துச் சதை தனி வெண்மையுடன் பிரகாசித்தது.

 

ஜனனி மனத்தில் தனி பயங்கரம் திடீரெனக் கண்டது. அப்படியே புடவையை வாரிச் சுருட்டிக்கொண்டு வீட்டுக்கு ஒட்டம் பிடித்தாள். அவள் உடலெல்லாம் வெடவெடத்தது.

 

அன்று முழுவதும் மனம் சரியாயில்லை. ஆயினும் தான் படுவது இன்னதெனத் தெரியவில்லை. அதனாலேயே வேதனை அதிகரித்தது. முதல் முதலாய் ஜனனி தனக்குத் தானே புரியாத சிந்தனையில் ஆழ்ந்தாள். இரவு படுத்தும் வெகுநேரம் தூக்கம் வரவில்லை.

 

— நள்ளிரவில், ஜனனி திடுக்கென விழித்துக்கொண்டாள். உடலில் மறுபடியும் பயங்கரமான புல்லரிப்பு. அவளையும் மீறியதோர் சக்தி வசப்பட்டவளாய்க் கட்டிலினின்று எழுந்து ஜன்னலண்டை போய் நின்றாள்.

 

முழு நிலவின்மேல் கருமேகங்கள் சரசரவெனப் போய்க் கொண்டிருந்தன.

 

தெருவில் வீட்டு வாசற்படியெதிரில் ஒர் உருவம் நின்றது. வெள்ளைத் துணி போர்த்து, நெட்டையாய், கைகளை மார்மேல் கட்டி நின்றுகொண்டிருந்தது. சத்தமும் நடமாட்டமும் நின்று நீண்டுபோன தெருவில், தனியாய், ஏதோ, எதனுடைய சின்னமோ மாதிரி. முகம் அவள் ஜன்னல் பக்கம் திரும்பி யிருந்தது. குளத்தில் கண்டவன்!

 

ஜன்னலிலிருந்து ஜனனி சட்டெனப் பின்வாங்கினாள். இடுப்புக்குக் கீழே கால்கள் விட்டு விழுந்து விடுவனபோல் ஆட்டங் கொடுத்தன. உடல் நடுங்கியது. பயந்தானா? முழுக்க முழுக்கப் பயந்தானா? புரியவில்லை. சமாளித்துக் கொண்டு, சுவரை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு, சுவருடன் ஒட்டிக்கொண்டாற்போல் மாடிப்படிகளில் மெதுவாய்க் கால் வைத்து இறங்கினாள். கண்ணெதிரில், இருள் திரையில், அவன் விழிகள் மாத்திரம் பேருருக்கொண்டு நீந்தின. அவைகளில் உலகத்தின் ஆசாபங்கத்தின் எல்லை கடந்த சோகத்தையும், அதே சமயத்தில் உயிரின் ஆக்கலுக்கும் அழித்தலுக்கும் அடிப்படையான மிருகக் குரூரத்தையும் கண்டாள். அந்த ஏக்கத்தை ஆற்ற ஒரு பரிவு தாவுகையில், துக்கம் தொண்டையைக் கல்லாயடைத்தது. ஆயினும் அந்தத் தாபத்தின் கொடுரம் சோகத்தின் பின்னிருந்து பாம்பைப்போல் தலை நீட்டுகையில் அதன் முகத்தைக் கண்டு உள்ளம் உள்ளுக்கு உடனே சுருங்கிற்று.

 

இப்படி ஒன்றாய் இருந்துகொண்டே இரண்டாய் வெட்டப் பட்டுத் துடிக்கும் வலி பொறுக்கக் கூடியதாயில்லை.

 

சத்தம் போடாமல், பூஜையறையைத் திறந்தாள். தீப்பெட்டியைத் தட்டுத் தடுமாறித் தேடிப்பிடித்துக் குத்துவிளக்கை ஏற்றினாள். திரியினின்று குதித்தெழுந்த சுடரில், அவள் படும் சஞ்சலத்துக்கு ஆறுதலைத் தேடி நின்றாள்.

 

ஆனால் அவள் தேடிய தெளிவு மனத்தில் ஏற்படவில்லை. எல்லாம் தெரிந்த இறைவன் முன்போலிராது, ஒன்றுமே தெரியாதவன்போல்தான் இருந்தான். இதுவரை தன்னை மறந்துவிட்டு இப்பொழுதுதான் தேடி வந்தாள் என்ற கோபமா? இரவில் எல்லோருக்கும் உள்ள தூக்கம் தனக்கும் உண்டென. சுடரில் இல்லாமல் தூங்கப்போய் விட்டானா?

 

அழுத்தும் உணர்ச்சிகளின் புதுமையினாலும் வருத்தத்தினாலும் ஜனனி குழம்பி நின்றாள். அவளைத் தாக்கும் புதுமைக்குள்ளேயே உணர்ச்சிகளின் பழமை புகுந்துகொண்டு அவளைக் கேலி செய்தன.

 

“நீங்கள் யார்? என்னைவிட்டுப் போய் விடுங்களேன்!”

 

“நாங்கள் யார்? எங்கே போக வேண்டும்? எங்கிருந்தாவது வந்தோமா? எங்கேயாவது போக? உன்னுள்ளேயேதானே வளர்ந்தோம்? உன்னுள்ளேயேதானே கண்ணாமூச்சி விளை யாடுகிறோம்? கண்டுபிடியேன்! கண்டுபிடிக்கத்தானே வந்தாய்? உனக்கும் எங்களுக்கும் இன்றைப் போட்டியா, நேற்றையப் போட்டியா? கண்டுபிடியேன்! கண்டுபிடி! பிடி! பிடி ஹோ ஹோ ஹோ!” அவைகளின் சப்தமற்ற கொக்கரிப்பு தாங்கக் கூடியதா? ஜனனி தடாலென்று குப்புற விழுந்து விக்கி விக்கி அழுதாள். மார்பே வெடித்துவிடும் போலிருந்தது.

 

அன்று முதல் அவள் துடிப்பும் கலகலப்பும் வெளி நடமாட்டமும் அடங்கிப் போயின. அறையிலேயே மணிக் கணக்கில் சேர்ந்தாற்போல் மோவாய்க் கட்டையைக் கையில் ஊன்றிக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். பக்கத்தில் வந்து கூப்பிட்டாலும் காது கேட்பதில்லை. கேட்டு வாங்கி அடைத்துப் புடைத்துச் சாப்பிடும் ஜனனிக்கு இப்பொழுது கூப்பிட்டு உட்கார வைத்துக் கொட்டினாலுங்கூட இறங்க வில்லை.

 

திடீரென இளைக்க ஆரம்பித்தாள்.

 

“இதென்னடீம்மா கூத்து. திடீரென்று இவளுக்கு வந்திருக்கிற வினை ஊமை ஊரைக் கெடுத்ததாம்னு–!”

 

ஜனனியின் கண்கள் நிறைந்து கண்ணீர் கன்னம் புரண்டு ஒடும். ஆனால் துடைக்கக்கூட முயலுவதில்லை. உட்கார்ந்த நிலைகூட மாறுவதில்லை. அவளுள் ஏதோ தகர்ந்து விட்டது.

 

“அடிப்பாவி! குழந்தையை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்காதேடி ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள், புருஷனிடம் இன்னும் போகவில்லையே என்று இருக்காதா?”

 

# # #

 

ஜனனியின் புருஷனைப்பற்றி ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவிதமாய் வதந்தி உலவியது.

 

‘இருந்த இடத்தில்தான் இருக்கிறான்- சகவாச தோஷம்–கண்ட இடத்தில் கண்ட பேரோடு சுற்றுகிறான். குடி கூத்தி, புகை– இல்லாத பழக்கங்கள் எல்லாம் வந்திருக்கின்றன.’ இருக்கிறது இல்லாதது எல்லாம் சேர்ந்து நாலுபேர் வாயில் மாறிமாறி வந்து காதில் விழுகையில் கிழவரின் கிலேசம் சொல்லத் தரமல்ல. ‘இதென்ன, தள்ளாத வயதில் உளையில் மாட்டிக்கொண்டோமே! எனத் தவிப்பார். இதே நிலையில் நான் காலமாய்விட்டால் ஜனனியின் கதி என்ன? நமக்கு வாய்த்தவளோ தாடகையா இருக்கிறாளே!’ என்று ஆண்டவ னிடம் முறையிட்டுக் கொள்ளலாமெனில் பூஜையறையில் அவருக்கு முன்னால் ஜனனி உட்கார்ந்திருப்பதைக் கண்டு, உள்ளே போகவும் அஞ்சி பின்னடைவார்.

 

மாலையில் சமையலறையிலிருந்து அம்மாள் இரைவாள். “வீட்டுக் காரியங்கள் போட்டது போட்டபடிக் கிடக்கு. பூஜையில் ஒக்காந்துண்டு சாமியை வேரோடு பிடுங்கினால் ஆயிடுத்தா? புருஷன் போட்டோவுக்குப் பூவைச் சூட்டி அந்தரங்க மனசோடு ரெண்டு நமஸ்காரம் பண்ணினாலாவது லாபமுண்டு!”

 

ஜனனிக்கு இது கேட்டதோ? உட்கார்ந்துகொண்டே இருந்தாள். கண்களில் ஜலம் பெருகியவண்ணம் இருந்தது.

 

எதிர் வீட்டுத் திண்ணையில் சில சமயங்கள் உபந்தியாசங்கள் நடக்கும்.

 

புராணிகர், “கல்லால மரத்தடியில் சடையில் சூடிய பிறைச் சந்திரனிலிருந்து அமிர்த தாரை விடாது வழிந்து கொண்டிருக்க, சிப்பிமுத்துப் போன்ற வெண்மையான உடலுடன், தன்னைத்தானே தியானம் பண்ணினவனாய், தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபத்தில் ஈசுவரனானவன்–” என்று சொல்வார்.

 

அல்லது —

 

“ஊசி முனையில் கட்டைவிரலை அழுத்தியவளாய், பர்வதராஜகுமாரி, பராசக்தி, அளகபாரம் ஜடாபாரமாக, ஆகாரத்தைத் தள்ளிவிட்டு, ஜலபானங்கூடப் பண்ணாது, காற்றையே புசிப்பவளாய், பிறகு அதையும் நிராகரித்தவளாய், சந்திரசூடனுடைய தியானத்தையே ஆகாரமாய்க் கொண்டவளாய், மஹா தபஸ்வியாய்.”

 

# # #

 

திடீரென ஒருநாள் ஐயருக்குக் கடிதம் வந்தது. அதைப் பிரித்துவிட்டு ஐயர் ஆச்சரியத்தாலும், எதிர்பாராது நேரும் சந்தோஷத்தைத் தாங்காத உணர்ச்சியாலும், உடலும் குரலும் நடுங்க, கூடத்துக்கு ஓடிவந்தார்.

 

“அடியே, குழந்தை எங்கே? அம்பாள் கண்ணைத் திறந்துட்டாடி மாப்பிள்ளைப் பையன் அடுத்த வாரம் வராண்டி!–” அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. முகமாறுதலின்றி ஜனனி சமாசாரத்தை ஏற்றாள். அவள் மனத்தில் என்ன ஓடியது என யார் கண்டார்? அவளே கண்டாளோ?

 

அம்மாளுக்கு எரிச்சலாய் வந்தது. “இவள் சமாசாரம் என்னிக்குத்தான் புரிஞ்சுது? ஆம்படையான் வரான்னா, இடிச்ச புளி மாதிரியா இருக்கு இது மனுஷ ஜன்மந்தானா?”

 

ஐயர் சாந்தி முகூர்த்தத்தை முதல் முகூர்த்தம் மாதிரி தான் சப்பிரமமாய்க் கொண்டாடினார். அம்மாள்கூட இந்தத் தடவை அவ்வளவு எரிச்சலாய் இல்லை.

 

மாப்பிள்ளைப் பையன், மணப்பாயில் மணமகள் அருகில் உட்கார்ந்திருக்கையில் இன்னமும் அதிகமான சோபையோடு திகழ்ந்தான். முன் மண்டையில் மயிர் முன்பார்த்ததைவிட அதிகமாய்க் கொட்டியிருந்த போதிலும், லேசாய்ப் படர்ந்து வரும் அந்த வழுக்கையும் அழகு வழுக்கையாய்த்தான் இருந்தது. அளவு மீறிய இன்ப நுகர்ச்சியின் வடுக்கள் முகத்தில் விழுந்திருந்தன. ஆனாலும் இன்னமும் அந்த உடலும், அவ்வுடலை அதன் சறுக்குப் பாதையில் விரட்டி ஒட்டிக் கொண்டிருக்கும் நெஞ்சுத் திடமும் இதைவிட அவன் அதிகம் தாங்குவான் என்பதை உணர்த்தின.

 

அடர்ந்த புருவங்கள் சவுக்குப் புதர்கள்போல் சிலிர்த்துக் கொண்டு விசிறியெழுந்து சந்திக்கும் இடத்தில் இட்டிருந்த சந்தனப் பொட்டு, அதனுள் குங்குமத் திலகம், அசலாய் நெற்றிக் கண்ணையே திறந்து வைத்தாற்போல் முகத்துக்கு ஒர் உக்கிரமான அழகைக் கொடுத்தன. கடைக்கண் பார்வையில் சிந்திய வெற்றி, அங்கே குழுமியிருந்த பெண்களைக் கொள்ளை கொண்டது.

 

ஜனனி மணவறையில் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 

வெளியில் நிறைந்த இருளினின்று உருவாகி உருவங்கள் எழுந்தன. ஒன்று, இரண்டு, நூறு, ஆயிரம்– இத்தனை நாட்கள் உள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டிருந்த ஆத்திரத்தின் நிழல் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு தனியுருக்கொண்டு அவள் கண்முன் விரித்தாடியது.

 

“ஜனனி, அடையாளம் தெரிகிறதா? அன்றைக்கு! எங்களை நீ மறக்க விட்டுவிடுவோமா? இன்னமும் நாங்கள் யார் என்று கண்டுபிடிக்கவில்லையே? சே என்ன இவ்வளவு அசடாக இருக்கிறாய்? தொட்ட பிசுக்கு விட்ட பிசுக்கு, எட்டப் பிசுக்கு கிட்டப் பிசுக்கு, ஜன்மப் பிசுக்கு இதெல்லாம் நீ கேள்விப்பட்டதில்லையா? எங்களுக்குத் தலை கிடையாது. உயிருண்டு; நாங்கள் கபந்தங்கள். ஆடுவோம், பாடுவோம், சிரிப்போம், அழுவோம், அழிவோம், அழிய மாட்டோம்–”

 

ஜனனிக்கு நெற்றிப் பொட்டில் வியர்வை அரும்பியது.

 

“பயமாயிருக்கிறதா? பயப்படாதேம்மா! பயப்படாதே கண்ணு! நாங்கள் இத்தனை பேர்கள் இருக்கிறோமே, எதுக்கு பயம்?”

 

“ஜனனி”

 

தோளில் கைபட்டு, ஜனனி திடுக்கிட்டுத் திரும்பினாள். அவள் கணவன் புன்னகை புரிந்தவண்ணம் நின்றுகொண்டிருந்தான்.

 

“என்ன பயந்துவிட்டாய்? என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா?”

 

ஜனனிக்கு மண்டை எரிந்தது. அவனை அவள் மெளனமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஜன்னலின் வெளியில் அவள் கண்ட பேயுருவங்கள், உள்ளே பறந்து வந்து சிரித்துக்கொண்டே அவள் உள்ளே புகுவதை உணர்ந்தாள். ஜலத்தைக் குடித்து உப்பும் நெட்டிபோல், தனக்குத்தான் பெரிதாகிக்கொண்டு வருவது போன்ற ஒரு பயங்கர உணர்ச்சி.

 

அவள் உருவம் பெரிதாக ஆக, அவன் உருவம் அவளுக்குச் சுருங்கிக்கொண்டே வந்தது. போகப் போக அவன் புழுப் போலாகி, அவன் சிரிப்பும், அங்க அசைவுகளும் புழுவின் நெளிவைப்போல், அவளுள் பெரும் சீற்றத்தையும் அருவருப்பையும் எழுப்பின. அவளுள் அடைந்த பல்லாயிரம் பேய்களும் ஒரே பேயாய்த் திரள ஆரம்பித்தன.

 

“என்ன அப்படிப் பார்க்கிறாய்! கோபமா? நியாயந்தான். உனக்கு உன் நியாயம், எனக்கு என் நியாயம். இப்பொழுது சரியாய்ப் போய்விட்டதோன்னோ? சிந்திப்போனதைச் சிந்திக்காதே. இன்னமும் நான் எவ்வளவோ போயிருக்கிறேன், வந்திருக்கிறேன். வா, வா. பெண்களுக்குக் கோபம் அழகாய்த் தான் இருக்கிறது. ஆனால் அந்தக் கோபம், புருஷர்களுடைய பொறுமைக்கு அடங்கியிருக்கும் வரைதான் அழகு மீறினால் பேய்தான்!”

 

அவள் உள் திரண்டுகொண்டு இருக்கும் உருவிற்கு அவள் கணவனின் வார்த்தைகளே உயிர்ப்பொறி வைத்ததும், ஜனனி உடல் குலுங்கியது.

 

அவள்மேல் அவன் கைகள் விழுந்தன. அவளை ஒரே வீச்சில் வாரி மார்போடு மார்பாய் இறுக அணைத்தன. அவனுடைய முரட்டுத்தனத்தில் அவள் மார்பில், தாலிப்பல் அழுந்தியது.

 

ஜனனி திணறினாள். அவளுள் திரண்ட பூதம் அவனை ஒரு விசிறு விசிறியது. தள்ளிய வேகத்தில் கால் தடுக்கிப் பின்னுக்கே போய்க் கீழே விழுந்தான். இரும்புக் கட்டிற்கால் முடிச்சில் பின்மண்டை ‘மடே’ரென மோதியது.

 

அடிவேகத்தில் அவன் கத்தக்கூட இல்லை. “ஜனனி!” என மெதுவாய் முனகினான். அப்படியே தலை தொங்கி விட்டது. மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் குபுகுபுத்தது. ஜனனி திக்பிரமை பிடித்து நின்றாள்.

 

“ஜனனீ! ஜனனி! மாப்பிளே, மாப்பிளே!” கதவைப் படபடவெனத் தட்டுகிறார்கள். கதவைத் திறக்கக்கூடத் தோன்ற வில்லை. நின்றபடி இருந்தாள்.

 

கதவை உடைத்துக்கொண்டு உள்ளே தள்ளிக்கொண்டு புகுந்தார்கள். அவனையும் அவளையும் கண்டு பின்வாங்கினார்கள். கிட்டப் போகக்கூட அஞ்சியவர்களில் ஒருவன், தைரியம் கொண்டு, மாப்பிள்ளை மார்பில் கையையும், காதையும் வைத்துப் பார்த்தான். செத்துப் போனவர்களுக்குச் செத்தது தெரிந்திராது அவ்வளவு விரைவில் பிராணன் போயிருந்தது.

 

“ஜனனீ! என்னடி?”

 

ஜனனிக்குக் கண்களில் ஜலம் ஆறாய்ப் பெருகிற்று. ஆனால் பேச முடியவில்லை. வாய் அடைத்துவிட்டது.

 

“பலே! ஜனனீ!” என்று ஒரு வெறிக் குரல் அவளுள்ளே எழுந்தது.

 

“ஐயோ! ஜனனீ!” என இன்னொன்று விக்கி விக்கி அழுத்து.

 

# # #

 

“ஜனனீ! ஜனனீ!”

 

அவள் திடுக்கென விழித்துக்கொண்டாள். இந்த நள்ளிரவில் மையிருளில் யார் அழைப்பது? அவளுள் எழுந்த வினாவிற்கு அக்குரல் உடனே பதிலளித்தது. “ஆம், ஜனனீ! உன்னை மீட்கத்தான் வந்தேன். ஆயினும் நீ நினைக்கும் மீட்சியல்ல. உன்னை உனக்கு உணர்த்த வந்தேன். நீ உணர்ந்தால் நீ மீள்வாய்.”

 

ஜனனி திடீரென உணர்ந்தாள். நள்ளிரவில், மையிருளில், குழலினிமையில் வரும் இக்குரல், வெளியினின்று வராது, தன்னுள் இருந்துதான் வருகிறதென்று உணர்ந்தாள். இக்குரல் மெளனமாயும், அன்பாயும், அதே சமயத்தில் ஒர் அழுத்தத்துடனும் ஒலித்தது. எங்கேயோ, எப்போதோ கேட்ட மாதிரி இருந்தும் இந்தப் புதுக்குரல் அவளுக்கு பயமாக இருந்தது. அவளையுமறியாது அவள் நாக்கு “நீ யார்?” என்னும் வினாவை உருவாக்க முயன்றது.

 

“நான் யார்? என்றுமே, நீ பிறப்பதற்கு முன்னரே முதல், உன்னிடம் இருந்துகொண்டு உன்னிடமிருந்து என்றுமே நீங்காதிருக்கிறேன். என்னைப் புரியவில்லையா? நீ உன்னைப் புரிந்துகொண்டால், என்னைப் புரிந்துகொள்வாய். ஏனெனில் நீயேதான் நான். நீ என்னைக் கண்ணால் கண்டது மறந்தாலும், என் குரலைக் காதில் கேட்டது ஞாபகம் இல்லையா? என்னைக் கண்டதும் கேட்டதும் ஞாபகம் இல்லையானாலும், என்னைக் காணவும் கேட்கவும் முயன்றதுகூட ஞாபகம் இல்லையா? யோசி யோசி! நன்றாய் யோசித்துப் பார்.”

 

திடீரென நினைவு வந்த அதிர்ச்சியில், ஜனனிக்கு இருளில் கண்கள் அகல விரிந்தன. “குத்துவிளக்கில். ப்ரபோ!” ஜனனி ஹோவெனக் கதறினாள்.

 

“ஆ! இப்பொழுது உனக்கு ஞாபகம் வருகிறது. நீ விளக்கைத் துண்டியபொழுது யாரைத் தூண்டுவதாக நினைத்தாய்? உன்னையேதான் நீ தூண்ட முயன்றாய். நாளடைவில், நீயாக எடுத்துக்கொண்ட பிறப்பின் மாசும், காலத்தின் துருவும் ஏற ஏற, உன்னுள் இருக்கும் நான் உன்னுள் எங்கேயோ படு ஆழத்தில் புதைந்து போனேன். உன்னுள் இப்பொழுது நேர்ந்த பூகம்பத்தினால் நீயே புரண்டதால், உன்னுள் புதைந்துபோன நான் இப்பொழுது வெளிவந்தேன்.”

 

“என்னைக் கைவிட்டாயே என் கடவுளே!-”

 

“ஜனனீ, நீ என்னை விட்டு ஒடிப்போனாய். ஆனால் நீயே நானாய் இருப்பதால் உன்னை விட்டு நான் ஒட முடியாது. உன்னுடன் ஒட்டிக்கொண்டு வந்தேன். வந்த என்னையும் உன்னுள் புதைத்துவிட்டாய். புதைத்தும், எனக்குச் சாவு இல்லாததனால், நீ என்மேல் மண்ணைப் போட்டு மூடினாலும், நான் மூச்சுக்குத் தவித்துக்கொண்டாவது இருந்துகொண்டு தானிருக்கிறேன். என்னைப் புதைத்துவிட்டு என்னைக் கூப்பிட்டால் நான் வரமுடியுமா? ஆனால் இப்பொழுது நீயே உன்னுள் புரண்டதால், நான் வெளிவந்தேன். என் கைகள் ஒடிந்திருக்கின்றன. இருந்தும் உன்னை அணைக்கத்தான் நீட்டுகிறேன். நீ நானாக இருப்பினும், நான் நானாய்த்தான் இருக்க முடியும். நான் நான்தான். நான் நீயாக முடியாது. நீதான் நானாக முடியும் எனக்கு நானிலிருந்து மாறும் இயல்பு இல்லை.

 

“ஜன்னீ, நீ இதை அறி. இப்பொழுது நீ– என்னிலிருந்து பிரிந்த நீ– மறுபடியும் ‘நா’னாய்க் கொண்டிருக்கிறாய். அதனால்தான் நான் மறுபடியும் உன்னில் உருவாக முடிகிறது. எங்கும் பரவி நிலையற்று உருவற்றது. உருவற்ற நிலையிலிருந்தே உருவாய்ப் பிரிய முடியும். அவ்வுருவற்ற நிலையின் சாயையை, அவ்வுருக்கள் தாங்கியிருப்பினும், அவை அவ்வுருவற்ற நிலையின் பிளவுகள்தாம். ஏனெனில் முழுமையின் துண்டங்கள் அவை. அப்பொழுது, துண்டங்களின் துண்டங்கள் முழுமையின் எவ்வளவு பின்னம்! ஆகையால் ஜனனீ, ஜனனம் எவ்வளவு பின்னம்! ஆயினும் துண்டங்கள் இன்னமும் துண்டமாகி, பொடியாகி, அப்பொடி இன்னமும் பொடிந்து மறுபடியும் உருவற்ற நிலையில்தான் கலந்து விடுகின்றது. ஆகையால் ஜனனீ நீ என்னில் மூழ்கினால், நீயே நானாய்விடுவாய். இதுதான் ‘உன்’னின் மீட்சி. இதுதான் ‘உன்’னின் மீட்சி. மீட்சி” அந்தக் குரல் மறுபடியும் அவளுள் அடங்கியது, குழலின் நாதம்போல்.

 

ஜனனி பதினைந்து வருஷங்கள் சிட்சை விதிக்கப் பட்டாள். ஆனால் அவள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட வேண்டியவளா, சிட்சைக்கு அனுப்பப்பட வேண்டியவளா என்று சரியாய்த் தீர்மானிக்க முடியாமலே போயிற்று. வாயடைத்துப் போய்விட்டதால், கடைசிவரை மணவறையில், அவளுக்கும் அவள் கணவனுக்குமிடையில் என்னதான் நடந்ததென அறிய முடியாமல் போயிற்று. வைத்தியர்கள் அவளைப் பரீட்சை பண்ணிப் பார்த்து, மூளையில் ஏதோ அவளை அழுத்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள்.

 

ஜனனி, ஆஸ்பத்திரியிலும், சிறையிலுமாகக் காலத்தை மாறிமாறிக் கழித்தாள். ஆனால் எங்கும் அவளால் ஒருவருக்கும் இம்சை இல்லை. சாப்பாட்டை எதிரே வைத்தால் சாப்பிடுவாள். அவளுக்குப் பசிக்கிறது என்று யாராவது சொன்னால்தான் அவளுக்கே தெரியும். நன்னடத்தை காரணமாக, மூன்று வருஷச் சிட்சை ரத்தாயிற்று. ஆயினும் அவளுக்குப் போக்கிடம் இல்லாததால்- (அவளை வளர்த்த குடும்பம் பூண்டுகூடத் தெரியாமல் போய்விட்டது). ஆஸ்பத்திரியில்தான் இருந்தாள்.

 

இன்னமும் வெகுநாள் கழித்துத்தான் கொஞ்சம் கொஞ்சமாய், கொச்சை கொச்சையாய், பேச்சு வந்தது. முன் நினைவு சில சமயம் இருக்கும்; சில சமயம் இருக்காது. ஆகையால் பேச்சுக்களில் தொடர்பும் இருக்காது. “என்னில் இருக்கும் நான், உன்னில் இருக்கும் நான், நீ இல்லாத நான்! நீயே இல்லாத நீ–” என்று என்ன என்னவோ பிதற்றிக் கொண்டிருப்பாள்.

 

ஆனால் நெற்றிக் குங்குமத்தையும், தாலிச்சரட்டையும் ஒரு நாளும் அழிக்க மறுத்துவிட்டாள். “சரியாய்ப் போச்சு! பைத்தியங்களா, அவர் செத்துப் போனார் என்று யார் புரளி பண்றது? அவரில் இருந்த நீன்னா செத்தது! அவரில் இருக்கிற நான்தான் என்னிக்குமே இருக்கே! நான் அவரோடு தினம் பேசிக் கொம்மாளமடிச்சுண்டுதான் இருக்கேன். நான் நித்திய சுமங்கலி– எனக்கு அமங்கலமே கிடையாது.”

 

இப்படித் தனக்குத்தானே கையை நீட்டி நீட்டி மிகவும் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பாள். எப்போதும் சந்தோஷமாய்ச் சிரித்தவண்ணமே இருப்பாள்.

 

கடைசியில் விடுதலையானாள். உடம்பு தேவலையாயிற்று என்றல்ல; அவளால் இனி ஆபத்தில்லை, இம்சை பண்ணாத பைத்தியமென்று.

 

அவளுக்குச் சாப்பாட்டுக்கும் குறைவில்லை. ஏனெனில் அவளுக்குப் பிக்ஷையிட்ட வீடுகள் அனைத்தும் திடீரெனச் செழித்தன. அவள் கைநீட்டி வேண்டுமென்று கேட்டோ, அல்லது தானாகவோ ஏதாவது சாமானைப் பெற்ற கடைகளுக்கு அன்றைய வியாபாரம் வெகு மும்முரமாய் நடக்கும். ஆகையால் அவளுக்கு அன்னமிடவும், கேட்டதையும் கேளாததையும் கொடுக்கவும் நான் நான் என்று ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டனர். அவள் கையால் ஒருமுறை உடலைத் தடவினால் போதும்; தீராத நோய்கள், அவ்வுடலி லிருந்து பொட்டென உதிர்ந்து போகும்.

 

இருந்தாலும் பைத்தியம்-!

 

இப்படியே ஜனனி வெகுகாலம் தொண்டு கிழமாக ஜீவித்திருந்தாள். உடல் சுருங்கி, பல்லுதிர்ந்து தலை மயிர் வெண்பட்டாய் மின்ன.

 

அப்புறம் ஒருநாள் ஒரு மரத்தடியில் அவள் மத்தியான்ன வேளையில் படுத்துத் துங்கிக்கொண்டிருந்தாள். மத்தியான்னம் பிற்பகலாயிற்று. பிற்பகல் மாலையாயிற்று. மாலை இரவாயிற்று. இரவு காலையாயிற்று. காலை பகலாயிற்று. அவள் மூக்கிலும் வாயிலும் எறும்பும் ஈயும் தாராளமாய்ப் புகுந்து புறப்பட்டுக்கொண்டிருந்தன.

 

ஆனால் அவள் எழுந்திருக்கவே இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிநேகிதனேசிநேகிதனே

வணக்கம் தோழமைகளே, இந்த முறை எழுத்தாளர் உதயசகி அழகான  குறுநாவல் ஒன்றைத் தந்துள்ளார். மனதினுள் உருகி உருகி சரணைக் காதலிக்கும் மித்ரா அவன் தனது காதலைச் சொன்னபோது ஏன் மறுக்கிறாள்? நான்கு வருடங்களுக்குப் பின் தாய்நாடு திரும்பியவளுக்கு சரணின் கோபம் மட்டும்

கணினிக் காதல் – குறுநாவல்கணினிக் காதல் – குறுநாவல்

வணக்கம் பிரெண்ட்ஸ், எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது கணினிக் காதல் குறுநாவல் வழியாக உங்களை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=378257368 key=key-4jbNVBFy2ZsbKji6fjM2 mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா

யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’

வணக்கம் தோழமைகளே! எழுத்தாளர் யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’ முழு கதையின் பதிவு உங்களுக்காக. இத்தனை நாளும் தனது பதிவுகளின் மூலம் உங்களது மனதைக் கொள்ளை கொண்ட எழுத்தாளருக்கு ஓரிரு நிமிடங்கள் செலவழித்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே ! [googleapps domain=”drive”