Tamil Madhura சிறுகதைகள் ஒண்ணுமே புரியல உலகத்துல

ஒண்ணுமே புரியல உலகத்துல

Related image

ண்ணுமே புரியல உலகத்திலே…
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல உலகத்திலே…

நில்லுங்க நில்லுங்க வயசான கிழவி என்னமோ உளறுதுன்னு நினைச்சுகிட்டு பேஜை க்ளோஸ் பண்ணிட்டு போயிடாதிங்க. உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும். ஏன்னா இன்னைக்கு நான் எதிர்கொள்ளுற பிரச்சனைகளை நாளைக்கு நீங்களும் எதிர்கொள்ள நேரிடலாம்.

கொல்லைப்புற தோட்டத்துலே ஒரு வேப்ப மரமும்  அதுக்கு பக்கத்துல  ஒரு சிமிண்ட்டு பெஞ்சும் இருக்கும். அங்க உக்காந்திருங்க நான் வந்துடுறேன்.

அப்படியே அந்தப் பக்கம் என் பேரப் பிள்ளைகள் இருந்தா இழுத்து உக்கார வைங்க. அவங்களைக்  கண்ணுல பாத்தே கொள்ளை நாளாகுது. அவங்க ரெண்டு பேரும் என் மக வயத்து பேரப்பிள்ளைகள். பக்கத்துலதான் வீடு. தினமும் என்னைப்  பாக்க வந்துடுவாங்க.

ஒரு நிமிஷம்… நிறைய குழந்தைகள் விளையாடிட்டு இருக்குமே… நீங்க  கண்டுபிடிக்கிறது கஷ்டமாச்சே… நான் அடையாளம் சொல்லிடுறேன்.

பேத்தி பேரு  சீதா. மூணாவது படிக்கிறா. பாப் கட் முடி, குட்டையா பேண்ட்டு போட்டுருப்பா. ஒவ்வொரு இடத்துக்கும் குரங்கு குட்டியாட்டம் தாவுவா. அவளோட தம்பிதான் அஸ்வின். வாலுத்தனத்தில் அக்காவுக்கு கொஞ்சமும் சளைச்சவனில்லை. முன்னாடி ரெண்டு பல்லு இப்பத்தான் விழுந்துச்சு. ஓட்டப்பல்லுன்னு சொன்னா ஓடி ஓடி சண்டை போடுவான்.

ரெண்டும் ரெண்டு சந்தோஷ மூட்டைகள். அவங்களை பாக்குறவங்களுக்கே அவங்களோட துறுதுறுப்பு தொத்திக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம் அவங்க ரெண்டு பேரையும் இப்ப காணோம்… அதைவிட அதிர்ச்சியான விஷயம் என் பொண்ணே  அந்த மாதிரி குழந்தைகள் இல்லைன்னு சூடம் ஏத்தி சத்தியம் பண்ணுறா…

தலை சுத்துதா.. எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு. ஒருவேளை  வேற்று கிரகவாசிகள் யாராவது குழந்தைகளை எடுத்துட்டு அவர்கள் பத்தின நினைவை எல்லார் மனசிலிருந்தும்  அழிச்சுட்டாங் களோ….

ஏன் இப்படி சந்தேகப் படுறேன்னா  காணாம போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க யாரும் ஒரு முயற்சியும் எடுக்கல. நானும் கேட்டு கேட்டு அலுத்து போயிட்டேன்.நான் கேள்வி கேட்டு துளைக்கிறது பிடிக்காம என் பொண்ணு வீட்டுக்கு வர்றதையே நிறுத்திட்டா.

பேரப்பிள்ளைக காணாம போனது ஒரு பக்கம்னா  நான் பெத்த பொண்ணையும்  பார்க்காம  தவிச்சு போயிட்டேன். அவளுக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு பதறிப் போயி என் மகன்கிட்ட அவளைப் பத்தி விசாரிக்க சொன்னேன்.

அதுக்கு அந்தக் கடன்காரன் போட்டானே ஒரு குண்டு. அவன் எனக்கு ஒரே பிள்ளையாம். மகளே கிடையாதாம். அதுக்கு என் மருமகளும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுறா.

அவளுக்கு ஏற்கனவே என் நகையெல்லாம் மகளுக்கு கொடுத்துட்டேன்னு வயித்தெரிச்சல் எங்க வீட்டையும் கொடுத்துடுவேனோன்னு பயம். அதுக்காக எனக்கு மகளே இல்லைன்னு நெஞ்சறிய யாராவது பொய் சொல்லுவாங்களா…

என் மகளோட போட்டோ, அவ கல்யாண ஆல்பம் எல்லாம் மாடில இருக்குற ஷெல்ப்ல நான்தானே எடுத்து வச்சேன். இப்ப அந்த ஷெல்ப் எல்லாத்தையும் பூட்டு போட்டு போட்டிருக்காங்க. எல்லாரும் எப்படிப்பா கும்பலா தொலைவாங்க.

 

நான் வீட்டில்  என் மகளையும் பேரப்பிள்ளைகளை கண்டுபிடிக்கச்  சொல்லித் தொந்தரவு தர்றது பிடிக்காம டாக்டரைக்  கூப்பிட்டாங்க. வழக்கமா எனக்கு வைத்தியம் பாக்குற டாக்டர் கொஞ்சம் குண்டா, வழுக்கை தலையோட கண்ணாடி போட்டுட்டு இருப்பார். இந்த டாக்டர் என்னடான்னா இப்பத்தான் காலேஜ்ல இருந்து நேரா வந்தவன் மாதிரி இருக்கான்.

அவன்கிட்ட  எனக்கு வழக்கமா வைத்தியம் பாக்குற  டாக்டரைக்  கேட்டா, அவன்தான் வழக்கமா வர்ற டாக்டராம்.. எனக்கு என்னமோ நியாபக மறதி நோய்-ன்னு கதை விடுறான்.

நான் பதிலுக்கு ‘ஏண்டாப்பா என் மக, பேரன் பேத்தி, குண்டு டாக்டர் எல்லாரையும் துல்லியமா நினைவு வச்சிருக்கேன் எனக்குப் போயி நியாபக மறதின்னு சொல்லுறியா நல்லாருக்கா’ன்னு நாக்கைப் பிடிங்கிக்கிறாப்புல கேட்டேன்.

இங்க என்னமோ மர்மமா நடக்குது ஆனால் என்ன நடக்குதுன்னு எனக்குத்  தெரியல. எல்லார்கிட்டயும் கேட்டு பார்த்துட்டேன் ஆனால் பதில்தான் கிடைக்கல.

போன திங்கள் கிழமை என் மகன்கிட்ட இதைப்பத்தி தெளிவா  பேசிடலாம்னு தேடினேன். ஆனால் எனக்கு குழந்தைகளே இல்லையாம். அப்படின்னு அதோ அங்க இருக்குற அந்தம்மா சொல்லுது.

ஆக  இப்ப மகனும் தொலைஞ்சு போயிட்டான். எப்படி என்னை சுத்தி இருக்குறவங்க ஒவ்வொருத்தரும் காணாமல் போறாங்கன்னு நினைச்சு நினைச்சு என் தலையே வலிக்குது.

உங்ககிட்ட எதுக்கு இத்தனை கதையையும் சொல்லிட்டு இருக்கேன் தெரியுமா… எனக்கு மட்டும் யாராவது ஹெல்ப் பண்ணா தொலைஞ்ச எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா கண்டுபிடிச்சுடுவேன். நீங்க உதவுவீங்களா… ப்ளீஸ்….

நன்றி நன்றி  இவ்வளவு சீக்கிரம்  ஹெல்ப் பண்ண ஒத்துக்குவீங்கன்னு நான் நினைச்சே பார்க்கல. அப்பாடா… எல்லாரையும் மறுபடியும் பார்த்துடலாம்னு ஒரு நம்பிக்கை வந்துடுச்சு.

இன்னொரு விஷயம் ஆட்களோட சேர்த்து ரெண்டு நாளைக்கு முன்னாடி தொலைஞ்சு போன என் நிழலையும் கண்டுபிடிக்கணும்.

21 thoughts on “ஒண்ணுமே புரியல உலகத்துல”

  1. நினைவுகளைத் தொலைத்தல் …நான் பழகிய சிலரை இப்படிக் கண்டிருக்கிறேன்…வாசிக்கையில் கண்கள் கலங்கிட்டு மது…யார் கண்டா நம் வயோதிபம் எப்படியோ…இப்படித்தான் நினைத்துக்கொண்டேன்..

    இன்னும் இன்னும் அருமையாக உங்கள் சிறுகதைப் பயணம் தொடரட்டும் மது.

  2. Nice short story Tamil.
    Oh my God .
    Living in very old age without any such health issues is really a God’s gift .
    Really romba paavam . Felt very sad .

  3. Worse than this happens with Alzheimer patients. One of my colleagues mother is in a home with medical care.

    Last year she refused to accept my colleague as her daughter, saying she has a son only. Whereas my colleague is her only daughter, only child. One day she hit her head on the mirror saying the person(her own reflection) tried to harm her.

    Some days she remembers her name, other days she imagines herself as one of her childhood fairy tales characters…

    Yes, we don’t / can’t understand the world of such people…

    Well done Tamil!!

  4. Please take below comment as a joke – not to hurt you!

    தமிழ் மதுரா: குற்றமா! என்ன குற்றம் கண்டீர் என் கதையில்? கதையோட்டத்திலா? அல்லது கதைக்கருவிலா?

    நான்: கதைக்கருவில் குற்றமில்லை! இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம்! கதையோட்டத்தில் தான் குற்றம்!

    த. ம.: என்ன குற்றம் கண்டீர்?

    நான்: முதலில் நீங்கள் கதையின் தொடக்கத்தில் மனோரமாவின் படத்தை போட்ட காரணம் என்னவோ?

    த. ம.: அது ஆச்சி / வயதானவள் என்கிற அடையாளத்தை காட்டுவதற்கு!

    நான்: பேரன் பேத்தியை காணவில்லை என்று தொடங்கிவிட்டு கடைசியில் அவரது நிழலைக் கூட காணவில்லை என்று எழுதியது…?

    த. ம.: ஹா……. புரியவில்லை! வயதானவள்! மூளையின் சிந்தனைத் திறன், நினைவுத் திறன், ஞாபகத் திறன் அனைத்தும் குறைந்து வரும் காரணத்தால் இதைக் காணோம் அதைக் காணோம் என்று புலம்புவது போல எழுதியிருக்கிறேன்!

    நான்: ஒருக்காலும் இருக்க முடியாது! அல்சைமர், டிமென்ஷியா அல்லது அம்னீஷியா போன்ற ஏதேனும் ஒரு வியாதி இருந்தாலே ஒழிய வயதாகிவிட்டது என்ற ஒரு காரணத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சினைகள் உருவாகாது!

    த. ம.: எழுபது எண்பது வயது ஆனவர்களுக்கும்?

    நான்: தொண்ணூறு வயதானாலும் அதே விதி தான்!

    த. ம.: வி.பி.ஆர்.! என்னை நன்றாகக் பார்! நான் எழுதிய சிறுகதை குற்றமா?

    நான்: நீரே தமிழ் மதுராவாக ஆகுக! மேலும் மேலும் பல பல சிறுகதைகள் எழுதி வாழ்த்துக்களும் வரவேற்புக்களும் பெறுக! “ஆனாலும் ஒண்ணுமே புரியல” என்று தலைப்பு வைத்துவிட்டு ஏதாவது புரிந்த மாதிரி என்னால் கருத்துக் பதிவு கொடுக்க முடியாது. நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே!

    ஷப்பா – இப்படிலாம் குழப்பமா கதை படிச்சா எப்படி கண்ணை கட்டுது!

    1. OMG, VPR !!! You are YOU – so unique ! Unga comments – those are somewhere way up in a level of their own ! Eppadithaan indha madhiri ungalala yosikka mudiyudho ! AWESOME, VPR !

      (Naan Tamil-oda lead-i follow panni ‘onnume puriyale ulagathile’nnu paadittu irundha, neenga ‘netri kannai thirandhalum’ ku poyitteenga ! Asathureenga, VPR!)

      Tamil – idhai vida vera angeegaram enna vendum, unga siru kadhaikku? Eppadiyellam engalai yosikka vachirukkeenga, parunga !

    2. நன்றி விபிஆர்.

      என்னை சொக்கநாதன் அளவுக்கு கொண்டு வந்துட்டிங்க.

      அமிழ்தினும் இனிய தமிழ் மொழியின்பாலும், அதை எழுதிப் பழகும் தமிழ்மதுராவின் மீதும் நீங்கள் கொண்டுள்ள அக்கறையின் பாலும் குற்றத்தை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

      இந்தக் கதையின் கனத்தைக் குறைக்க நான் கடைசியில் ஒரு வரி சேர்த்தேன். ஆனால் உங்க கமெண்ட்ஸ் படித்ததும் மனசே லேசாகிவிடும்.

      // நீரே தமிழ் மதுராவாக ஆகுக! மேலும் மேலும் பல பல சிறுகதைகள் எழுதி வாழ்த்துக்களும் வரவேற்புக்களும் பெறுக! // — ஆயிரமாயிரம் நன்றிகள் விபிஆர்.

    3. ஹா ஹா
      நக்கீரரே
      நீர் வாழ்க
      நின் குலம் வாழ்க
      இவ்வாரே கருத்துக்கள் பதிந்து எம்மை திருப்தி படுத்துக

  5. Paathi comment-la oditten, sorry.

    Your narration of the woman’s thoughts are so realistic, Tamil, that I got hooked with the way she describes her grand children. Ange hook aanathu thaan, got so involved with what she was saying, that at the end, I had to stay ‘onnume puriyala’… It took a second to sink in!!! Very intriguingly narrated, Tamil!!

  6. Hi Tamil,
    Nijamave onnume puriyala… Abstract art -nu oru blotch of colors pottu maatiyirukka oru painting paarkurappo eppadi unarveno, exactly the same feeling… Onnume puriyala…

    So, title-I justify panniteenga, Tamil 😊

    1. நன்றி சிவா… சமீபத்தில் கேள்விப்பட்ட டிமென்ஷியா பத்தின ஒரு சம்பவம்தான் இந்தக் கதையை எழுதத் தூண்டியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாயி பிரியதர்ஷினியின் ‘மழையின் காதலி’ – சிறுகதைசாயி பிரியதர்ஷினியின் ‘மழையின் காதலி’ – சிறுகதை

மழை… எவ்ளோ அழகான ஒரு விஷயம் மழை ஆண்பாலா பெண்பாலா.. தெரியவில்லை எப்படி வேண்டுமாணாலும் வைத்துக் கொள்ளலாம்.. என்னுடைய முதல் காதலன்.. இவன் தான்.. இந்த மழை தான்.   *** அணைத்துக்கொள்ளும் ஆறுதல் சொல்லும் சாரலாய் வீசும் சங்கீதம் பேசும்

வல்லிக்கண்ணன் கதைகள் – ஊரும் ஒருத்தியும்வல்லிக்கண்ணன் கதைகள் – ஊரும் ஒருத்தியும்

திருமணமாகி வந்த நாள் முதலே ரஞ்சிதத்துக்குக் கணவன் ஊரைப் பிடிக்கவில்லை. இது என்ன ஊரு இது பட்டிக்காட்டுப் பயஊரு. இதுவும் ஒரு ஊரா” என்று பழிப்பது அவளுக்கு வழக்கமாக அமைந்துவிட்டது. ரஞ்சிதம் டவுனில் பிறந்து வளர்ந்தவள். எட்டாம் வகுப்பு வரை அங்கே

ராகுலன் : திரிவேணிராகுலன் : திரிவேணி

ராகுலன்  –  திரிவேணி (கன்னடக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் ராகுலன் முதலில் எங்கள் வீட்டுக்கு வந்த போது சிறு குட்டியாகத் தான் இருந்தது. என் பாட்டி சுத்தம் பற்றி அலட்டிக் கொள்கிறவள்; அழுக்குப் படிவது பற்றி தீவிரக் கருத்துகள் உடையவள்.